தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தனித்துவமானது. பிரச்சாரத்திலும் சரி, வாக்குறுதிகளிலும் சரி இந்தியா முழுமைக்கும் ஒரு அரசியல் வேண்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டும் வேறொரு அரசியல் செய்யவேண்டும்.
எடுத்துக்காட்டிற்கு இந்தியா முழுமைக்கும் இந்து மதத்தையோ, இந்துக்கடவுள்களையோ, இந்துமத பழக்கவழக்கங்களை வைத்தோ அரசியல் செய்துவிடலாம். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த அரசியல் எடுபடாது. இந்த தனித்துவத்தை உடைப்பதற்கு பல தேசிய கட்சிகளும்கூட முயற்சி செய்கின்றன. குறிப்பாக வன்முறை பிரச்சாரத்தை மேற்கொள்ள சில இந்துத்துவ கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
நாகாலாந்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டபோது, எச்.ராஜா லெனின் சிலை உடைக்கபட்டதுபோல் தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனப்பேசினார். இதைத்தொடர்ந்து அது மிகுந்த சர்ச்சையாகி போராட்டக்களமானது. இதுபோலவே தொடர்ந்து அவர் பல கருத்துகளை தெரிவித்துவந்தார். அதுபோலவே தற்போதும் நடந்துள்ளது. முன்பு ஒருமுறை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புராணத்திலுள்ள கிருஷ்ண அவதாரம் குறித்து பேசினார். அதை இப்போது பரப்பி சர்ச்சைக்குள்ளாக்கினர்.
கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேச வீரமணி வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்து முன்னணியினர் மேடைமீது கற்களையும், செருப்பையும் வீசி எறிந்தனர். இதில் இருவர் காயமுற்றனர். அதைத்தொடர்ந்து மர்மநபர்கள் அறந்தாங்கியிலுள்ள பெரியார் சிலையை உடைத்தனர். தற்போது வீரமணி சென்ற காரில் கற்களை எறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் ஆட்சியிலிருந்து வருகின்றன. தேசிய கட்சிகள் எவ்வளவு முயன்றும் அது பலிக்கவில்லை. இந்த திராவிட கட்சிகளுக்கு மூலமாக இருப்பது பெரியாரும், திராவிடர் கழகமும் இருக்கிறது. ஒரு இடத்தின் பலமான நம்பிக்கையை உடைத்து அதன்மூலம் அந்த இடத்தில் பாஜக காலூன்ற தொடங்கும், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பலமான நம்பிக்கை பெரியாரும், திராவிட கருத்துகளும்தான். ஒருவேளை அதனால்தான் அதன்மீது தாக்குதல் நடத்துகிறார்களோ? ஒருவேளை வடநாடுகளில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், லெனின் சிலை உடைப்பு போன்று இங்கும் பிரச்சாரம் நடத்துகிறார்களோ? என்றும் கேள்வியெழுந்துள்ளது.