மதுரையில் இருந்து நம்மைப் பதட்டத்தோடு தொடர்புகொண்ட ஒரு ஆண் குரல்... "சார் எங்க செல்ல மகன் நவீன் பாரதியைக் கொன்னவய்ங்க, இப்ப என் மனைவியையும் கொன்னுடுவாய்ங்க போலருக்கு சார். அவள் அந்த சம்பவங்களை நினைச்சே மனநோயாளி மாதிரி ஆய்ட்டா. எங்க மகனிடம் பேசுவது போலவே டைரியில் உருகி உருகி எழுதித் தள்ளிக்கிட்டே இருக்கா...'' என்று அழ ஆரம்பித்தது.
ஆசுவாசப்படுத்திவிட்டு அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான இளங்கோவனைத் தேடிச் சென்றோம். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தபோது, "மதுரை மகாத்மா பள்ளியில் படித்து வந்த எங்க மகன் பாரதி, 2018 செப்டம்பர் 8ஆம் தேதி, ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வந்ததும், திடீர்ன்னு தூக்கு போட்டுக்கிட்டு செத்துட்டான். அதுக்குக் காரணம் அவன் படித்த பள்ளியில் நடந்த சில சம்பவங்கள்தான். தன் செல்போனில் இருந்து அவனது பள்ளி நண்பனுக்கு நாளைக்கு பள்ளி விடுமுறைடான்னு ஒரு மெசேஜ் அனுபியிருக்கான். அதை அந்த மாணவன் பள்ளி ஆசிரியருக்கு பார்வேர்டு செய்ய, இவன் சிறிது நேரத்தில், தான் அனுப்பிய மெஸேஜை அழிச்சிட்டு, அவனிடம் டேய் சும்மா சொன்னேன்டான்னு சொல்லியிருக்கான். அந்த மாணவன் அந்த மெசெஜை அதே பள்ளியில் இருக்கும் ஒரு ஆசிரியைக்கு அனுப்பியிருக்கான்.
இந்த நிலையில், அடுத்தநாள் அந்த மெசெஜ் விசயத்தை பெரிசாக்கி, பள்ளி பிரேயர் நேரத்தில் அனைத்து மாணவ மாணவிகள் மத்தியிலும் வைத்து எங்க மகனைக் கண்டித்து, அதற்கு மன்னிப்பும் கேட்க வச்சிருக்காங்க. மறுநாள் பேரண்ட்சோட வரணும்னு சொன்னதால் நான் 2 மணி நேரம் தாமதமாக அந்த ஸ்கூலுக்குப் போனேன். அப்ப அவன் கண்கள் சிவந்து இருந்தது. ‘என்னடா?'ன்னு கேட்டேன். அவன் ‘ஓ...'ன்னு அழுதான். ‘சரிடா, நீ செய்தது தப்புதானே..விடு'ன்னு சொன்னேன். அப்ப அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுபா மேடம், "உங்க பையனை சஸ்பெண்ட் செய்திருக் கோம். வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க”ன்னு என்னோட அனுப்பி வச்சாங்க. அவனை வீட்ல விட்டு விட்டு நான் வேலைக்குச் சென்று விட்டேன். என மனைவி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்வதால், அவரும் சென்றுவிட்டார். அதன்பின் இருவரும் வேலைவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தா, உள்ளே எங்க பாரதி தூக்கில் தொங்கிக்கிட்டு இருந்தான்'' என்று அழுதவர், மேலும் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார்.
அதுக்குப் பிறகு போலீஸ் வந்தது. பையனோட பள்ளி பேக்கை எடுத்து, அதில் அவன் எதாவது எழுதி இருக்கானான்னு பார்க்கும் போது, அதில் அவன் தன் ஹோம் ஒர்க் நோட்டில், “அம்மா என்னை மன்னித்துவிடு. என்னை அந்த லெட்சுமி டீச்சர் கேவலமா திட்டி, எல்லா மாணவிகள் முன்னாடியும் அடித்துவிட்டார். எனக்கு அசிங்கமாக இருக்கிறது. இனி எப்படி அங்கு போவேன் என்று தெரியவில்லை... என்னை மன்னித்துவிடு” என்று எழுதியிருந்தான். இதை மற்றவர்கள் பார்த்துவிட்டு எங்களிடம் சொன்னார்கள். ஆனால் போலீஸார் அவன் ஸ்கூல் பேக்கை அப்படியே எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. அது குறித்து நாங்கள் பலமுறை கேட்டும் அப்போது சம்பவத்தை விசாரித்த டி.எஸ்.பியும், ஆய்வாளரும், ‘எல்லா ஆதாரத்தையும் வழக்கில் ஃபைல் பண்ணவேண்டும். அந்த பள்ளியையும் சம்பந்தப்பட்டவர்களையும் சும்மா விடமாட்டோம்'னு சொன்னார்கள்.
