கேரளா மாநிலத்தில் அடுத்தடுத்து 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது அம்மாநிலத்தையே புரட்டியெடுத்தது. இதில் இளம் பெண்ணான விஸ்மயாவின் தற்கொலை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதல்வர் பினராய் விஜயன் ஏற்கனவே உள்ள வரதட்சணைக்கு எதிரான கேரள அரசின் 10ம் சட்டப் பிரிவான 1961 (NO. 28OF1961)ல் சொல்லப்பட்டிருப்பதை மேலும் கடுமையாக்கி 2021ன் புதிய சட்டத்திருத்தத்தை அறிவித்திருந்தார். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் கடுமையான குற்றம். அது தண்டனைக்குரியக் கிரிமினல் குற்றம். வரதட்சணை வாங்கினால் அரசுப் பணியாளர் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்றும் அறிவித்திருந்தார். கேரளாவில் நடந்த இந்த சம்பவங்களை ஜூலை 21-23, ஆகஸ்ட் 04-06 ஆகிய தேதியிட்ட நக்கீரனில் விரிவாகவே வெளிப்படுத்தியிருந்தோம். தற்போது வரதட்சணைக் கொடுமைச் சட்டம் கேரளாவில் தன் கடும் பாய்ச்சலைக் காட்டியுள்ளது.
அதிக வரதட்சணை கேட்டு விஸ்மயா அவரது கணவரால் கடுமையாக டார்ச்சர் செய்யப்பட்டதால், அதைத் தாங்கமுடியாத அவர் தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அச்சம்பவம் பற்றிய விசாரணையை கேரள காவல்துறை துவங்கியது. கேரளாவின் புதிய வரதட்சணைச் சட்டத்தின் படி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையின் இயக்குநர், விஸ்மயாவின் கணவர் பணியாற்றும் துறையின் அதிகாரி ஆகிய இரு தரப்பினரும் இச்சம்பவம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர். அதில் பெறப்பட்ட வாக்குமூலங்களையும் அவர்கள் விசாரித்ததை பற்றிய அறிக்கையையும் அரசுக்கு அனுப்பியிருந்தனர். அந்த அறிக்கையின்படி, விஸ்மயாவின் கணவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விபரங்கள் இதுதான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்..
விஸ்மயா தற்கொலைக்குப் பின்பு துறை ரீதியாக அவரது கணவர் கிரண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அதன் பிறகே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. கருநாகப்பள்ளி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டர் வாகன ஆய்வாளராக வேலை பார்க்கும் கிரண்குமாருக்கும் கொல்லம் சடையங்குளம் பகுதியின் ஸ்ரீ விக்ரமனின் மகள் விஸ்மயாவிற்கும் திருமணம் ஆகியிருக்கிறது. திருமணத்தின் போதே, அரைக் கிலோவிற்கும் மேலாக நகைகள், திருமணச் செலவு, புத்தம் புதிய மாடல் டொயோடா கார் மற்றும் தேவையான அனைத்து வசதியான பொருட்கள் என வரதட்சணையாக வாரிக்கொடுத்தே விஸ்மயாவை புகுந்த வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர். அந்தப் புதிய டொயோட்டோ வாகனத்தில் தான் கிரண்குமார் வீட்டிற்கே போய் இறங்கியிருக்கிறார் புதுமணப்பெண் விஸ்மயா. ஆரம்பத்திலிருந்தே அந்த கார் தனக்கு வேண்டாம் என்று வேறு புதிய கார் வேண்டுமென்று அடம்பிடித்திருக்கிறார் கிரண்குமார். அதோடு, மேலும் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை தொடர்ந்து டார்ச்சர் செய்து அடித்திருக்கிறார். தவறு செய்துள்ளார். வரதட்சணையாகக் கிடைத்த அந்தக் காரை காரணமாக வைத்துத்தான் கிரண் குமார் அட்டூழியம் செய்திருக்கிறார். இதனால் விஸ்மயாவின் உடல் முழுக்கக் கீறல்கள். இவரது தொடர் டார்ச்சர் தாங்கமுடியாமலும், தனது பெற்றோரை மேலும் சிரமப் படுத்தக்கூடாது என்றும் விஸ்மயா ஜூன் 22ம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார்.
