நக்கீரன் செய்திக்கு முன் பேனரில் போலி டாக்டர்கள் தம்பதி கே.எஸ். சுப்பையா - தமிழரசி பெயருக்கு பக்கத்தில் பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேத பட்டம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் இணையதள செய்திக்குப் பிறகு மாநாடு கட்-அவுட்டில் திருச்சி கேஸ்.எஸ். சுப்பையா- தமிழரசி போலி டாக்டர் தம்பதியின் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பி.ஏ.எம்.எஸ். ஆயுர்வேத பட்டப்படிப்பு மட்டும் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.
போலி டாக்டர் கேஸ்.எஸ். சுப்பையா
தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் ‘போலி மருத்துவர்கள்’ அதுவும்… அமைச்சர், எம்.பி., தலைமையில் கூடி மாநாடு நடத்தவிருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது என்றும் இன்று (6-12- 2018) காலை 9 மணிக்கு சென்னை தி.நகர் ஆர்.கே. சாலை, அலமேலு மங்கா திருமணமண்டபத்தில் மாநாட்டிற்கு தலைமைதாங்கி ‘போலி டாக்டர்களை’ ஒருங்கிணைக்கும் கே.எஸ். சுப்பையா மற்றும் அவரது மனைவி எஸ். தமிழரசி இருவருமே போலி டாக்டர்கள்தான் என்றும் நேற்று நக்கீரன் இணையதளத்தில்... போலி டாக்டர் சுப்பையாவின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களுடன் பிரத்யேக செய்தி வெளிியிட்ட்டு அம்பலப்படுத்தியிருந்தோம். அதன், லிங்க்...
https://nakkheeran.in/special-articles/special-article/fake-doctors-shocking-report-nakkheeran-exclusive
இதுகுறித்து, போலி டாக்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி எம்.பி. குமார் ஆகியோர் கவனத்துக்கு கொண்டுசென்றோம். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸிடமும் புகார் தெரிவித்தோம். அவரது, அதிரடி உத்தரவின் பேரில் டி.எம்.எஸ். இயக்குனர் ருக்மணி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், 'தமிழ்நாடு இந்திய மருத்துவ கவுன்சில் ' பதிவாளர் ராஜசேகர், உளவுபிரிவு போலீஸார் உள்ளிட்டோர், போலி டாக்டர் தம்பதிகளான சுப்பையா- தமிழரசியிடம் விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
போலி டாக்டர்கள் மாநாடு என்பதால் அமைச்சர் ஜெயக்குமாரும் எம்.பி. குமாரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டனர். தென்னிந்திய திரையுலகமே ஒன்று திரண்ட மாபெரும் நட்சத்திர கலைவிழா என்பதுபோல..தமிழகத்தின் ஒட்டுமொத்த போலி டாக்டர்களும் ஒன்றுதிரண்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆளுங்கட்சி புள்ளிகளின் ஆதரவு இருப்பதால் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று கையை பிசைந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "எங்களை டாக்டர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்து அதிரவைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம், டாக்டர்கள் பட்டியலில் சேர்க்கமுடியாது. நீங்கள் யாரும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ஒரே இடத்தில் கூடிய போலி டாக்டர்களை அதிரடியாக கைதுசெய்யவேண்டிய காவல்துறையும் சுகாதாரத்துறையும் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும், கல்யாண மண்டப வாசலில் வைக்கப்பட்ட கட்- அவுட்டில் சுப்பையா- தமிழரசி பெயர்களுக்கு பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பி.ஏ.எம்.எம்.எஸ். என்ற ஆயுர்வேத டாக்டர் பட்டம் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.
மனோசௌந்தர்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்