பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். பொதுவாக எம்பிக்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வளர்ச்சி திட்ட நிதியாக 5 கோடி வழங்குகிறது. இந்த நிதியை ஒவ்வொரு எம்பிக்களும் தங்கள் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து மக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும். ராஜ்யசபா மூலம் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் திட்டப்பணிகளுக்கு செலவிடலாம் என்ற விதிமுறை உள்ளது.
இதன் அடிப்படையில் பல ராஜ்யசபா எம்பிக்கள் பல மாநிலங்களுக்கு தங்கள் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில் டெண்டுல்கர் தனது எம்பி நிதியில் இருந்து 27 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெரம்பலுர் அருகேயுள்ள எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட கோல்டன் சிட்டி என்ற பகுதியில் சாலை அமைக்க ஒதுக்கியுள்ளார்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ரீதர், பொறியாளர் நிர்மலா ஜோசப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், முரளிதரன் என பெரும்படையே சென்று தார்சாலை அமைக்கும் பணிக்கு ஆய்வு நடத்தியது.
அந்நிதியில் 500 மீட்டர் நீளமும், 3.75 செ.மீ. அகலமும், 20 செ.மீ. கணத்திலும் சாலை அமைக்கபோவதாக உறுதி செய்தனர். வட மாநிலத்தை சேர்ந்த பிரபல கிரிகெட் வீரர் தமிழகத்தில் அதிலும் பெரம்பலூர் பகுதிக்கு ஏன் சாலைபோட நிதி ஒதுக்கினார் என விசாரித்தோம்.
கோல்டன் சிட்டி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு ஜ.ஏ.எஸ். அதிகாரிக்கு வீடு உள்ளது. அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் உள்ளார். அவர் பலமுறை அந்த பகுதிக்கு சாலை அமைக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் உட்பட பலரையும் கேட்டுள்ளார்.
அந்தபகுதி நகராட்சி எல்லையில் வரவில்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டது. எளம்பலூர் ஊராட்சியில் வருகிறது. ஆனால் ஊராட்சியில் நிதியில்லை என்று கைவிரித்து விட்டனர். அதன் பிறகே டெண்டுல்கர் மூலம் எம்பி நிதி பெற்று சாலை போட முயற்சி செய்து அதனை செய்துகாட்டியுள்ளார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.