அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். அடுத்த முறை உங்களை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தங்களது பகுதிகளுக்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் மதுரை மாநகரில் அதிமுகவைச் சேர்ந்த ரைட் சுரேஷ், பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்தப் போஸ்டரில் தான் மதுரை மாநகர் மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. (அஜித் திராவிட முன்னேற்ற கழகம்) எனவும், அஜித் மற்றும் எம்.ஜி.ஆர். படங்களையும் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர், ''ஆமாங்க. அடுத்து தமிழகத்தின் முதல்வர் அஜித்தான். ஏன் அஜித் அரசியலுக்கு வர மாட்டாரா? தல அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழ மாட்டாரா? திரை உலகின் அதிசய நாயகன் தல அரசியலுக்கு வர கூடாதா? நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் இராஜேந்திர பாலாஜி சொல்லிருக்காரு கேட்டீங்களா? இனி அதிமுக என்றாலே அஜித் திமுக தான். பெயர் கூட பொறுத்தமாக இருக்குல. எம்.ஜி.ஆர். போட்டோவையும் போஸ்டரில் வைத்திருக்கிறேன். ஜெயலலிதாவுக்கும் அஜீத்தை பிடிக்கும். அஜீத் பிறந்தநாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அதிமுகவுக்கும் அஜீத்துக்கும் தொடர்பு ஏற்படும்'' என்று புது பீதியை கிளப்பி உள்ளார்.
பொதுக்குழுவில் கலந்து கொண்ட மதுரைச் சேர்ந்தவர்களோ, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உழையுங்கள் என்று கூறினார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை முன்னிலைப்படுத்தி தேர்தல் பணிகளை கவனியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை கூடும் என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால் இவரோ நடிகர் அஜீத் படத்தை போட்டு ஓட்டு கேட்கிறார். இப்படியே விட்டால் அதிமுகவில் உள்ளவர்கள் அவரவர்களுக்கு பிடித்த நடிகரை போட்டு ஓட்டு கேட்பார்கள். இப்படி இருந்தால் குழப்பம்தானே வரும். இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதுவோம் என்றனர்.