நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.
இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.
கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.