Skip to main content

ஜெ.வுக்கு கிடைத்த வெற்றி; தனபால் சொன்னதன் அர்த்தம் - பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளக்கம்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

SP Lakshmanan Interview

 

மாமன்னன் படம் பேசும் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

 

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மாமன்னன் படத்தை இப்போது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மாரி செல்வராஜுக்கு ஒரு உணர்வு இருந்திருக்கிறது. அது அவர் கடந்து வந்த பாதையாக இருக்கலாம், அவர் கேள்விப்பட்ட விஷயமாக இருக்கலாம். முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை தான் இது என்கிற பேச்சு படம் வெளிவருவதற்கு முன்பே இருந்தது. இந்தக் கதை தன்னைப் பற்றியதுதான் என்றால் அந்தப் பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று தனபால் சொல்லியிருக்கிறார்.

 

இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தனபாலை அனைவரும் மரியாதை செலுத்தும் சபாநாயகர் என்கிற இடத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் ஆணவக்காரர் என்று அனைவராலும் சொல்லப்பட்ட ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போதும் தன்னுடைய சாதியை முன்னிறுத்த வேண்டும் என்று நினைத்தவரல்ல. பட்டியலினத்தில் இருந்து ஒருவர் வென்றால், அவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகத் தான் ஆக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்தபோது, முதன்முதலில் தனபாலை கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா.

 

எப்போதும் ஆச்சரியங்களை வழங்குபவர் தான் ஜெயலலிதா. தனபாலை அனைவரையும் வணங்க வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதைச் செய்தார். ஜெயக்குமார் போல் வாய்த்துடுக்காக பேசாமல், இந்தப் பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்று தனபால் தெரிவித்திருக்கிறார். அதிமுககாரர் பற்றிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று உதயநிதி நினைத்திருந்தால் இந்தப் படம் வந்திருக்காது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

வலியைக் கடந்து வந்த அனைவருக்குமான படம் மாமன்னன். இந்தப் படம் குறித்த ஜெயக்குமாரின் விமர்சனம் எனக்கு உண்மையில் வருத்தத்தை அளித்தது. சில நேரங்களில் அரசியலை ஓரங்கட்டிவிட்டு கொஞ்சம் பெருந்தன்மையாக இருங்கள். ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் சாதியப் பார்வையோடு நடந்துகொண்டதில்லை. திருச்சி என்கிற பொது நாடாளுமன்றத் தொகுதியில் தலித் எழில்மலையை நிற்க வைத்து அவர் வெற்றிபெறச் செய்தார். இதுபோன்ற விஷயங்களுக்காக அவரை புரட்சித்தலைவி என்று நிச்சயமாக அழைக்கலாம்.