Skip to main content

விவசாயிகள் ஒன்றுகூடினால் கைது! - வடஇந்திய தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திருவண்ணாமலை போலீஸ்!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

சேலம்-சென்னை இடையிலான எட்டுவழிச் சாலை புதியதாக அமைக்கப்படுவதால் அதிகம் பாதிப்படைவது திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள்தான். இந்த மக்களுக்காக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராடிவருகின்றன. அந்த வரிசையில் அகில இந்திய ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திரா யாதவ், ஒடிசா மாநில விவசாய சங்க தலைவர் லிங்கராஜ், ஹரியானா மாநில விவசாய சங்கத்தை சேர்ந்த திலீப்சிங், தமிழ்நாடு விவசாய சங்கதலைவர் பாலகிருஷ்ணன், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு அமைப்பின் நிர்வாகி அருள் ஆகியோர், திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சி.நம்மியந்தல் என்கிற கிராமத்தில் சந்திக்க முடிவுசெய்து செப்டம்பர் 8-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தனர்.

 

protest-against-8wayroadprotest-against-8wayroad



காலை 11 மணிக்கு செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார், "விவசாயிகளை சந்திக்கக்கூடாது' எனச்சொல்லி 5 தலைவர்களையும் தடுத்து நிறுத்தி மண்டபத்தில் கொண்டுபோய் அடைத்தனர். இது அகில இந்திய தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. "என்ன காரணத்துக்காக கைது செய்றீங்க?' என கேட்க... போலீஸ் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதுபற்றி யோகேந்திரா யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்ய, அகில இந்திய அளவில் பரபரப்பானது.

இவர்கள் மட்டுமல்லாமல் செங்கம் டூ புதுப்பாளையம், காஞ்சி என இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், பேருந்தில் சென்றவர்களில் சந்தேகத்துக்கு உரியவர்கள் என வலுக்கட்டாயமாக பிடித்து "நீ போராட்டம் செய்யப்போற' என கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் என்ன விளக்கம் சொல்லியும் போலீஸ் கேட்டுக்கொள்ளவில்லை. இப்படி அராஜகமாக 32 பேரை கைது செய்தது. அதில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி. அகில இந்தியத் தலைவர்களின் மீதான கைது நடவடிக்கையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கைவிட்டார்.

அதன்பின் மதியம் 2 மணிக்கு மேல் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, "செப்டம்பர் 1 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு, நடைபயணம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விவசாயிகளை சந்திக்க முயன்றீர்கள் அதனால் கைது செய்துள்ளோம்' என்கிற நோட்டீஸ் தந்தார். "நீங்கள் சொல்லும் சட்டப் பிரிவு எங்களை கட்டுப்படுத்தாது, நீங்கள் கைது செய்துகொள்ளுங்கள், இந்த சட்டப்பிரிவை நான் நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்கிறேன்' என்றார். மாலை போலீஸார் விடுவித்ததும் இரவு 7 மணியளவில் மீண்டும் விவசாயிகளை சந்திக்க பயணமாகினர். மீண்டும் அவர்களை கைது செய்தது. "நீங்க விவசாயிகளை சந்திக்கமாட்டோம்னு சொன்னா, நாங்க விடுவிக்கறோம், இல்லைன்னா ஜெயில்தான்' என போலீஸ் மிரட்டியது. "சிறைக்கு செல்ல நாங்கள் ரெடி' என அவர் உறுதியாக கூறியதும், போலீஸ் அதிகாரிகள் சமாதானம் பேசத் துவங்கினர். அதன்பின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், மண்டபத்தில் வைத்து விவசாயிகளை சந்திக்க ஒப்புதல் அளித்தது.

protest-against-8wayroad



அதன்பின் நடந்தவற்றை எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அருள் நம்மிடம், ""விவசாயிகளை சந்திக்கவரும் தகவல் தெரிந்து போலீஸ் எங்களை வழியிலேயே கைது செய்தது. அதோடு, விவசாயிகள் 34 பேரை கைது செய்தது. 6 மணி நேரமாக கைது செய்ததற்கான எந்த காரணத்தையும் கூறவில்லை. அதன்பின் காரணத்தைக் கூறினார்கள், தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரவு 7 மணிக்கு இரண்டாவது முறையாக கைது செய்தவர்கள், "நாங்கள் சொல்கிறபடி நடந்துகொள்ளுங்கள்' என கட்டுப்பாடுகள் விதித்தார்கள்.

சட்டத்துக்குப் புறம்பான அந்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் "ஒரு இடத்தில் மக்களை சந்தியுங்கள்' என கேட்டுக்கொண்டதால் செப்டம்பர் 9-ந் தேதி பாதிக்கப்படும் விவசாயிகள், அவர்களது குடும்ப பெண்கள் போன்றோர் வந்து தங்களது கருத்துகளைக் கூறினார்கள். இதனைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார்கள். பின்னர் தர்மபுரி சென்றபோது, அங்கும் போலீஸ் கட்டுப்பாடு இருந்தும் ஒரு இடத்தில் மட்டும் விவசாயிகளை சந்தித்தோம். சேலத்துக்குள் நுழைந்ததுமே 1 கி.மீ தூரத்துக்கு ஒரு ஜீப் என போலீஸ் ஜீப் எங்கள் வாகனத்தைப் பின்தொடர்ந்து விவசாயிகளை சந்திக்க முடியாமல் தடுத்தது'' என்றார்.

""இந்த திட்டம் முழுக்க முழுக்க தனியாருக்கானது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதும் தனியார்தான். அரசாங்கத்துக்காக நிலம் கையகப்படுத்துகிறது எனச்சொல்வதே பொய்'' என செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார் யோகேந்திர யாதவ்.

பாதிக்கப்படும் விவசாயிகளின் சார்பாக தேசிய அளவில் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.