Skip to main content

ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கு ஆனா இதிலெல்லாம் உடன்பாடு இல்லை.. -  த.வெ.க தலைவர் கறார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
There is faith in astrology but there is no agreement in all this.. - T.V.K

‘தமிழக வெற்றி கழகம்' எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் பெயரிலிருந்த இலக்கணப் பிழையை சரி செய்ததோடு கட்சியின் கட்டமைப்பை விரிவாக்குதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் என அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார். இதற்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொளியில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.

‘சட்டமன்றத் தேர்தல்தான் (2026) தனது இலக்கு' என சொல்லி நாடாளுமன்றத் தேர்தலின் போதே (2024) தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார் விஜய். கட்சியின் பெயரை முறைப்படி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார். கட்சியின் பெயரில், வெற்றி கழகம் என்பதற்கிடையே ‘க்’ வரவேண்டும்; ‘க்’ இல்லாமல் இருப்பது மாபெரும் இலக்கணப் பிழை என வாதிட்டனர் தமிழறிஞர்கள்.

தமிழ் இலக்கணத்தில் வல்லின ஒற்று (மெய்யெழுத்து) மிகுதல், மிகாமல் இருத்தல் என இரண்டு விதிகள் உண்டு. அந்த வகையில், வெற்றி என்பது நிலைமொழி, கழகம் என்பது வருமொழி. வெற்றி எனும் சொல்லின் கடைசி எழுத்து இகர ஈற்றாக இருந்து, வரும் மொழியில் வல்லின எழுத்து இருந்தால் அந்த எழுத்தின் ஒற்று மிகும் என்பது புணர்ச்சி இலக்கணம்.

அதன்படி வெற்றி என்பதில் கடைசி எழுத்தான றி (ற்+இ)-யில் இ எனும் உயிர் எழுத்து கடைசியில் (ஈற்று) இருக்கும் நிலையில், வரும் மொழியான கழகத்தின் முதல் எழுத்து வல்-னமாக (க, ச, ட, த, ப, ற ) இருக்கிறது. இகர ஈற்றைத் தொடர்ந்து வல்லின எழுத்தான க வரும் மொழியாக வருவதால் அந்த வல்லின எழுத்தின் ஒற்றான (க=க்+அ) க் (மெய்யெழுத்து) தோன்றும் (மிகும்). அதனால், வெற்றிக் கழகம் என்பதே இலக்கணப் பிழையின்றி மிகச் சரியானது.

ஜோதிடம், ஜாதகம் என்பதில் நம்பிக்கை கொண்ட விஜய், இலக்கணப்பிழை இருப்பதையறிந்து மிகவும் கோபப்பட்டிருக்கிறார். ஜோதிடர்களிடம் அவர் விசாரணை நடத்திய போது, ”நியூமராலஜிப்படி "க்' வரக்கூடாது. அதனால் "க்' தேவையில்லை’என்று எதையெதையோ சொல்லி வாதிட்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

இதனை ஏற்க மறுத்ததுடன், "ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதுதான்; அதற்காக கண்மூடித்தனமாக நம்பி இலக்கணப் பிழையோடு கட்சிப் பெயர் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிழையைச் சரி செய்ய வேண்டும்'' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழறிஞர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மாற்றினால், அதுவே ஒரு விமர்சனமாக உங்களுக்கு எதிராகத் திரும்பும் என ஜோதிடர்கள் சொல்ல, “அது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. தவறு என தெரிந்தால் அதனை திருத்திக் கொள்வதுதான் சரி. அதற்காக எந்த விமர்சனம் வந்தாலும் எதிர் கொள்ளலாம்” என்றதோடு, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம், “கட்சியின் பெயரில் இனி எந்த அறிவிப்பு வெளிவந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் என இலக்கணப்பிழையின்றிதான் வரவேண்டும்” என்று உத்தரவிட்டார் விஜய்.

தற்போது கட்சியின் பெயரிலிருந்த இலக்கணப்பிழை சரி செய்யப்பட்டு, "தமிழக வெற்றிக் கழகம்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கண்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை பனையூரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீடியோ கான்ஃபரன்சில் விரிவான ஆலோசனை நடத்தினார் விஜய்.

இதுகுறித்து விசாரித்தபோது, “விஜய் மக்கள் இயக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே 10 லட்சத்தைத் தாண்டும். தற்போது அரசியல் கட்சியை விஜய் தொடங்கியிருப்பதால், மக்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களை அப்படியே கட்சியின் உறுப்பினர்களாக மாற்றுவதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம். மக்கள் இயக்கத்தினரை கட்சியின் உறுப்பினர்களாக மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் அரசியல் கட்சி உறுப்பினர்களாக இணைவதற்கு சம்மதமா எனக்கேட்டு அவர்களின் ஒப்புதலுடன் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் போதுமானது. கட்சியில் அவர்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளலாம்.

இதுதவிர, ஏற்கெனவே மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்தவர்கள், அரசியல் கட்சி தொடங்கியதும் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் என நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களை முறைப்படி கட்சி உறுப்பினர்களாக இணைக்கவும் ஆலோசனை நடந்தது. மேலும், கட்சியை வலிமைப்படுத்த அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கழகங்களை அமைத்தல், கட்சியின் துணை அமைப்புகளாக அணிகள் பிரித்தல், இவைகளுக்கான பதவிகளை உருவாக்குதல், அதில் தகுதியானவர்களை நியமித்தல் என விவாதிக்கப்பட்டது.

கட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், மாநில நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக நிர்வாகிகள் வரை பதவிகளில் யாரை அமர்த்துவது என்பதுதான் புதிய பிரச்சனை. அதாவது, மக்கள் இயக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பொறுப்பாளர்கள் பதவிகளில் இருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருக்கும் கட்சியில் பதவி கொடுத்துவிட முடியாது. ஏன்னா, அரசியல் கட்சியில் அத்தனை பதவிகளை உருவாக்க முடியாது. மக்கள் இயக்கத்தில் பதவிகளில் இருந்தவர்கள் எல்லோரும், அரசியல் கட்சியிலும் பதவியை எதிர்பார்ப்பது இயல்பானது. ஆனால், கொடுப்பதற்கு பதவிகள் இருக்காது. இதனை சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மக்களாட்சி, மதச் சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, சம உரிமை உள்ளிட்ட சமத்துவ கொள்கை கொண்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன” என்கிறார்கள் மக்கள் இயக்கத்தினர்.

இப்படியாக சீரியஸ் மோடில் தமிழக வெற்றிக் கழத்தின் அரசியல் பணிகள் நடைபெற்று வர, வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரு மாநாடு நடத்தலாமா என்றும், அப்படி மாநாடு நடத்தினால் அதனை மதுரையில் நடத்தலாம் என்றும் விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

-சஞ்சய்