தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலேயே குடமுழுக்கை நடத்துங்கள் என்று போராட வேண்டிய நிலையில் தமிழக மக்கள் இருப்பது தன்னிரக்கத்திற்கு உரியதாகும். வடமொழிப் பண்டிதர்கள் சமஸ்கிருதத்தைக் கொண்டாடினால் தவறில்லை. ஆனால், தமிழையே பேசி, தமிழ் மண்ணின் விளைவுகளையே உண்டு, தமிழ்க் காற்றையே சுவாசித்து உயிர்வாழ்கிற நம்மவர்களே, வடமொழியான சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கை நடத்த வேண்டும் என்று கூனல் குரல்கொடுப்பது அவமானத்திற்குரியது.
கோயிலுக்கு வராதவர்களுக்கு கோயிலைப்பற்றிய கவலை எதற்கு? கோயிலுக்குள் என்ன நடந்தால்தான் உங்களுக்கு என்ன? என்று சிலர் கேட்கிறார்கள்? அரசுத் துறையான, அறநிலையத் துறையின் கீழ் கோயில்கள் வந்த பிறகு, அவற்றைக் குறித்துக் கேள்வி எழுப்பவும் அங்கு நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இது எங்கள் இடம். அங்கே நாங்கள் தமிழை ஓரம்கட்டுவோம். அவமதிப்போம். இதில் உங்களுக்கென்ன வந்தது? என்று அடாவடிக்குரல் எழுப்பினால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
ஆகம விதிப்படி கோயில் கட்டப்பட்டதால் ஆகம விதிப்படிதான் குடமுழுக்கை நடத்தவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். எத்தனை குருக்கள்கள் ஆகம விதிப்படி வாழ்கிறார்கள் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரம் தேவநாத குருக்கள் ஒருவர் போதாதா? ஆன்மீக போதகர் நித்தியின் ஆன்மீக வாழ்க்கையில் லட்சணம் தமிழகத்துக்குத் தெரியாதா? வடமொழி வேதங்களில் குடமுழுக்கு குறித்த குறிப்புகள் இல்லை என்று, ‘அவர்களே’ சொல்கிறார்கள். நீரை அடிப்படையாகக் கொண்டு வழிபடுவதுதான் தமிழர் வழிபாடு. ஆரிய வழிபாடோ நெருப்பை முதன்மையாகக் கொண்டது.
இந்தக் குடமுழுக்கே ஆதித் தமிழர்களின் நடுகல் வழிபாட்டில் இருந்து வந்த மரபுதான். ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர’- என்கிறது தொல்காப்பிய நூற்பா. சிறந்த கல்லைத் கல்லைத் தேர்ந்தெடுத்து, அதை நீராட்டி வணங்குவது தமிழரின் மரபு. இதில் இருந்து உருவானதே குடமுழுக்கு. அப்படி இருக்க குடமுழுக்கில் தமிழ் கூடாது என்பது திமிர் நோயின் உச்சமாகும்.
வடமொழிக் குடமுழுக்குக்கு வக்காலத்து வாங்கும் ஒரு தமிழ்க் கவிஞர் ‘ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அது ஆழமான ஆன்மீக அறிவியல்’ என்று எவ்வித ஆதாரமும் இன்றி அவிழ்த்துவிடுகிறார். அவர் பாணியிலேயே சொல்வதானால், இந்த உலகத்தையும் மனிதர்களையும் இறைவன்தான் படைத்தான் என்றால், தமிழையும் அவன்தான் படைத்தான் என்பதை ஏற்பதில் இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தயக்கம்?‘
பெரியபுராணம் பாட சேக்கிழாருக்கு ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’என்று இறைவனே அடியெடுத்துக் கொடுத்தான் என்று பக்தி நெறி பேசுகிறவர்களுக்குக் கூட, அவனே தமிழில்தான் அடி எடுத்துக் கொடுத்தான் என்ற செய்தி உறைக்கவில்லையே.
‘இறைவன் என்னை நன்றாய்ப் படைத்தான் தன்னை நன்றாய்த் தமிழ்செய்யுமாறு’- என்ற திருமூலரின் நெகிழ்வை உணர்வதற்கு தமிழ் மூளையும் தமிழுணர்வும் வேண்டும்.
ஆனால் பலருக்கு இவை இல்லை.‘திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியை புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்’- என்றும் அந்தக் கவிஞர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதன்மூலம் அவர், தன் விக்கிரகத்துக்கான சக்தியைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கூட கடவுளுக்கு இல்லை என்கிறார். வடமொழிப் பண்டிதர்கள் சமஸ்கிருத: மந்திரம் ஓதித்தான் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாம். கடவுளுக்கே சக்தி தருவது அவர்களும் வடமொழியும்தான் என்கிறார்களே, இப்படி நாத்திகர்களால் கூட ஆண்டவனை அவமானப்படுத்த முடியாது.
குடமுழுக்குக் கோபுரத்தின் மீது தமிழ்மொழி வரக்கூடாது என்று சொல்லும் ஆகம தாசர்கள், தமிழர்கள் யாரும் கோயில்களுக்குள் வராதீர்கள். சமஸ்கிருதப் பண்டிதர்கள் மட்டும் கோயிலுக்கு வந்தால் போதும் என்று தைரியமாக அறிவிப்பார்களா?. குடமுழுக்கு நடத்த தமிழ் மன்னன் கட்டிய கோயில் வேண்டும், குடமுழுக்கு செலவுகளுக்கு தமிழக அரசின் நிதியும், தமிழ் மக்களின் நிதியும் வேண்டும், ஆனால் அவர்கள் காட்டும் வித்தைகளைப் பார்க்க தமிழ்மகக்ள் திரண்டு வரவேண்டும். தமிழ் மட்டும் வேண்டாமா?