Skip to main content

நம்முடைய இன அடையாளத்தை எந்த குஜராத்தியும் கேள்விகேட்க முடியாது - திருமுருகன் காந்தி பேச்சு!

Published on 11/02/2020 | Edited on 12/02/2020

நாடு முழுவதும் சிஏஏ தொடர்பான வாத பிரதிவாதங்கள் எழுந்து வரும் நிலையில் இதுதொடர்பான எதிர்ப்பு கூட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் அத்தகைய கூட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புக்களை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மத்திய அரசை எதிர்த்து கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இந்த குடியுரிமை சட்டத்தை ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக மாற்றப்பார்க்கிறார்கள். உண்மையில் நிலைமை அப்படியல்ல. இது இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்குமானது. ஆனால் தற்போது இஸ்லாமியர்கள் போராட வந்திருக்கிறார்கள். எனவே மற்ற அனைத்து மதத்தினருக்கும் எதிரானதாகவே இந்த சட்டம் அமைந்திருக்கிறது. எனவே ஒட்டுமொத்த மக்களும் இதை எதிர்த்து போராட வேண்டும். ஆனால் தற்போது இஸ்லாமிய சகோதரர்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து மக்களும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். நமக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், கல்வியுரிமை முதலியவற்றை குடியுரிமை மறுக்கிறது என்றால் அதுதான் மனுதர்ம ஆட்சி. அதற்குத்தான் இவர்கள் இத்தகைய சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அதற்கு எதிராகத்தான் நாமும் களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு கொடுத்துள்ளார்கள், வருடாவருடம் கல்விக்கான செலவீனங்களும், விவசாயத்திற்கான செலவும் அதிகரிக்கும் நிலையில் அதற்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தை குறைத்துள்ளார்கள். இதுதான் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு செய்கின்ற காரியமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஏன் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மேடைகளில் பேசுகிறார்கள். பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க வீட்டில் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுகிறார். 
 

jk



பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் எல்லாம் ஏன் படிக்க வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள். நீட் தேர்வை கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு உள்ள நோக்கம் எல்லாம் இங்கே இருப்பவர்கள் எல்லாம் படிக்க கூடாது என்று மனு தர்மம் சொல்வதை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த மனுதர்மத்தின் பிடியில் இருந்து வெளியேறியவர்கள் இஸ்லாமியர்கள். இந்த சாதி இழிவிலிருந்து இஸ்லாமியர்கள் முதலில் வெளியேறினார்கள். அதனால் தான் இஸ்லாமியர்கள் மீதான வன்மம் அவர்களுக்கு இன்றும் இருந்து வருகின்றது. இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் யார், சாதிய ரீதியான வன்மத்தை துடைதெறிந்துவிட்டு வாழ்பவர்கள் தானே? இந்த இழிவை மீண்டும் நம்மீது திணிக்க பார்க்கிறார்கள். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க விடக்கூடாது. நாம் தமிழர்களாக ஒன்றுதிரண்டு நிற்கும் வரை எந்த இந்துத்துவ வாதியும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. தமிழர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். இதே ஜல்லிகட்டு போராட்டம் கடற்கரையில் நடைபெற்ற போது இதே இஸ்லாமியர்கள் தானே நமக்கு மூன்று வேலை உணவு கொடுத்தார்கள். ஜல்லிக்கட்டு காளையை நேரில் கூட பார்க்காத பெருங்கூட்டம் தானே இங்கே திரண்டது.  இங்கே வந்தவர்கள் எல்லாம் ஜல்லிகட்டு போட்டியில் விளையாடியவர்களா என்றால் இல்லை. தமிழன் அடையாளத்தில் ஒன்றுதிரண்டவர்கள். தமிழன் என்ற அடையாளத்திலேயே இந்த குடியுரிமை போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இந்தியன் என்ற அடையாளம் 70 ஆண்டுகளாக நம்மீது இருக்கின்ற அடையாளம், ஆனால், தமிழன் என்ற அடையாளம் 5000 ஆண்டுகளாக நம்மீது இருக்கின்ற அடையாளம். இது நம்முடைய இன அடையாளம். அதை அந்த குஜராத்தியும் கேள்வி கேட்டுவிட முடியாது. உங்களுடைய பண்பாடும் எங்களுடைய பண்பாடும் வேறுவேறு. நீயும் நானும் வேறு. நமக்குள் எந்த இன ஒற்றுமையும் இல்லை. எனவே எங்கள் சகோதரனின் வாழ்வை குடியுரிமையை வேறுயாரும் நிர்ணயிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.