சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை, என் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சென்னையில் அவரை மருத்துமனையில் அனுமதிக்க ஒரு மருத்துவமனையிலும் பெட் இல்லை என்று நேற்று முன்தினம் பிரபல செய்தி வாசிப்பாளர் வரதராஜன் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் இதுதொடர்பாக பேசியாதாவது, "சென்னையில் போதுமான அளவு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்று இ.எஸ்.ஐ. அயனாவரம் மருத்துவமனைகளைச் சேர்த்து மொத்தம் 5,000 அளவிற்குப் படுக்கைகள் உள்ளன. எனவே தவறான தகவல்களை யாரும் பரப்பத் தேவையில்லை. திரு. வரதராஜன் மிகத் தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவர் மீது வழக்குத் தொடரப்படும். அரசு மருத்துவமனைகளில் இடமில்லை, தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என்று அவர் கூறுகிறார் என்றால், அவர் வேண்டும் என்றே தவறான தகவல்களை மக்களுக்குக் கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அவரின் இந்தப் பேச்சு என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நோயாளிகளை ஐ.சி.யூ.வில் வைப்பதா அல்லது வார்டுகளில் வைப்பதா என்பது மருத்துவர்கள், நோயாளிகளின் உடல் நலத்தைப் பொறுத்து முடிவெடுப்பார். அவரின் உரிமையில் யாரும் தலையிட முடியாது. நேரடியாக அரசு செயலாளர்களிடம் உதவி கேட்டதாகச் சொல்கிறார். அப்படி எல்லாம் அவர் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும். பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற உங்களுக்கே தெரியும். அவர்களில் யாருக்காவது சிகிச்சைகளில் எந்தக் குறைபாடாவது ஏற்பட்டதா என்று நீங்களே சொல்லுங்கள். ஒரே பத்திரிக்கை அலுவலகத்தில் 42 பேருக்கு இந்தக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்காவது கரோனா பாதித்து சிகிச்சை அளிக்கப்படாமல் காத்திருப்பில் இருக்கிறார்களா என்று கூறுங்கள். யாராவது ஒருவர் இருந்தால் கூட அவர்கள் பெயரை தைரியமாகக் கூறுங்கள். நாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றோம். எப்படி இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை" என்றார்.