Skip to main content

சுந்தரமூர்த்தி நாயனார் பெயரில் அமைந்த அடிமை சாசன வெள்ளிச் சுவடி கண்டுபிடிப்பு!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

sundara moorthy nayanar name slave silver plate discovered 

 

தமிழ்நாடு அரசு திருக்கோயில்களில் இருக்கின்ற அரிய பழமையான ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்குத் தனிக்குழுவை அமைத்துள்ளது. இச்சுவடிக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து சுவடிகளைத் திரட்டி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவடிகள் ஆய்வாளர் கோ.விசுவநாதன் கள ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது 2 அரிய வெள்ளி ஏடுகளைக் கண்டறிந்துள்ளார்.

 

இந்த அரிய வெள்ளி ஏடுகள் குறித்து சுவடித்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறும்போது,

 

அடிமைச் சாசன வெள்ளி ஏடு : 

சைவ சமயக் குரவர்கள் நான்கு பேரில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் சடையனார், இசைஞானியார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் சொந்த ஊர் திருநாவலூர். இவரின் இயற்பெயர் நம்பியாரூரார். மக்கள் இவரை ஆருரார் என்றும் அழைத்தனர். சிவபெருமான் இவரின் அழகு கண்டு சுந்தரன் என்று அழைத்ததாகவும் வரலாறு உண்டு. இவர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் "திருப்பாட்டு" என்று அழைக்கப்படுகின்றன.

 

சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறையாகக் கருதப்படுகிறது. சுந்தரர் சிவபெருமான் மீது 38,000 பாடல்கள் பாடியதாக அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புடைய சுந்தரமூர்த்தி நாயனாரின் மூதாதையர் எழுதிக் கொடுத்த "அடிமை ஓலைச்சாசன குறிப்புகள் அடங்கிய வெள்ளி ஏடு" ஒன்றும் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு என்பவர் சிறுவானூர் கோயிலுக்கு அவரின் நாமம் விளங்க எழுதிக் கொடுத்த ஏடு ஒன்றும் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

அடிமை ஓலை சாசன வரலாறு : 

 

sundara moorthy nayanar name slave silver plate discovered 

திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையர் என்னும் மன்னன் தனது பால்ய சினேகிதன் சடையனின் மகன் நம்பியாரூரானை தத்தெடுத்து அரண்மனையில் வைத்து சிறப்புடன் வளர்த்தான். நம்பியாரூரன்  வளர்ந்து ஆளானபோது அவனுக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் பேசி முடித்தனர். திருமணம் புத்தூரில் நடைபெற்றது. சுந்தரர் மணப்பந்தலில் பெண்ணை மணமுடிக்க காத்திருந்த பொழுது சிவபெருமான் ஒரு முதிய அந்தணர் வேடம் பூண்டு வந்து திருமணத்தை நடக்க விடாமல் தடுத்தார். நம்பியாரூரான் அவரிடம் "திருமணத்தை ஏன் நடக்க விடாமல் தடுக்கிறீர்" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர் நம்பியாரூரரின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் சபையோரைப் பார்த்து "இவனின் பாட்டன் எனக்கு வழியடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளான். எனவே இவன் என்னுடைய அடிமை" என்று கூறினார். அது கேட்டு நம்பியாரூரான் அந்த அந்தணரை எள்ளி நகையாடியதோடு பித்தன் என்றும் வசை பாடினான்.

 

மேலும் அந்தணன் கையில் வைத்திருந்த அடிமை ஓலை சாசனத்தைப் பிடுங்கி கிழித்து எறிந்தான். அந்தணர், நம்பியாரூரான் செய்த கொடுஞ்செயலைச் சபையோரிடம் கூறி முறையிட்டார். பின்னர் அடிமை சாசனத்தின் மூல ஓலை திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. எனவே அங்கு வந்து இவ்வழக்கைத் தீர்த்துத் தருமாறு சபையோரை வேண்டினார். அதன்படி சபையாரும் நம்பியாரூரானும் திருவெண்ணெய்நல்லூர் சென்றனர். அந்தணன் அடிமை சாசன மூல ஓலையைக் கொண்டு வந்து சபையோரிடம் கொடுத்தார். அதில் நம்பியாருராரின் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை சாசன விவரம் தெளிவாக இருந்தது. மேலும் அடிமை ஓலை சாசனத்தில் சாட்சி கையொப்பமிட்டவர்கள் அது தங்கள் கையெழுத்து தான் என்று ஒத்துக் கொண்டனர்.

