கல்லூரியில் இடம் கிடைக்காததால், சாலையில் பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருந்த மாணவியை, தனியார் கல்லூரியில் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ள வழிவகை செய்துள்ளார் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி. கனிமொழியின் இந்த அதிரடி நடவடிக்கை பல தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பழங்குடிச் சமூகத்தினர் உள்ளனர். இவர்களில் குறும்பர், கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு சமூகத்தினரும் 'தொன்மைப் பழங்குடி குழுக்கள்' என வரையறை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். நிலையான வேலையில்லாமல் ஊசிமணி -பாசிமணி விற்றும், சவரி முடி தயாரித்தும், குறி சொல்லியும், பாட்டில் சேகரித்தும் அன்றாடப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். தினக் கூலி வேலைக்குச் செல்ல முயன்றால் கூட, சாதியைக் காரணம் காட்டி இதர சாதி மக்கள் புறக்கணிக்கின்றனர். இதனால், இந்த தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, வீட்டில் அடுப்பெரிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் தவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சியிலுள்ளது திருநீலகண்ட விநாயகர் கோவில் தெரு. இங்கு, காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் காட்டு நாயக்கர் சமுதாயத்தில், 10-ஆம் வகுப்பை தாண்டியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நிரந்தர வேலையின்றி தவித்து வரும் இப்பகுதி மக்கள், தங்களின் குழந்தைகளாவது உயர்ந்த நிலைக்குச் செல்லவேண்டும் எனப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். இந்தத் துயர வாழ்வில் இருந்து வெளியேற கல்விதான் ஒரே ஆயுதம் என அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், அதற்குப் பெரும் தடையாக எழுந்து நின்றது சாதிச் சான்றிதழ்.
மேற்சொன்ன திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருகிறார் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஷங்கர். இவருக்கு விஜயலட்சுமி எனும் மகள் உண்டு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கனவுகளுடன் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவரது விண்ணப்பம், கல்லூரி நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரணம், சாதிச் சான்றிதழ் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து ஷங்கரும் அவரது மகள் விஜயலக்ஷ்மியும் தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்றனர். இதெல்லாம், என் கட்டுப்பாட்டில் வராது நீங்கள் கலெக்டர் அலுவலகம் செல்லுங்கள் என தாசில்தார் கையை விரித்துள்ளார். கலெக்டர் அலுவலகம் சென்று சாதிச் சான்றிதழ் குறித்து கேட்டபோது, நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தில்தான் வசிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. அத்துடன், நீங்கள் சிறுபான்மைப் பிரிவினராக இருக்குறீர்கள். என என்னென்னவோ காரணம் சொல்லி சாதிச் சான்றிதழ் கொடுப்பதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது எனத் தகவல் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர் விஜயலக்ஷமி குடும்பத்தினர்.
இது குறித்து விஜயலக்ஷ்மியின் அப்பா ஷங்கர் நம்மிடம் பேசும்போது, "நான் ஏழாவது வரை படித்து இருக்கிறேன். என்னுடைய சாதிச் சான்றிதழில் காட்டு நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கொண்டு எனது குழந்தைகளை பள்ளிப் படிப்பில் சேர்த்துவிட்டேன். என்னுடைய மகள் விஜலக்ஷ்மி மேல்நிலைப் பள்ளி வகுப்பை முடிந்தவுடன் கல்லூரியில் சேர்க்க முயற்சித்தோம். பள்ளிப் படிப்புக்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கவில்லை. ஆனால், கல்லூரி நிர்வாகமோ, சாதிச்சான்றிதழ் இருந்தால்தான் விஜயலக்ஷ்மிக்கு அனுமதி கிடைக்கும் எனக் கூறிவிட்டது. மாவட்ட நிர்வாகமோ மௌனம் சாதிக்கிறது. சாதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்புகளில் போட்டியிட முடியும். இல்லையென்றால் வெந்ததை தின்று விதிவந்தால் சாக வேண்டியதுதான். காலேஜ் போக ஆசைப்பட்ட என் மகள் இப்போது பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருக்கிறாள்” என்றார் சன்னக் குரலில்.
இந்த நிலையில், மாணவி விஜயலட்சுமியின் நிலை குறித்து அறிந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, உடனடியாக அந்த மாணவியின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு பேசினார். அதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பேசிய கனிமொழி, அந்த மாணவிக்கான சாதிச் சான்றிதழை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன், அந்த மாணவியை, அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எந்தவிதக் கட்டணமுமின்றி சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மற்ற மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். கனிமொழியின் இந்த திடீர் நடவடிக்கை காட்டு நாயக்கர் சமூக மக்களை ஆனந்தக் கண்ணீரில் நனைத்துள்ளது.