பள்ளியில் அவனைக் கடுமையாகத் திட்டி, அவமானப்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். பள்ளியின் சி.சி.டி.வி. புட்டேஜை பார்த்தாலே அவனுக்கு நேர்ந்த கொடுமை தெரியும். எங்க மகனின் சாவுக்கு நீதி கேட்டு அனைத்துக் கதவுகளையும் தட்டினோம். முதலில் சி.பி.சி.ஐ.டி விசாரணை போட்டார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், தேசிய சைல்ட் ஹெல்ப் லைனுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் ராமச்சந்திரன் என்பவர் தலைமையில் விசாரணை செய்தார்கள். கடைசிவரை எதுவுமே நடக்கலை.
சம்பவம் நடந்த நேரத்தில் ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் கலைகதிரவன் எங்களிடம் வந்து, அந்தப் பள்ளி தாளாளரிடம் பேசி, ஏதாவது ஒரு பெரும் தொகை வாங்கித் தரட்டுமான்னு கேட்டார். நாங்க ஒத்துக்கலை. இப்ப, பள்ளிக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் போலீஸே அழிச்சிடுச்சி” என்றார் கவலையாய்.
அடுத்து, தங்கள் மகன் மரணத்தால் தன் மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கியவர், “எங்க மகனை இழந்த சோகத்தை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியலை. என் மனைவி அவன் தூங்கிய கட்டிலைவிட்டு வெளியே வரமறுக்கிறாள். அவன் உடுத்திய துணிமணிகளை தினமும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள். அவன் பெயரையே டைரியில் எழுதிக்கிட்டே இருக்கிறாள். அவ நிலையைப் பாருங்க..” என்றபடி தன் மனைவி தேவியைக் காட்டினார்.
அவரிடம், நம்மை அறிமுகப்படுத்தி, "நக்கீரன் காதுக்கு செய்தி போயிடிச்சி. நீ இனி தைரியமா இரு. நம்ம பாரதி மரணத்துக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்'' என்று சொன்னார்.
நம்மைக் கண்ட தேவி, "எங்க மகனை அவங்க கொன்னுட்டாங்க. பள்ளி நிர்வாகத்துக்கு எல்லோரும் விலை போயிட்டாங்க. பொள்ளாச்சி விவகாரத்திலும் கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்திலும் நீதிக்காகக் குரல் கொடுத்த நக்கீரன், எங்க பாரதி மரணத்துக்கும் நீதி வாங்கித் தரணும். நீதி இனியும் கிடைக்காட்டி குடும்பத்தோட சாவதைத் தவிர வேற வழியில்லை..” என்று கண்ணீருடன் பகீரூட்டினார்.
இந்த விவகாரம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் ராமச்சந்திரனிடம் நாம் கேட்டபோது “சம்பவம் நடந்து 5 வருடம் ஆகிவிட்டது. அப்போது கொரோனா நேரம் என்பதால் சரியா விசாரணை நடக்கலை'' என்றபடி தொலைபேசியை வைத்துவிட்டார்.
இந்த விவகாரத்தில் சட்ட முயற்சிகளை மேற்கொண்டவரான வழக்கறிஞர் பகத்சிங்கிடம் பேசினோம். அவரோ, "காவல்துறையைப் பற்றி உங்களுக்கு தெரியுமே சார். அந்த பள்ளிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைக் கொண்டது. அப்போது அ.தி.மு.க. ஆட்சி வேறு. அந்த பள்ளிக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தது. அதனால் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டார்கள். எந்த ஆதாரத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதி அந்தரத்தில் தொங்குகிறது'' என்றார் ஆதங்கமாய்.
மாணவன் நவீன்பாரதியின் மரணத்துக்கு நீதி கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.