தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது எல்காட் நிறுவனம். அரசின் இலவச மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தருவதும் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள எல்காட் தான். இதில் பல்வேறு பதவிகளுக்காக தகுதியானவர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக டெல்லி வரை புகார்கள் பறந்துள்ளன. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளால் அதிர்ந்து போயிருக்கிறது எல்காட் நிறுவனம்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான எல்காட்டின் நிர்வாக இயக்குநராக இருக்கும் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., அடுத்தமாதம் ஓய்வு பெறவிருக்கிறார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, எல்காட்டில் பல்வேறு பணியிடங்களை நிரப்பிவிட்டு செல்வது என அண்மையில் முடிவெடுத்த அவர், ப்ரைவேட் செக்ரட்டரி, ட்ரைவர், அட்டெண்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 17-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதுதவிர மேனேஜர், டெபுடி மேனேஜர் பணியிடங்களும் நிரப்பப்படவிருக்கிறது.
எல்காட் நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்களை நிரந்தரப்படுத்தவும், அவர்களின் உறவுகளை உள்ளே கொண்டு வருவதும்தான் இதன் நோக்கம். பணியிடத்தின் தன்மைக்கேற்ப 15 முதல் 30 லட்சம் வரை பேரங்கள் நடந்து வருகின்றன. மேற்படி பேரங்களை நடத்தி முடிக்க, எல்காட்டில் பணி நீட்டிப்பில் இருக்கும் ஒரு மேலாளர், ஓய்வுபெற்ற பிறகு ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் 2 துணைநிலை மேலாளர்கள் மற்றும் ஒரு பெண் துணை மேலாளர் ஆகிய 4 பேர் மீடியேட்டர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பொதுவாக, குரூப் -3 சர்வீஸ் தொடங்கி அதற்கு மேலான பணியிடங்களுக்கு டி.என்.பி. எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், எல்காட்டில் தற்போது இத்தகைய பணியிடங்களுக்கான தகுதியானவர்களை எல்காட் அதிகாரிகளே ஒரு இண்டர்வியூ மாதிரி நடத்தி பணம் கொடுத்தவர்களை நேரடியாக தேர்வுசெய்ய துணிந்துள்ளனர். எல்காட்டில் எந்தெந்த பணியிடங்கள் காலியாக இருக்கிறது என வெளிப்படையாக தெரிவிப்பதே இல்லை.
கடந்த பிப்ரவரியில் மேனேஜர், டெபுடி மேனேஜர் (ஃபைனான்ஸ், அக்கவுண்ட்ஸ்), டெபுடி மேனேஜர்(லீகல்) பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் அறிவிப்பு வெளியிடாமல் எல்காட் நிறுவனமே அறிவிப்பு செய்தது. இதற்கான நபர்களையும் மறைமுகமாக தேர்வு செய்துள்ளனர். ரகசிய பேரங்களில் இழுபறி இருப்பதால் நியமன அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறது எல்காட். இப்படி நிறைய தில்லுமுல்லுகள் எல்காட்டில் தலைவிரித்தாடுகின்றன'' என்கின்றனர் தகவல் தொழில்நுட்ப துறையினர்.
இப்படிப்பட்ட சூழலில், செப்டம்பர் 17-ந்தேதியை கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வினை திடீரென தற்போது தள்ளிவைத்துள்ளது எல்காட் நிறுவனம். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, "அறிவிக்கப்பட்ட எல்காட் பணியிடங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்த புகார்கள் மத்திய-மாநில அரசுகளுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் பறந்துள்ளன. அதனடிப்படையில் உயரதிகாரிகள் நடத்திய விசாரணைகளும் உத்தரவுகளுமே இந்த நியமனங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக தள்ளிப்போட வைத்திருக்கிறது. இதற்கிடையே, அடுத்த மாதம் ஓய்வு பெற விருக்கும் விஜயகுமார், தனக்கு பணி நீட்டிப்பு வேண்டி சில முயற்சிகளையும் எடுத்துள்ளார். தவிர, அவருக்கு நெருக்கமான பணி நீட்டிப்பிலிருக்கும் மேலாளரை ஒப்பந்த அடிப்படையில் கன்சல்டண்டாக நியமிக்கும் திட்டமும் போடப்படுகிறது'' என்று விவரிக்கிறார்கள்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எல்காட் எம்.டி.விஜயகுமாரிடம் நாம் பேசியபோது, "எல்காட் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் என்பதால் பணி நியமனங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு சம்மந்தமில்லை. கம்பெனி சட்டப்படி இயங்குவதால் எல்காட் பணியிடங்களுக்கான தகுதியானவர்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்ய முடியாது. செய்யவும்கூடாது. எல்காட் என்பது அட்டானமஸ் பாடி என்பதால் அரசுகூட தலையிடவும் முடியாது. எல்காட்டிற்கான பணியிடங்களை எல்காட் நிறுவனமே முறையாக இண்டர்வியூ நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதனடிப்படையில்தான் தற்போது சில பணியிடங்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்ததால் இண்டர்வியூ நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிர்வாக சிக்கல்கள் இருப்பதை உணர்ந்து தேர்வு செய்வதை தள்ளி வைத்திருக்கிறோம். தங்களுக்கு வேலை கிடைக்காது என்கிற ஆத்திரத்தில் எனக்கு எதிராக ஜனாதிபதி தொடங்கி முதலமைச்சர்வரை மொட்டை கடிதங்களைப் புகார்களாக அனுப்பி வைக்கவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது'' என்கிறார் விஜயகுமார்.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, "அரசு சார்ந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலமே நிரப்பவேண்டும் என நீதிமன்ற உத்தரவே உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது (2016) மேனேஜர், டெபுடி மேனேஜர் பதவிகளுக்காக 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் மூன்று விதமான தேர்வுகள் நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை எல்காட்டின் வெப்-சைட்டிலேயே பதிவும் செய்திருக்கிறார்கள்'' என்கிறார்கள் விபரமறிந்த அதிகாரிகள்.