மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆன சசிகலா, அதிமுக கொடியுடன் காரில் வந்தது அதிமுகவினரிடமும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்மிடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளர். அதிமுக பொதுச்செயலாளர் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு வருகிறார்.
கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தவறு என்று கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்துள்ளார்களே?
சசிகலா கட்சியில் இல்லை என்று சொல்ல முனுசாமி யார்? சசிகலாதான் பொதுச்செயலாளர்.
அதிமுக கொடி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்கிறார்களே...
அந்த நிலைமை இவர்களுக்கு வரப்போகிறது.
அதிமுகவில் உறுப்பினர்களைப் புதுப்பித்தபோது, அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக்கொள்ளவில்லை. கட்சியில் இல்லாதவர் சசிகலா என்று கே.பி.முனுசாமி கூறியிருக்கிறாரே?
அதே முனுசாமிதான் டிடிவி தினகரன் மன்னிப்புக் கேட்டால் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று சொல்கிறார். ஏன் சொல்கிறார்? சேர்த்துக் கொள்ளப்போகிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டது. அந்த வேலையைத்தான் டெல்லி செய்கிறது. அதனால்தான் அதிமுக சசிகலா தலைமையில் இயங்குவதற்கான சமிக்ஞை இது. கொடியையும் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்பவர்கள், மன்னிப்புக் கேட்டால் சேர்த்துக்கொள்வோம் என்று ஏன் சொல்கிறார்கள். சேர்த்துக்கொள்ளப்போகிறீர்கள் அல்லது சேரப்போகிறீர்கள் என்று பொருள்.
சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியவர்கள் நீக்கப்படுவதாக இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிடுகிறார்களே?
நீக்கப்பட்டவர்கள் யாராவது நெஞ்சு உடைந்து விட்டார்களா? நீக்கியவர்கள்தான் நெஞ்சு உடைந்துபோய் நிலநடுக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நீக்கப்பட்டவர்கள் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் போகப் போக என்ன நடக்கிறது என சசிகலா சென்னை வந்ததற்குப் பிறகு தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
சசிகலா விவகாரத்தில், ஓ.பி.எஸ். எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அதேசமயம், சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் கூறியிருப்பது...
சசிகலா பூரண குணமடைய வேண்டும் என ஓ.பி.எஸ். மகன் சொல்கிறார். ஓ.பி.எஸ். இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். அவருடைய கள்ள மௌனம் சசிகலாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கப்போகிறது. அதிமுக இரண்டாக உடையப்போகிறது. இதெல்லாம் நடக்கப்போகிறது.