இன்று தேங்காய் சீனிவாசனின் நினைவு நாள். 1970, 1980களிலும் அதற்கு பிறகும் ஒரு தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். கல்மணம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். இவரின் நடிப்பைப் பார்த்த ‘டணால்’ தங்கவேலு என அழைக்கப்பட்ட கே.ஏ. தங்கவேலு இனி சீனிவாசனை ‘தேங்காய்’ சீனிவாசன் என்றுதான் நாம் அனைவரும் அழைக்கவேண்டும் எனக் கூறினார். இவ்வாறுதான் அவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற பெயர் வந்தது.
முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோரின் நடிப்பில் 1972ம் ஆண்டு வெளியான படம்தான் காசேதான் கடவுளடா. ஏற்கனவே நாடக வடிவில் மெகா ஹிட் அடித்திருந்தது இந்த நாடகம். அதை திரைப்படமாக மாற்ற எண்ணிய ஏ.வி.எம். ஸ்டுடியோ அந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவை ஏற்றுக்கொண்டது. அந்தப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான சாமியார் கதாபாத்திரத்தில் நாகேஸ் உட்பட அனைவரும் விரும்பினர். நாகேஸ் அன்பு கட்டளையிட்டே சென்றுவிட்டார், இந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பேன் என்று. ஆனால் இந்த வாய்ப்பு தேங்காய் சீனிவாசனிடமே சென்றது. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அனைவரையும் குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்துவிட்டார்.
படம் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. முக்கியமாக தேங்காய் சீனிவாசன் நடிப்பு மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சென்னை ராயப்பேட்டையிலிருந்த பைலட் திரையரங்கில் ஆங்கில படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் காசேதான் கடவுளடா படம் பைலட் திரையரங்கில் திரையிடப்பட்டது. சென்னை தமிழில் பேசும் அந்த அப்பாசாமி ‘சாமியார்’ கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்திருந்தது. அனைவரும் அதை கொண்டாடினர். இதனால் இரவோடு இரவாக ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் பதினாறு அடி நீளத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் அவுட் வைத்தார். இதைப்பார்த்த தேங்காய் சீனிவாசன் ஆனந்த கண்ணீர் வடித்தார். உடனே இயக்குனர் கோபுவை வந்து சந்தித்து மனம் மகிழ்ந்து கண்ணீர் விட்டார்.
அந்த படத்தின் கதாநாயகனான முத்துராமன், இயக்குனர் கோபுவிடம், கோபமாக ஆனால் மரியாதையுடன் என்ன சார் அந்த படத்தின் கதாநாயகன் எனக்கு கட் அவுட் வைக்காமல், காமெடியனுக்கு வச்சிருக்கிங்களே, நாம் இத்தனை படங்கள் சேர்ந்து வொர்க் பண்ணியும் இப்படி பண்ணிடிங்களே எனக்கேட்டு, பின் கலங்கினார். இயக்குனர் கோபு நடந்ததைக் கூறினார். அதன்பின் முத்துராமனும் அதை ஏற்றுக்கொண்டார்.