இது மட்டுமல்ல கடந்த ஜனவரி 19, 2020ல் நள்ளிரவு 2 மணியளவில் அந்தக் காரில் விஸ்மயாவின் வீட்டிற்கு வந்த கிரண்குமார், அதீத போதையிலிருந்திருக்கிறார். கேட்டின் வெளியே இருந்தபடி விஸ்மயாவின் உடன் பிறந்த அண்ணனும் கப்பற்படையில் பணியிலிருப்பவருமான விஜித்திற்கும் போன் போட்டு, “நான் வெளியே இருக்கேன். கேட் கதவைத் திற” என்று கத்தியிருக்கிறார். இந்த இரவுப் பொழுதில் ஏன் வந்தார் என்றுப் திகைத்துப்போன விஜித் கேட்டை திறக்க, அதில் இடித்துக் கொண்டு காரில் ஸ்பீடாக உள்ளே வந்திருக்கிறார் கிரண்குமார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த விஸ்மயாவை இழுத்துப் பிடித்து அவரது அண்ணன் முன்பாகவே குடி போதையில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைக்கண்டு பதறிய விஸ்மயாவின் அண்ணன் அவரை தடுக்க, அவரையும் அடித்திருக்கிறார் கிரண்குமார். இந்தக் களேபரத்தில் விஸ்மயாவின் தந்தை ஸ்ரீ விக்ரமன் வெளியே வந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடியிருக்கிறார் கிரண்குமார். அது சமயம் கிரண்குமார் பெர்முடாஸ் அணிந்திருந்தார். அந்த நேரத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட விஜித், எஸ்.ஐ.யிடம் நடந்ததைச் சொல்ல, எஸ்.ஐ அன்றிரவே கிரண்குமாரை மடக்கி காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார். அது சமயம் அவர் போதையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளனர் போலீஸார். விடிந்ததும் விஸ்மயாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஸ்டேசனுக்கு வந்திருக்கிறார்கள். வழக்குப் பதிவு என்ற சூழல் வந்தபோது, வழக்கு வேண்டாம்; வழக்குப் போடப்பட்டால் அரசுப் பணியிலிருக்கும் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்; வேலை பறிபோய்விடும்; என்ற பச்சாதாபம் காரணமாக விஸ்மயாவின் பெற்றோரும் உறவினர்களும் வழக்குப் போடாமல் அங்கேயே விவகாரத்தைப் பேசி முடித்துள்ளனர்.
கிரண்குமாருக்கு கார் தான் பிரச்சனை. அதன் காரணமாகவே விஸ்மயா அவரால் கடும் டார்ச்சருக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். கார் கிரண்குமாருடைய சொத்துமல்ல. அது விஸ்மயாவின் பெற்றோர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, அது விஸ்மயாவின் சொத்து. அதில் கிரண்குமார் சட்டப்படி உரிமை கோர முடியாது. வரதட்சணையாகக் கிடைத்த காருக்காக கிரண்குமார் அட்டூழியம் செய்து விஸ்மயாவைத் தொடர்ந்து அடித்திருக்கிறார். தவறு செய்திருக்கிறார். இதன் காரணமாகவே விஸ்மயா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். "ஒரு பெண்ணின் சாவிற்குக் காரணமான கிரண்குமார் குற்றவாளி" என்று கிரண்குமார் உட்பட விஸ்மயாவின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் சாட்சிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் வாக்கு மூலம் பெற்று வரதட்சணைக் கொடுமைக்குரிய அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள் தொடர்புடையத் துறையினர் என்கிறார்கள் இதன் உள் விவரம் அறிந்தவர்கள்.
