மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுக சட்டமன்ற தொகுதியில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் வைரமுத்து, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் வைரமுத்து பேசியதாவது; எல்லாவற்றிலும் சிறந்த தானம் அது செய்தி தானமும், அறிவு தானமும் தான். அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு. அதனால் பத்திரிகை நண்பர்கள் அனைவரும் நான் சொல்லக்கூடிய செய்தியை மற்றவர்களுக்கு பகிர வேண்டும். தமிழர்கள் நன்றியுள்ள கூட்டமா இல்லையா என்று தமிழர்களை சோதிப்பதற்கு காலம் கலைஞரின் நூற்றாண்டை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னை தானே செதுக்கி, பல்வேறு வசைப்பாடுகளைத் தாங்கி, தியாகம் செய்து இந்த தமிழ் மண்ணுக்கு அர்ப்பணித்து சென்றிருக்கிறார் கலைஞர். அப்படிப்பட்டவருக்கு தமிழர்களாகிய நாம் என்ன நன்றி காட்டப் போகிறோம்.
கலைஞர் இயல்பாகவே கருணை மிக்கவர். அதற்கு சான்றாக கலைஞர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது அரசு ஊழியர்கள் இறந்தால் இரக்கத் தொகையாக 10,000 ரூபாய் அவர்களது குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். இதைப் பற்றி கலைஞர், அரசு அதிகாரிகளிடம் பேசும் போது ஒரு அதிகாரி அந்த திட்டத்தை தடுக்கும் முயற்சியில் இந்த தொகை அதிகமாக தோன்றுகிறது என்று கூறுகிறார். அதற்கு இந்த 10,000 ரூபாய் இறந்த குடும்பத்துக்கு அதிகம் இல்லை என்று கலைஞர் கூறுகிறார். மேலும் இந்த தொகை இயல்பாக இறந்தவர்களுக்கு மட்டும் தானா? தற்கொலை செய்தவருக்கும் சேர்த்தா என்று அதிகாரி கேட்கிறார். அதற்கு கலைஞர் சற்றும் யோசிக்காமல் இந்த தொகை இறந்தவர்களின் குடும்பத்துக்கு தானே தவிர இறந்தவர்களுக்கு கிடையாது. அவர் எப்படி இறந்தாலும் அனாதையாக இருப்பது அவரது குடும்பம் தான். அதனால் தற்கொலை செய்தவருக்கும் சேர்த்து தான் இந்த 10,000 ரூபாய் என்று கூறுகிறார். இப்படி கருணையுள்ளம் கொண்ட கலைஞரை பற்றி தான் நீங்கள் மற்றவர்களுக்கு பகிரக்கூடிய செய்தியாக இருக்க வேண்டும்” என்றார்.