பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை பற்றியும், அதற்கு அதிமுகவினரின் எதிர்வினைகளைப் பற்றியும் அரசியல் விமர்சகர் காந்தராஜை சந்தித்து பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
ஹெச்.ராஜா உள்ளிட்ட பிராமணர்கள் யாரும் பதவியில் இருக்கக்கூடாது என்று அண்ணாமலை நினைக்கிறார் என்று எஸ்.வி.சேகர் குற்றம் சுமத்துகிறாரே?
பாஜகவுடைய ஆரம்பக் காலத்தில் அந்த கட்சி பிராமணர் சேவா சங்கம் என்று தான் இருந்தது. அதில் பிராமணர் என்று பெயர் இருக்கக்கூடாது என்று தடை வந்த பின்பு தான் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என மாற்றினார்கள். இதன் மூலம் தான் பாரதிய ஜனதா கட்சி என்று உருவானது. இப்படி பிராமணர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியில், இன்றைக்கு தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட பாஜகவில் இல்லை. அதற்கு காரணம் அண்ணாமலை தான். அந்த ஒரு விசயத்திற்கு தான் அண்ணாமலை மீது மரியாதை வருகிறது.
அண்ணாமலை பொறுப்பில் வந்த பின்பு நீதிமன்றத்தை அவமரியாதை செய்த ஹெச்.ராஜா இன்றைக்கு அரசியலை விட்டே செல்கிறேன் என்று கூறி காணாமல் போய் விட்டார். அதே மாதிரி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பெண்களை தவறாகப் பேசி தேடப்படும் குற்றவாளியாக இருந்த எஸ்.வி.சேகர் காவல் துறை பாதுகாப்போடு திருமணத்திற்கு சென்று வந்தார். ஆனால், அண்ணாமலை வந்த பின்பு அவர் காணாமல் போய்விட்டார்.
நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிராமண பெண்ணான சுவாதிக்கு ஆதரவாக ஒய்.ஜி.மகேந்திரன் நீதி விசாரணை வேண்டும் என்று சொன்னார். ஆனால், நாளடைவில் அந்த கொலை வழக்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதே போல், சேலத்தில் பாஜகவின் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் விசாரணை வேண்டும் என்று ஒரு பிராமணர் கூட ஏன் கேட்கவில்லை? கேட்கவும் மாட்டார்கள்.
பாஜகவில் இருக்கும் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு போன்ற முக்கிய பொறுப்புகளில் இருக்கின்ற அனைவரும் பிராமணர் அல்லாதவர்கள் தான். நாடாளுமன்றத் திறப்பு விழாவில் வேதங்களில் சொல்லப்படாத சிவபெருமான் அங்கு பூஜிக்கப்படுகிறார். பன்னிரு திருமறை வாசிக்கப்படுகிறது. சிவபெருமானுடைய வாகனமான நந்தி இருக்கின்ற செங்கோலில் பிராமணர்கள் கூறிய நீச பாஷையான தமிழ் பொறிக்கப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் திராவிட சித்தாந்தம் வென்றுவிட்டது என்று தானே அர்த்தம். அந்த அளவிற்கு நாம் மாற்றியுள்ளோம். இதற்கு சேவகம் செய்த அண்ணாமலை மீது மரியாதை வருகிறது.
பிராமணர்கள் ஆதரிக்கக்கூடிய பாஜகவிலிருந்து பிராமணர்கள் வெளியே வந்தால் அவர்களின் பலம் என்னவென்று தெரியும் என எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறாரே?
பிராமணர்கள் வெளியே வந்தால் தான் எங்களுக்கு நல்லது. அப்போது நாங்கள் கூறியது எல்லாம் உண்மை என்று நிரூபிக்க முடியும். பிராமணர்களின் கொள்கையான இரட்டை குவளை முறை, பிராமணர்கள் தான் அர்ச்சகராக வேண்டும், பட்டியல் இனத்தவர்கள் யாரும் உள்ளே வரக் கூடாது என்று கூறி கட்சியை ஆரம்பிக்கட்டும். சூழ்ச்சிகளோடு இருக்கும் நீங்கள் வெளியே வந்தால் தான் உங்களுடைய வேஷம் கலையும். உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டதற்கு எஸ்.வி.சேகருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அண்ணாமலை மீது அனைவரும் குறை சொல்லும் போது அமித்ஷா அண்ணாமலைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பேசினாரே?
அமித்ஷாவின் நேரடி பார்வையில் அண்ணாமலை இருக்கிறார். அதனால், எஸ்.வி.சேகர் அமைதியாக இருக்க வேண்டும். அமித்ஷாவும் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர் தானே. அதனால், அண்ணாமலை மீது தனி பாசம் இருக்கிறது. நமது திராவிட சித்தாந்தங்களை அவர்கள் ஏற்று விட்டார்கள். வேதத்தில் சொல்லப்படாத சிவபெருமான், முருகன் போன்ற கடவுள்களை பிராமணர்கள் ஏற்று இப்போது வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவே திராவிட சித்தாந்தத்தின் வெற்றி.