தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அன்றைய முதல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடைபெற்ற ஒன்று, அவருக்கு நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசியலில் தான் கை, கால், தலை என அனைத்தையும் நுழைப்பேன். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த இரண்டு சம்பவம் தொடர்பாகவும் மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:
"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எடப்பாடி தரப்பு கூறியது போல் தனக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று கூறியதையெல்லாம் அப்போதே யாரும் நம்பவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. முதல்வரிடம் கேட்டே காவல்துறையினர் இதைச் செய்திருப்பார்கள். இதையே தற்போது விசாரணை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைப் பற்றித் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம். அப்படி அது உண்மையாக இருந்தால் இவர் எதற்காக முதல்வராக இருக்க வேண்டும். அந்தப் பதவியை அசிங்கப்படுத்துவதைப் போல் இவரின் பேச்சு அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மையாக இருந்தாலும் விசாரணை ஆணையம் தீவிர விசாரணைக்குப் பிறகு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையம் தெரிவித்துள்ள நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். அதுவே பலியான மக்களுக்கு அரசு செய்கின்ற நேர்மையான உதவியாக இருக்கும்" என்றார்.
தமிழிசை தொடர்பாக பேசிய அவர், "தமிழிசை எங்கே இருக்க வேண்டும்,அவர் எங்கே இருந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் முழு நேரமும் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ஏனென்றால் தெலுங்கானா அரசு இவரை எதற்கும் அழைப்பதில்லை. ஆளுநர் உரையாற்றக் கூட இவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உப்புக்குச் சப்பாணியாக அங்கு அவர் ஆளுநராக இருந்து வருகிறார். மேலும் இன்னும் சில காலத்தில் ஆளுநர் பதவி முடிவடையப் போகிறது. எனவே அவருக்கு தீவிர அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு அச்சாரமாகத் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை எல்லாம் அழைத்து புத்தகம் போடுகிறேன் என்ற வகையில் அவர்களோடு நட்புறவை ஏற்படுத்துகிறார்.
இதை விடப் பெரிய பதவி, ஏன் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். இல்லை பெரிய அமைச்சர் பதவியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருக்கலாம். அதற்கான முயற்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட விரும்புகிறார். குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அவர் விரும்புகிறார்.அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி தோல்வி அடைவதால் இவர் அங்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார். இல்லை என்றால் தென் சென்னையில் போட்டியிடும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. இதற்காகவே அவர் காய் நகர்த்தி வருகிறார். இதில் அரசியல் இல்லாமல் இல்லை" என்றார்.