Skip to main content

வெறுப்பும், நெருப்பும்! மு.தமிமுன் அன்சாரி MLA  கவிதை

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

 

mjk


 

இறைவா...
பூவுலகின் தலைவா...

விண்ணுக்கும், மண்ணுக்கும்
இடையில்,
கண்ணுக்கு தெரியாத
ஒரு கிரிமியோடு,
நாங்கள் 
மூன்றாவது உலகப் போரை
நடத்திக் கொண்டிருக்கிறோம் !


*
இது விசிறிக்கும்
வியர்க்கின்ற கோடை காலம்!
கூடவே
'கொரணா' காலம் !

*
அரசர்களுக்கும், அதிபர்களுக்கும்,
பிரதமர்களுக்கும் கலக்கம் !

வல்லரசுகளுக்கு நடுக்கம் !

சாதனைகள் எல்லாம்
சோதனைகளாக்கப்பட்டுள்ளன.

ஆட்டம் போட்டவர்கள்
எல்லாம் அடங்கி கிடக்கிறார்கள்

*
ஆனாலும்
என் தேசம் எனும் 
பூங்காவனத்தில்
அமைதி புறாக்கள்
சிறகொடிந்து கிடக்கின்றன.
 

கொத்துக் கொத்தாய்
மனித உயிர்கள்
மாண்டுப் போகும் நிலையிலும்
 

மதங்கொண்ட
யானைகள் மட்டும்
மோதிக் கொண்டிருக்கின்றன.
 

பிணம் திண்ணும்
கழுகுகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன.


*
சிலர்
வெறுப்பை விழுங்கி
நெருப்பை கக்குகிறார்கள்.
 

இதயங்களை
கிழிக்கிறார்கள்.
 

உறவுகளை பிரிக்கிறார்கள்.
 

*
சங்கரின் அடையாளம்
சகிப்புத் தன்மை!

சலீமின் அடையாளம்
சமாதானம்!

சைமனின் அடையாளம்
மன்னிப்பு!


இப்போது 
சங்கரும், சலீமும், 
சைமனும் 
கைக்கோர்த்த வீதிகளில்
கருநாகங்கள்
படை எடுப்பது
பதை பதைக்கிறது!
 

*

இறைவா...
சமயங்களில்
நெறிகளை படைத்தாயே...
சில சமயங்களில்
இவர்கள்
வெறியோடு அலைவதை
தடுப்பாயா?
 

'கொரணா' காலத்திலும்
'கொரில்லா'க்களைப் போல
தாக்கிக் கொள்கிறார்களே..
இது நியாயம்தானா?
 

*
அவர்களை இவர்களும்
இவர்களை அவர்களும்
சுட்டிக்காட்டி
சண்டைகளை போடுகிறார்கள்

 

mjk

சமரசம் செய்பவர்களை
விரட்டுகிறார்கள்.
 

சமூகத்தின் 'கணையங்களாக'
இருக்க வேண்டிய
இணைய தளங்களில்
சமாதிகளை கட்டுகிறார்கள்.

பதிலுக்கு பதில்
பழி தீர்க்கிறார்கள்.

அமைதிக்கு வேட்டு!
நட்புக்கு பூட்டு?


இறைவா...

மனிதர்களுக்கு
பேசும் கிளிகளும்
கூவும் குயில்களும்
ஆடும் மயில்களும்
வாழும் 
நந்தவனங்களை 
காட்டு...
 


அன்பையும், 
சகிப்புத்தன்மையையும்
சிந்திக்கும்
சகோதரர்களை தா...
 

கண்ணீரை துடைத்து
கட்டியணைக்கும்
நண்பர்களை தா...

 

அமைதிப் பூக்களை
ஏந்தி வரும்
உறவுகளை தா...

மாசற்றுப் பழகும்
நியாயவான்களை தா...

*
இறைவா....


நல்லிணக்க நதியில்
நீந்த விரும்பும் என்னை
சுழற்சியின் சுழியில் சிக்கி
மூழ்கடித்து விடாதே...


*

மனப் புழுக்கத்தில்
உருளும் எனக்கு
ஆறுதலை தா...

*

 

இறைவா...
உன்னிடம் மன்றாடி
கேட்கிறேன்...
 

என் கனவுகளை
விழிகளிலேயே
சிறை வைத்து விடாதே...
 

இது என் நலத்துக்கான
பிரார்த்தனை அல்ல...
நான் வாழும் நிலத்துக்கான
பிரார்த்தனை!

 

 

 

சார்ந்த செய்திகள்