துறை ரீதியான மற்றும் தொடர்புடையத் துறையின் இயக்குநர் ஆகியோரின் விசாரணை அறிக்கையின் படி தற்போது அரசு கிரண்குமாரை அரசுப் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறது. இதனால் அவர் வேறு எந்தப் பணியிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அனைவரிடமும் ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டுள்ளது. ஒரு அரசுப் பணியாளர் பணியிலிருக்கும் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி வேலை பார்க்க வேண்டும் என்பதற்கான மேனுவல் எனப்படும் 'கோட் ஆஃப் கான்டக்ட்' விதிகள் உள்ளன. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் ஆரம்பத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார். பின்பு டிப்பார்ட்மென்டல் விசாரணையின் அறிக்கையையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார். வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியது நிரூபணமாகியுள்ளது. மேலும், இதில் அரசுத் தரப்பில் சொல்லுவது என்னவெனில், "இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட், கிரண்குமார் மீதுள்ள கிரிமினல் வழக்குகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அரசு, அரசுப் பணியாளரின் கோட் ஆஃப் கான்டக்ட் படி கிரண்குமார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், நீதிமன்றத்தில் கிரண்குமார் தன் மீது தொடரப்பட்ட வழக்கை அவர் தொடர்ந்து நடத்தலாம். வாதாடலாம். அது அவரின் உரிமை. இதில் அவர் மீதான அரசு நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது. அரசைப் பொறுத்தவரை, இந்த அரசுப் பணியில் இருப்பதற்கு கிரண் குமாருக்கு யோக்கியதை இல்லை. இந்த விதிமுறைகள் தற்போது அரசுப் பணியிலிருக்கும் பணியாளர்களுக்கும், அரசு வேலை பார்க்கத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையானது" என்கிறது.
தொடர்ந்து அடுத்த அடியாக, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளாட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் கவுன்சிலர்கள் முதல் சேர்மன் எம்.டி. வரையிலும் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்குச் சில கடமைகள் உள்ளன. நீங்கள் திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. மேலும், அவர்கள் பொறுப்பிலிருக்கும் போது திருமண நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டியிருக்கும். அப்படிப் போகும் போது அந்தத் திருமணத்தில் வரதட்சணை கொடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்புதான் அந்தத் திருமணத்தில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். பிற்காலத்தில் அது தொடர்பாக விவகாரம் ஏதும் வழக்கு வந்தால், அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று ஆகஸ்ட் 11 அன்று நடந்த சட்டசபையில் அறிவித்த பினராய் விஜயன், இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறார்.
இதுகுறித்து நாம் விஸ்மயாவின் உடன் பிறந்த சகோதரன் விஜித்திடம் பேசியபோது, “அப்பா அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு என் தங்கை இப்படி ஒரு முடிவு எடுத்தது ரொம்ப வேதனையா இருக்கு. அவன் டார்ச்சர் பண்ணதுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. ஆனால், கேரள வரலாற்றில், கேரள சிவில் சர்விஸ் ஆக்ட் படி தப்பு பண்ண ஒருத்தன சர்வீஸ்ல இருந்து தூக்கியிருப்பதையே மிகப் பெரிய முதல் வெற்றியா பாக்குறோம். சாதாரண மனிதரான எங்களுக்கு முதல்வர் பினராய் விஜயன் மூலம் நல்ல நீதி கிடைச்சிருக்கு. அவருக்குத் தான் நாங்க நன்றி சொல்லணும். முதல்வரின் இந்தத் தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் நல்லதொரு எக்சாம்பிள். என் தங்கையின் மூலம் கேரளப் பெண்களுக்கு ஒரு விடிவு பிறந்திருக்கு” என்றார் வேதனை மண்டிய குரலில்.
வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக முதல்வர் பினராய் விஜயன் எடுத்த இந்த நடவடிக்கை கேரளாவில் கனமான வரவேற்பைப் பெற்றதோடு, பெண்கள், அவர்களது அமைதியான வாழ்க்கைக்கும் பெற்றோர்களின் நிம்மதிக்குமான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறது. கேரளாவின் இந்த முடிவை வரலாறு நீண்ட காலத்திற்குப் பேசும் என்பது மறுக்கமுடியாததே.