Skip to main content

ஏழுமலையான் சொத்து விஷயத்தில் ஜெகனுக்கு எதிராக பா.ஜ.க... சர்ச்சையில் சிக்கிய சேகர் ரெட்டி... வெளிவந்த தகவல்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

temple


இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளைக் கொண்டிருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். அவற்றில் பெரும்பாலான சொத்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படிப் பயன்படுத்தப்படாமல் தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விற்பது எனத் தீர்மானிக்கிறது திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாகம். அந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் சுப்பா ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா; ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
 


இதனையறிந்த தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கடுமையாக எதிர்த்தார். விவகாரம் சீரியஸ் ஆனது. அதேசமயம், திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் தலைவர் சுப்பாரெட்டியின் தீர்மானத்தை வழிமொழிந்து, சென்னை தி.நகரில் உள்ள தமிழக திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவரான சேகர்ரெட்டியும் தீர்மானம் போடுகிறார். அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
 

sekar


இந்த விவகாரத்தை முரளிதரராவ் உள்பட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் என பலரின் கவனத்துக்கும் கொண்டுசெல்கிறார் தமிழக பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு தலைவர் சுப்பிரமணிய பிரசாத். பல முனைகளிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சுப்பாரெட்டிக்கும் எதிராகக் கண்டனங்கள் எதிரொலிக்கின்றன. தேவஸ்தானத்திற்கு வருவாய் இல்லாததால் சொத்துகள் விற்கப்படுகிறது என்கிற ரீதியில் பரபரப்பாகிறது. இதனையடுத்து, ’சொத்துகள் விற்பதை நிறுத்த அறக்கட்டளை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்’ என சுப்பாரெட்டியைக் கேட்டுக்கொள்கிறார் ஜெகன்மோகன்ரெட்டி.
 

cm


அதனை ஏற்றுக்கொண்டு, தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்திருக்கும் சுப்பாரெட்டி, "பயன்படுத்தப்படாத நிலங்களை விற்பனை செய்வது 1974-லிருந்தே நடந்து வருகிறது. இதுவரை பகிரங்க ஏலம் மூலம் 129 சொத்துகள் விற்கப்பட்டுள்ளன. அறக்கட்டளையின் தலைவராக கிருஷ்ணமூர்த்தி இருந்த முந்தைய காலத்தில், பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து அதனை விற்பனை செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அப்போது, ஆந்திராவில் 26, தமிழகத்தில் 23 என 50 நிலங்களை விற்க தீர்மானிக்கப்பட்டன'' என விளக்க மளித்திருக்கிறார்.
 


இது குறித்து நாம் விசாரித்தபோது, "அறக்கட்டளையின் தலைவரான சுப்பாரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமா என்பதாலேயே பா.ஜ.க.வினர் அரசியல் செய்து பூதாகரமாக்கினர். அதே பாணியில் அரசியல் செய்ய முடிவெடுத்த ஜெகன்மோகன், அறக்கட்டளையின் தலைவராக கிருஷ்ணமூர்த்தி இருந்த காலத்தில்தான் நிலங்களை விற்க முடிவு செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் வகையில் விளக்களியுங்கள் என சுப்பா ரெட்டிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். காரணம், கிருஷ்ணமூர்த்தி மத்திய பா.ஜ.க. அமைச்சர் அமீத்ஷாவுக்கு நெருக்கமானவர்'' என்கிறார்கள் போர்டின் முன்னாள் உறுப்பினர்கள்.

இந்த நிலையில், தேவஸ்தான சொத்து சர்ச்சைகள் குறித்து தமிழக பா.ஜ.க.வின் ஊடகப் பிரிவு தலைவர் சுப்பிரமணிய பிரசாத்திடம் நாம் விசாரித்த போது, "திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கும் சொத்துகள் அதன் அறக்கட்டளைக்காக பக்தர்கள் கொடுத்தது அல்ல. தாங்கள் வணங்கும் கடவுளான ஏழுமலையானுக்கு காணிக்கையாகப் பக்தர்கள் கொடுத்தது. அதாவது, சொத்துகளுக்கு அதிபதி திருப்பதி ஏழுமலையான்தான். அந்த வகையில் சொத்துகளைப் பராமரித்து, அதன் மூலம் வருவாயைப் பெருக்கி, அந்தத் தொகையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதனைத் தவிர்த்து சொத்துகளை விற்க அறக்கட்டளைக்கு அதிகாரம் கிடையாது. பயன்படுத்தப்படாமல் இருப்பதால் ஒரு சொத்தை விற்க நினைப்பது அறிவீனம். குறிப்பிட்ட சொத்துகளில், தேவஸ்தானம் சார்பில் மருத்துவமனை கட்டுங்கள், இந்து தர்மங்களைப் போதிக்கும் பாடசாலைகளை அமையுங்கள், சமய பெரியோர்களின் சொற்பொழிவு கூடங்களை உருவாக்குங்கள், தர்மஸ்தானம் அமையுங்கள், ஏழை பக்தர்களுக்கு அதன் மூலம் உதவுங்கள். ஆன்மிகரீதியாகவும், இந்து தர்மத்தின்படியும் இப்படி நிறைய நல்ல விசயங்களைச் செய்ய முடியும். அதனைத் தவிர்த்து, நிலங்களை விற்பதற்கு முயற்சிப்பது தவறு.
 

http://onelink.to/nknapp


இன்றைக்குச் சிறிய அளவில் நடக்கும் இந்த முயற்சிகள், எதிர்காலத்தில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளும் ஏலம் விடப்படும் சூழலை உருவாக்கும். அதனால், ஏழுமலையானுக்குச் சொந்தமான நிலங்களை விற்கக் கூடாது. மேலும், திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை இப்படி ஒரு முடிவை எடுக்கிறபோது, தமிழக திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் சேகர் ரெட்டியும், போர்டின் உறுப்பினர்களும் அதனை எதிர்த்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சொத்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம் எனத் தீர்மானம் போட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, திருப்பதி தேவஸ்தான அறக் கட்டளையின் முடிவுகளை ஏற்கும் வகையில் தீர்மானம் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஏழுமலையானுக்குச் சொந்தமான நிலங்களை விற்பதற்கு துணை போயிருக்கும் தமிழக திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையை முழுமையாகக் கலைக்க வேண்டும். நிலங்களை விற்பது தொடருமானால், இனி ஏழு மலையானுக்கு பக்தர்கள் நிலங்களைக் காணிக்கையாகத் தருவது கேள்விக்குறியாகி விடும்'' என்கிறார் ஆவேசமாக.