பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இன்றைக்கு பாஜகவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. உழைத்தவர்களுக்கு மரியாதை என்பது சிறிதளவு கூட கிடைப்பதில்லை. இவர்கள் போனால் போகட்டும், நானே போனால் போவேன் என்பதெல்லாம் ஒரு கட்சித் தலைவர் பேசும் பேச்சல்ல.
முதலில் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வாயில் வருவது போவதை எல்லாம் பேசக்கூடாது. நாம் பேசுவதை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் அவர் உணர வேண்டும். சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கும் வேலைகளைத்தான் தற்போது அண்ணாமலை செய்து வருகிறார். இந்த மாதிரியான போக்குகளை முதலில் அண்ணாமலை மாற்ற வேண்டும். தான் மட்டுமே கட்சி என்ற அமைப்பு பாஜகவில் மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இருக்காது. மூத்தோர்கள் செய்த தியாகமும், உழைப்புமே இன்றைக்கு பாஜக என்ற இயக்கம் இந்த அளவுக்கு வளருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் பாஜக ஆகிய இரண்டு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே என்னப்பா கட்சி இப்படி போயிட்டு இருக்கு என்று என்னிடம் வருத்தத்தோடே பேசி வருகிறார்கள், நான் உங்கள் கட்சியா என்னிடம் கூறி என்னப்பா ஆகப்போகிறது என்று கூறினேன். படிப்படியா வளர்ந்த கட்சி பாஜக, இன்றைக்கு அதன் போக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? ரவுடிப் பயல்கள், குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கின்ற கட்சியாக மாற்றி வைத்துள்ளார்கள். கட்சியில் யாரைச் சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும்.
வாய்க்கு வந்ததை மட்டும் பேசிவிட்டால் ஒரு மாநிலத்தலைவர் கட்சியை நல்ல முறையில் வழி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை. பாஜக பேரைக் கெடுத்தது மட்டும் இல்லாமல் தற்போது ஆர்எஸ்எஸ் பெயரே கெட்டுப்போகும் அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்து வருகிறது. பலரும் என்னிடம் இதுதொடர்பாக தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள். தான் பேசுவதே செய்தி என்று எந்த கட்சித் தலைவரும் நினைக்கமாட்டார்கள், ஆனால் தற்போது தமிழக பாஜகவில் அப்படியான சூழ்நிலை நிலவி வருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல. கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு பாஜக வந்துள்ளது. அதனைத் தவிடுபொடியாக்கி விட அண்ணாமலை முயற்சிக்க கூடாது" என்றார்.