 

வேறு ஓலைகள் கொண்டு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த நம்பியாரூராருடைய பாட்டனின் கையெழுத்தும் சரிபார்த்து உறுதி செய்யப்பட்டது. பின்னர் சபையோர் "நம்பியாரூரான் அந்தணருக்கு அடிமைப்பணி செய்ய வேண்டும்" என்று தீர்ப்பளித்தனர். நம்பியாரூரான் அதற்கு இசைவு தெரிவித்தான். பின்னர் அவன் அந்தணரைப் பின் தொடர்ந்து சென்றான். முதிய அந்தணர் திருவட்டுறை கோயிலுக்குள் சென்றதும் மறைந்து போனார். நம்பியாரூரான் முதிய அந்தணனை கோயில் முழுவதும் தேடியபடி மயங்கி நின்றான். அப்போது சிவன் ஆனந்தமூர்த்தியாய் உமையம்மையுடன் விடை மீது அமர்ந்து வந்து காட்சி அளித்தார். மேலும் பூர்வ பிறவி குறித்தும் எடுத்துரைத்தார். "பிறவிப் பெருங்கடல் தொடராமல் இருக்கவே உன்னை நான் ஆட்கொண்டேன்" என்றும் கூறினார்.

 

நம்பியாரூரான் ஆனந்த களிப்பில் ஈசனை விழுந்து வணங்கினான். அப்போது சிவன், "நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால், உனக்கு ‘வன்தொண்டன்’ என்று பெயர் சூட்டுகிறேன்" என்றார். மேலும் "ஆருரா! என்னை தமிழ்ப் பாவால் பாடு என்றார். நம்பியாரூரான் பாட முடியாமல் மயங்கி நின்றான். அப்பொழுது சிவன், "பித்தா" என்ற சொல்லை எடுத்துக் கொடுத்துப் பாடுமாறு கூறினார். நம்பியாரூரானும் "பித்தா!  பிறைசூடி பெருமானே! அருளாளா!" என்று அடியெடுத்து சிவன் மீது திருப்பதிகம் பாடினான் என்று பெரிய புராணத்தில் வரும் தடுத்தாட்கொண்ட புராணம் அடிமை ஓலை சாசன வழக்கு வரலாற்றைத் தெளிவுபடக் குறிப்பிடுகிறது.

 

வெள்ளி ஏடுகளில் உள்ள செய்திகள் : 

 

sundara moorthy nayanar name slave silver plate discovered 

கண்டறியப்பட்ட 2 வெள்ளி ஏடுகளில் 1 வெள்ளி ஏட்டில் அடிமை ஓலை சாசன குறிப்புகள் காணப்படுகின்றன. அதாவது: "அடிமை ஓலை ஸாதனம்: திருநாவலூரில் இருக்கின்ற ஆதி சைவனாகிய ஆரூரன் என்கிற நான் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித் தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் - இப்படிக்கு - ஆரூரன் " என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

 

இவ்வாசகம் மேற்கண்ட அடிமை சாசன வழக்கு வாலாற்றோடு தொடர்புடையது என்பது புலப்படுகிறது. இவ்வெள்ளி ஏடு 17.7.செ.மீ. நீளமும் 2.8 செ.மீ. அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. வெள்ளி ஏட்டினை எழுதியவர் மற்றும் ஏட்டில் காலம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. எனினும் சுவடியில் வரும் கூட்டெழுத்துக்கள் அடிப்படையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இக்கோயிலில் திருவாபுரீஸ்வரர் சிலை அமைந்துள்ள கருவறை உள்ளே 66. செ.மீ .நீளமுடைய வெள்ளிக்கோல் ஒன்றும் மரத்தில் செய்யப்பட்ட பாதக்குறடு 2-ம் செய்து வைத்து பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இவை சிவபெருமான் அந்தணராக வடிவெடுத்து வழக்காட வந்த பொழுது கையில் வைத்திருந்த கைத்தடியும் பாதத்தில் அணிந்திருந்த பாதக்குறடும் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். வெள்ளி அடிமை சாசன ஏடு, வெள்ளிக்கோல், மரத்தால் செய்யப்பட்ட பாதக்குறடு ஆகியவை இறைவன் சுந்தரரை, தடுத்தாட்கொண்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் கோயிலில் செய்து வைத்து பூஜித்தும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன என்று தெரிந்துகொள்ள முடிகின்றது.

 

மேலும் இதன் மூலம் 8 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த வழக்காடு முறை, அடிமை சாசன முறை குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது. இக்கோயிலில் உள்ள மற்றொரு வெள்ளி ஏடு சிறுவானூர் வேணு கோபாலசாமி கோயிலினுடையது. இவ்வெள்ளி ஏட்டில் "சிறுவானூர் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு நாம வெள்ளி கவசம் 1930 சுக்கல தை மாதம் 9" என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வெள்ளி ஏடு எழுதப்பட்ட காலம் 1930 தை மாதம் 9 ஆம் தியதி என்று அறிய முடிகிறது. இவ்வெள்ளி ஏட்டை தன் நாமம் விளங்க தெய்வத்திற்கு எழுதி வைத்தவர் சி.மு. பாலகிருஷ்ண நாயுடு என்பது விளங்குகிறது. இவ்வெள்ளி ஏடு 11.6. செ.மீ. நீளமும் 1.5 செ.மீ. அகலமும் கொண்டது" என்று முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறினார்.