கமல் 60 நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அரசியலில் அதிசயம் நிகழும் என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். நட்பை விட தமிழர்களின் நலன்தான் முக்கியம், தேவைப்பட்டால் ரஜினிகாந்துடன் இணைவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். இதையடுத்து ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலை சந்திப்பார்களா என்று தமிழக அரசியலில் பெரும் விவாதம் எழுந்தது.
இந்த விவாதம் அடங்குவதற்குள் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், கமல்ஹாசனுடன் நீங்கள் இணைந்து செயல்படுவேன் என கூறி உள்ளீர்கள் அப்படி இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், கமலுடனான கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில், அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுக்க வேண்டிய முடிவு. அப்போது நான் எனது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி அது குறித்து முடிவு அறிவிப்பேன். அதுவரை இது குறித்து நான் பேச விரும்பவில்லை.
தமிழக மண்ணில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளாரே என கேட்டதற்கு. 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என கூறினார்.
ரஜினியின் இந்த பேட்டி குறித்து அவரது ரசிகர்கள் கூறும்போது, ரஜினியின் ஆரவாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கமல் ரசிகர்களோடு இணைந்து செயல்படுவதில் எந்த தயக்கமும் இல்லை. ரஜினியோ, கமலோ யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக ஏற்கவும் தயாராக இருக்கிறோம். எங்கள் தலைவர் சொன்னதுபோல 2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றனர்.
இதேபோல் கமல் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, அவர்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் 40 ஆண்டு காலமாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் பழகினார்கள். அரசியலுக்கு கமல் வந்துவிட்டார். ரஜினி வரப்போகிறார். இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. தெளிவாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி, கட்சி எது என்ற புரிதலோடு இருக்கிறார்கள்.
அரசியலில் எப்போதும் வியூகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் சில விசயங்களுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார். அவரது திட்டங்கள் அரசியலுக்கு வரும்போது தெரியலாம். நட்பை விட தமிழர்களின் நலன்தான் முக்கியம், தேவைப்பட்டால் ரஜினிகாந்துடன் இணைவேன் என சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இருவருக்கும் நன்றாகவே தெரியும் என்றனர்.
ரஜினி - கமல் இணைந்து அரசியல் களத்தில் இறங்குவார்களா என்று சில அரசியல் விமர்சகர்களிடம் நாம் பேசியபோது, இன்றைய காலக்கட்டத்தில் எந்தக் கட்சியும் தனித்து களம் காணுவது என்பது மிகப்பெரிய சவால். இந்த சவாலை எதிர்கொள்ள தற்போது தமிழகத்தில் எந்தக் கட்சியும் தயாராக இல்லை.
வைட்டமின் 'ப' என்ற பலத்தை தேர்தலுக்கு தேர்தல் களமிறக்கி அசால்டாக வெற்றி பெறும் அனுபவமிக்க அரசியல்வாதிகள் இங்கு உள்ளனர். அவர்களை தாண்டி இவர்கள் வர வேண்டும் என்றால் தனித்தனியே நின்றால் முடியாது. இருவரும் ஒன்றாக இணைவதோடு, ஏற்கனவே தமிழக அரசியலில் களம் கண்டவர்களும், எந்த வியூகத்தையும் சமாளிக்கக் தயாராக உள்ளவர்களும் இணைந்தால் ரஜினி - கமல் ரசிகர்களின் ஆசைகள் நிறைவேறும். தற்போது உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலரை ரஜினி ஏற்கனவே சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அவர்களும் ரஜினி சொன்ன 2021க்காக காத்திருக்கிறார்கள்.
திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற கோபம் இருக்கிறது. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் வர வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் கவனித்து இவர்கள் இருவரும் பயன்படுத்திக்கொள்வதோடு, தேசிய கட்சி ஒன்றையும் இணைத்து தேர்தலை சந்தித்தால் 2021ல் ரஜினி சொன்ன அந்த அற்புதம், அதிசயம் நிகழும் என்றனர்.