ஆன்லைன் வர்த்தக உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெப் பெசோஸ் மற்றும் மக்கின்சி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக இருவரும் விவாகரத்துக்கு கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவாகரத்திற்காக ஜெப் பெசோஸ் தனது சொத்தில் இருந்து 32 பில்லியன் டாலர்கள் ஜீவனாம்சமாக தந்துள்ளார். இந்த தொகையானது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 2.5 லட்சம் கோடி ஆகும்.
அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பான 136 பில்லியனில் 68 பில்லியன் வரை அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக கிடைக்கும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவரது மனைவி மக்கின்சி தனக்கு 25 சதவீதம் மட்டும் போதும் எனவும், மேலும் தனது பெயரில் இருக்கும் வேறு சில நிறுவனங்களில் பங்குகளையும் ஜெப் பெஸோசுக்கு தருவதாகவும் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தொடக்கத்திலும், வளர்ச்சியிலும் மக்கின்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2.5 லட்சம் கோடி ரூபாய் கிடைத்ததன் மூலம் ஒரே நாளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பெண் பணக்காரராக மாறியுள்ளார் மக்கின்சி. அதே போல மனைவிக்கு இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தும் ஜெப் பெசோஸ் தான் இன்னும் உலகின் மிக பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஜீவனாம்சம்தான் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்த விவாகரத்தை போலவே உலகளவில் வேறு எந்த விவாகரத்திற்கு பில்லியன் கணக்கில் ஜீவனாம்சன் கிடைத்திருக்கிறது என்பதை பார்ப்போம்...
டிமிட்ரி-எலினா ஜோடி
ரஸ்ஸியாவைச் சேர்ந்த கோடிஸ்வரர், உர வியாபாரத்தின் ராஜா என்று அழைக்கப்படும் டிமிட்ரி என்பவர் தனது மனைவி எலினாவை விவாகரத்து செய்தார். பின்னர், எலினா சுவிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆறு வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாக பெற்றார். ஜெப் பெசோஸ் ஜீவனாம்சனௌக்கு முன்புவரை இதுதான் வரலாற்றின் மிகப்பெரிய ஜீவனாம்சன் தொகையாக இருந்துள்ளது. எவ்வளவு தொகை தெரியுமா? 4.5 பில்லியன் டாலர்கள். இந்திய 31,191 கோடி ஆகும்.
ஜோஸ்லின்-அலெக் ஜோடி
நியூ யார்க்கை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோஸ்லின் என்பவர் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பெயர் எடுத்தவர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரர் மற்றும் ஆர்ட் டீலரான அலெக்கை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்ததன் மூலம் இவருக்கு கிடைத்த ஜீவனாம்சன் எவ்வளவு தெரியுமா 2.5 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 17,315 கோடி ஆகும். இது மட்டுமல்லாமல் அடுத்த 13 வருடங்களுக்கு வருடா வருடம் 100 மில்லியன் டாலர் தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாம். அப்படி என்றால் வருடா வருடம் அவருக்கு இந்திய மதிப்பில் 690 கோடி கொடுக்க வேண்டும்.
பெர்னி-ஸ்லெவிகா ஜோடி
மிகப்பெரிய கார் ரேஸ் நிறுவனத்தின் செயலதிகாரியாக இருந்த பெர்னி தனது மாடல் மனைவியான ஸ்லெவிகாவை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்து நடைபெறும்போது வரலாற்றின் விவாகரத்திற்கு கிடைக்கப்பட்ட மிகப்பெரிய ஜீவனாம்சனாக இருந்துள்ளது. இவருக்கு ஜீவனாம்சனாக கிடைத்த தொகை சரியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், செய்திகளில் உள்ள தகவலின்படி 1 - 1.2 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 6,923 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.
ஸ்டீவ்-எலைனி ஜோடி
ஸ்டீவ் என்பவர் கேஸினோ என்னும் சூதாட்ட கிளப்பை நடத்தி வந்தார். இவர் மீது எக்கச்சக்கமான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் எலைன் என்பவர் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். 1963-1986 முதல் முறையும் 1991-2010 இரண்டாவது முறையும் ஸ்டீவ், எலைனியை திருமணம் செய்துகொண்டார். பின்னர், இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் இவருடைய மனைவி விவாகரத்து செய்து ஜீவனாம்சன் கோரினார். எவ்வளவு ஜீவனாம்சன் கொடுத்தார்கள் என்பது சரியான தகவலாக வெளியிடவில்லை என்றாலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஸ்டீவ் தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கடைசிவரை மறுத்துவிட்டார்.
ஹரோல்ட் அன்-ஸு அன் ஜோடி
ஹரோல்ட் ஹம், மிகப்பெரிய கோடிஸ்வர ஆயில் மேக்னட் தன்னுடைய முன்னாள் மனைவி ஸு அன்னை விவாகரத்து செய்ததற்கு ஜீவனாம்சனாக 975 மில்லியன் டாலர் கொடுத்திருக்கிறார். இந்திய மதிப்பில் 6,740 கோடி இருக்கும்.