மகாராஸ்டிரா மாநிலம் கொங்கன் கடலோரப் பகுதியில் வரலாற்றை திருத்தி எழுதும் வகையிலான பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. கொங்கன் கடலோரப் பகுதியில் உள்ள ராஜாபூர், ரத்னகிரி ஆகிய இடங்களில் ஆயிரம் பாறை ஓவியங்களுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பாறை ஓவியங்களின் காலம் கி.மு.10 ஆயிரம் ஆண்டுகள் என்று தொல்லியல்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட பாறை ஓவியங்கள், இந்தப் பகுதியின் வரலாற்றை திருத்தி எழுதும் வகையில் உள்ளது என்பது அவர்களுடைய கருத்து.
இந்தப் பகுதியில் 52 இடங்களில் இந்த ஓவியங்கள் இருக்கின்றன. இவற்றில் 12 இடங்களில் சிறிய விலங்குகள் முதல் மனித உருவங்கள் வரை செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் 50 அடியில் செதுக்கப்பட்டுள்ள யானை ஓவியம் சிறப்பு வாய்ந்தது.
வரலாற்றின் மத்தியக் காலத்தில் கொங்கன் கடலோரப் பகுதியில் முக்கியமான துறைமுக நகரங்கள் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. ஐரோப்பாவுடனும், ரோமாபுரியுடனும் இங்கிருந்து வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றுக் காலத்திற்கு முன் இந்தப் பகுதி எப்படி இருந்தது என்பதை யூகிக்க முடியாமல் இருந்தது. சில குகைகளில் இருந்து ஒருசில ஆதாரங்கள் கிடைத்தன. புனேவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆதி மனிதரகள் பயன்படுத்திய கருவிகளை கண்டுபிடித்தனர். அவை 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்றார்கள். ஆனால், துறைமுக நகரங்கள் கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் இருந்தன. அப்படியானால், சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கான் வரலாறு விடுபடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களின் கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தயவை என்பதால், அதாவது மெசோலித்திக் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், அந்தக் காலகட்டத்தில் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏனெனில், இந்தப் பாறை ஓவியங்கள் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார் தொல்லியல் துறை நிபுணரான கார்கே.