Skip to main content

பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா வைத்த சஞ்சீவியின் பின்னணி...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
sd


குக்கிராமத்தை சேர்ந்த பெண்களோ, கிராமமோ, டவுனோ அல்லது அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பெண்களோ சென்னையில் தனக்கு சொந்தக்காரர்கள் இல்லையென்றாலும் இங்கு வேலை கிடைத்தால் தங்குவதற்கு பயம் இன்றி வருவதற்கு காரணம், சென்னை முழுவதும் இருக்கின்ற ஹாஸ்டல் வசதிகள்தான். அம்பத்தூராக இருந்தாலும் சரி....கேளம்பாக்கமாக இருந்தாலும் சரி... பெரிய நிறுவனங்கள் இருந்தால் அந்த பகுதியை சுற்றி வரும் கடைகளை போன்று  பிஜி களும், ஹாஸ்டல்களும் வந்துவிடுகின்றன.  இதில் பெண்களுக்கான ஹாஸ்டல்கள் அதிகமாகவே உள்ளன. 


இந்நிலையில்,  சென்னை ஆதம்பாக்கத்திலுள்ள தில்லைநகர் 4வது தெருவில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து, அதை பெண்கள் ஹாஸ்டலாக மாற்றியிருக்கிறார் திருச்சியை சேர்ந்த சஞ்சீவி. இவர் ஹாஸ்டலில் தங்கும் பெண்களை படம் பிடிப்பதற்காக ரகசிய கேமராக்களை அறைகள் முழுவதும் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹாஸ்டலை தொடங்கி 15 நாட்களே ஆவதாக சொல்லப்படுகிறது. 
 

ஹாஸ்டலை தொடங்கியது முதலே எதாவது அறையில் சரி செய்யப்போவதாக கூறிகொண்டு சஞ்சீவ் அடிக்கடி ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் அறைக்குள் வந்திருக்கிறார். அறையில் தங்கியிருந்த சில பெண்களுக்கு, சஞ்சீவ் அடிக்கடி வருவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒருவேளை ரகசிய கேமராக்கள் இருக்குமோ என்ற அச்சத்தில், மொபைலில் ரகசிய கேமராக்களை காட்டும் செயலியை பதிவிறக்கம் செய்து ரகசிய கேமரா நம் அறையில் இருக்கிறதா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஆய்வு செய்தபோது ரகசிய கேமராக்கள் அந்த அறைகளில் இருப்பதாக காட்டியிருக்கிறது. உடனடியாக ஆதம்பாக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
 

இதன் பின்னர் ஹாஸ்டலில் நடந்த சோதனையில், பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. தாம்பரத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த சஞ்சீவை போலிஸார் விரைந்து சென்று கைது செய்துள்ளனர். போலிஸார் நடத்திய விசாரணையில், சஞ்சீவி திருச்சியை சேர்ந்தவர் என்பதும். அங்கு கட்டிடங்கள் கட்டித்தரும் பில்டர் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் எந்த எந்த இடங்களில் ரகசிய கேமராக்கள் வைப்பது போன்ற விஷயங்களை தெரிந்துவைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், திருச்சியில் இதே போன்று ஆறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்து, தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். பின்னர், திருச்சியில் ஹாஸ்டல் தொடங்கியதை போன்று ஆதம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து தொடங்கியுள்ளார்.
 

சென்னையில் புற்றீசலை போன்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஹாஸ்டல்கள் உள்ளது. ஆனால், அதில் சராசரியாக நூறு ஹாஸ்டல்கள்தான் அரசாங்க உரிமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சீவி நடத்திய ஹாஸ்டலில் கேமாரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மற்ற ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களுக்கு பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தற்போத் பெரியளவில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உரிமம் பெறாமல் நடத்தும் ஹாஸ்டல் அனைத்தும் உரிமம் பெற வேண்டும். அதற்கு பின் உரிமம் இல்லாமல் ஹாஸ்டல்களை நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.