Skip to main content

வைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்! சோழர் காலக் கண்டுபிடிப்பு!

Published on 13/01/2019 | Edited on 13/01/2019
kgf

 

 

 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள் காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண் தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பல லட்சம் டன் தங்க மண் எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் திருடா திருடி படத்தின் ‘மன்மத ராசா’ பாடல் படமாக்கப்பட்டது. 
 

கோலார் தங்க வயலான கே.ஜி.எஃப். பற்றி சமீபத்தில் படம்கூட வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80% தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு. 
 

kgf


 

 

பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா? இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன. அதேபோல், அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான். இந்தக் குறியீடுகளின் கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றனர். 
 

நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின. தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில் நிறுத்தப்பட்டுவிட்டது. 
 

சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு. ஒருவேளை இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல் இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம். அதனால், தமிழர்களுக்கு அங்கு வேலை கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை. 
 

-ஜெ.கிஷோர்குமார்