இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் 2019ஆம் ஆண்டு மிக முக்கியமானது. 2019ஆம் ஆண்டை அரசியல்வாதிகள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல்காந்தி உத்திரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. தற்காலிக தலைவராக சோனியா காந்தி தற்போது இருந்து வருகிறார். தேர்தலுக்கு முன்னதாகவே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநிலத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்ற பெயரை எடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களை மட்டுமே பிடித்தது. அதில் ஒன்று கேரளாவின் ஆலப்புழா தொகுதி. மற்ற இரண்டு தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை ஆகிய தொகுதிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டிணம், திருப்பூர் ஆகிய தொகுதிகள். திமுக தலைமையிலான கூட்டணி பலம் இருந்ததால் இடதுசாரிகள் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
ஓ.பி.ஆர். மட்டுமே வெற்றி
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 37 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, 2019ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்தது. வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது. வேலூர் தொகுதியை தவிர்த்து தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடந்த இந்த தேர்தலில் திமுக பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.
ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்தது. இதில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
தேர்தலை சந்தித்த ம.நீ.ம.
2018ல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தனது கட்சியின் முதல் தேர்தலாக 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு நான்கு சதவீத வாக்குகள் கிடைத்தன.
மாநிலங்களவை உறுப்பினரானார் அன்புமணி
2011-ம் ஆண்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. அந்த நேரத்தில் பாமக மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். தருமபுரி மக்களவைத் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் திமுக அங்கு வெற்றி பெற்றது. இதையடுத்து அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா உறுப்பினராக ஆனார்.
முதலமைச்சர் நாற்காலியை உறுதியாக பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணிக்கு 18 எம்எல்ஏக்கள் சென்றதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. தினகரனுடன் சென்றதால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த 18 தொகுதிகள் உள்பட 22 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றதால் முதலமைச்சர் நாற்காலியை உறுதியாக பிடித்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது.
திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்
தேர்தலுக்கு முன்பு டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவருக்கான வரவேற்பு இருந்தது. தினகரன் தனது செல்வாக்கை நிருபிப்பார் என்றும் இதனால் அதிமுக ஆட்சியை இழக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவு அதற்கு நேர் மாறாக முடிந்தது. இந்த தேர்தலுக்கு பின்னர் தினகரன் அணியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பலர் திமுகவுக்கு சென்றனர்.
இடைத்தேர்தல் முடிவால் அதிமுக உற்சாகம்
இதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதி திமுக வசம் இருந்தது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. இந்த இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிடும், அதனால் ஓட்டுக்கள் பிரியும் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறும் என்று நினைத்தார்கள். ஆனால் தினகரனோ இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று தெரிவித்தார். இதனால் திமுகவுக்கு நெருக்கடி வந்தது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. திமுக தோல்வியை சந்தித்தது.
பாஜகவுக்கு ஏமாற்றத்தை தந்த மாநிலங்கள்...
நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருந்த பாஜகவுக்கு, அடுத்து வந்த மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்கள் மகிழ்ச்சியை தரவில்லை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்றிருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஆனால் சிவசேனாவுடன் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியை பிடிக்கும் என்று சரத்பவார் கூறியதால், பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்ற பட்சத்தில் மூன்றே நாளில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பா அரியானாவில் கடந்தமுறை தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜார்க்கண்ட் தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தமிழிசை சௌந்திரராஜனின் முழக்கம்
தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்தை தமிழகத்தில் முழங்கியவர் தமிழிசை சௌந்திரராஜன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். 2014 முதல் தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தராஜன் உள்ளார், எனவே தலைவர் பதவி மாற்றப்படலாம் என்று எல்லோரும் சொல்லி வந்தநிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து ஒரு பெண் தலைவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் தமிழிசை சௌந்திராஜனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி 2019ல் வெற்றிடமாகவே இருந்தது. தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் சென்ற பிறகு, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை முழங்க ஆளில்லை.
ப.சிதம்பரம் கைது
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்த கைது நடந்திருக்கிறது என்று சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியினரும் சொல்லி வந்தனர். மேலும் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சிலர் கூறினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2008 முதல் 2012 வரை உள்துறை அமைச்சராக இருந்தார் சிதம்பரம். அப்போது குஜராத்தின் முதல்வராக மோடியும் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தனர். மார்பிள் பிஸ்னெஸ் கிரிமினலான சொராபுதினுக்கும் மார்பிள் பிஸ்னெஸ் ஜாம்ப வான்களுக்கும் மோதல் இருந்தது. இந்த நிலையில் சொராபுதின் உள்பட 3 பேர் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அமித்ஷா உள்பட பல பேருக்கு தொடர்பு இருப்பபாக அமித்சாவை கைது செய்தது.
2014 ல் சொராபுதின் என்கவுண்டர் வழக்கிலிருந்து குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார் அமித்ஷா. இருந்தாலும் சிதம்பரத்தால் நேர்ந்த துயரம் அமித்ஷாவை விரட்டிக் கொண்டே இருந்தது. இரண்டாவது முறையாக 2019-ல் மீண்டும் பிரதமரான மோடியின் அமைச்ச ரவையில் மத்திய உள்துறை அமைச்சரானார் அமித்ஷா. எந்த உள்துறையின் மந்திரியாக இருந்துகொண்டு சி.பி.ஐ.யை வைத்து தன்னை சிதம்பரம் கைது செய் தாரோ அதே சி.பி.ஐ.வைத்து சிதம்பரத்தை கைது செய்ய அவர் மீதான வழக்கை தேடினார். இதையடுத்துதான் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அமித்சா கைது செய்யப்பட்டு 104 நாள் சிறையில் இருந்தார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறைவாசத்தற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். 9 வருட பகை தீர்க்கப்படும் வகையில், சிதம்பரத்தின் கைது படலம் அரங்கேறியது என்றும் கூறுகிறார்கள்.
ஜெகன் மோகன் ரெட்டி - வரலாற்று வெற்றி
ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக வர விரும்பினார். ஆனால் சொந்தக் கட்சியாலேயே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பல்வேறு சித்தரவதைக்கும் ஆளானார்.
அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் வெளிவந்த ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் பாணியிலேயே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அது அவருக்கு மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது. 2019 ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பிடித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டியை இந்தியாவே திரும்பி பார்த்தது.
பொருளாதார மந்தநிலை - வெங்காய விலை - திசை திருப்பும் CAA NRC...
2014ல் மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்தது. அப்போது வளர்ச்சி என்ற முழக்கத்தை மத்திய பாஜக அரசு கையில் எடுத்தது. 9.5 சதவீதமாக உயர்ந்து இருந்த பொருளாதாரம் 4.5 சதவீதமாக சரிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர். ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை பறித்தது. பல்வேறு தொழில்கள் முடங்கியது. விலைவாசி உயர்ந்தது. வெங்கால விலை உயர்வு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இருந்தாலும் பொருளாதார மந்தநிலை - வெங்காய விலை உயர்வு போன்றவற்றை திசை திருப்ப CAA NRC காஷ்மீர் விவகாரம், போன்ற விவகாரத்தை மத்திய பாஜக அரசு கையில் எடுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்று எல்லோரும் விவாதித்து வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீற முடியாமல் தமிழக தேர்தல் ஆணையம் 2019 டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது. அதுவும் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்து அதையும் 27ஆம் தேதி, 30ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு சில மாதங்கள் கழித்து நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாதி நடத்தி, பாதி நடத்தாமல் இருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு குறை பிரசவம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
எப்படியோ, இந்திய அளவிலும் தமிழக அளவிலும் 2019 அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் பல வகைகளிலும் முக்கியமான ஆண்டாக அமைந்தது.