தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் அனைத்திலும் கிராமசபை கூட்டம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த கிராமங்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் அறியவும் ஜனவரி 9 முதல் கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் திமுகவினர் என்னதான் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள் என்று விசாரித்தோம்.
மகளிர் அணி தலைவி ஒருவர் இதுகுறித்து நம்மிடம் கூறியதை பட்டியலிட்டிருக்கிறோம்.
உங்கள் ஊராட்சியில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க கிராமசபை கூட்டம் எந்த வகையில் உதவுகிறது என்று மக்களுக்கு விளக்குவதே இந்த கூட்டங்களின் நோக்கம். பெரும்பாலான கிராமங்களில் கிராமசபை கூட்டம் என்றால் என்ன? அதன் பயன் என்ன என்பதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் கூட்டத்தின் மூலம் விளக்கம் அளிக்கிறோம் என்றவர், விழிப்புணர்வு ஊட்டும் கேள்விகளையும், பயன்களையும், மக்கள் செய்ய வேண்டிய விஷயங்களையும் தெரிவித்தார்.
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன?
நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றும் சபையே கிராம சபை.
கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம்!
கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம்!
சட்டசபை, நாடாளுமன்றங்களுக்கு இணையான வலிமை கிராமசபைக்கும் உண்டு. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுப்பினர்கள் . கிராம சபையில் மக்களே உறுப்பினர்கள் மற்றும் நீதிபதிகள். இங்கு முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது. இவ்வளவு அதிகாரமுள்ள கிராமசபைகள் முடங்கிக் கிடக்கின்றன. நீங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டாம். தேவைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி விட்டு, அரசு அதிகாரிகளைச் செய்யச் சொல்லுங்கள். அதிகாரம் மக்களுக்கே!
1.சனநாயக திருவிழாவை சனவரி-26 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும்.
2.பஞ்சாயத்து தலைவராக்க நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள்.
3.அரசியல் ஆசை உள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வரச் சொல்லுங்கள்.
4. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களை கிராமசபை கூட்டத்துக்கு வரச் சொல்லுங்கள்.
5. முன்னாள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களை கிராமசபை கூட்டத்துக்கு வரச் சொல்லுங்கள்.
6. சனவரி-26 கிராமசபை கூட்டத்துக்கு வருபவருக்கு மட்டும் பின்னாளில் ஓட்டு போடுங்கள்.
7. ஜனவரி -26, நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராமசபை கூட்டத்துக்கு வராதவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.
8.ஊராட்சி நிர்வாகிகளின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
9.மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் கிராமசபை கூட்டம்.
10.கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும்.
11. 50 நபருக்கு குறைவாக இருந்தால் கிராமசபை கூட்டத்தை நிறுத்துங்கள்
12.கிராமசபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள் .
13.ஓட்டுப்போடுவதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது கிராமசபை .
14.கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருங்கள்.
15.பேருந்துவசதி குறித்து சனவரி-26 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள்.
16.இலவச வீடு வேண்டுவோர் கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
17. கிராமசபை உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள்.
18. கிராமசபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
19. சனவரி 26, கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
20. சனவரி-26, கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
21. கடந்த கிராம சபைக்கு பின்பு உள்ள செலவு விபரங்களை இந்த கிராமசபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும்?
22. !! சனவரி-26 !! கிராமசபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.
23.உங்களின் வரிப்பணத்தை, கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க சனவரி -26 கிராமசபைக்கு வாருங்கள்.
24.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம்.
25.கிராமசபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம்.
26. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள்.
27. கிராமங்களில் அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள்.
28. மரத்த நடுறோம், மரத்த நடுறோம்னு ஆயிரகணக்கான மரத்தை நட்டு இலட்சக்கணக்கான ரூ வீணடித்த மரங்களெல்லாம் எங்கே? விவாதிக்கலாம் வாருங்கள்?
29.கிராமசபை கூட்டத்தில் போய் உட்காருவது! நமது கடமை.
30. நல்ல பணித்தட பொறுப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம்.
31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் கிராமசபை .
32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள். மழை நீர் சேகரிப்பை மேம்படுத்த தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
33. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள்.
34. ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்திலும் வழங்கும் கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள். ஏற்கனவே கிராம சேவை மையம் கட்டப்பட்டு இருந்தால் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.
ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது
கிராமங்கள் முன்னேறாமல் இருக்க MP,MLA மட்டும் காரணமில்லை
கிராமங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களும் இளைஞர்களும் கூட காரணம் தான்.
உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தபடுகிறதா?
என்னென்ன பணிகள் நடைபெற்றன?
தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்புங்கள்
உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பதும் ஒரு முக்கிய சட்ட பிரிவு. அது மிகவும் வலிமையானது.
இனியாவது விழித்துக் கொள்வோம்!
இவ்வாறு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கிராம சபைக் கூட்டங்களில் திமுகவினர் பேசுகிறார்கள். இத்தகைய பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள்.