
ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை சமீபத்தில் திறந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை அரசு நிறைவேற்றாததால் திறக்கப்பட்ட மது கடைகளுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
மது கடைகள் திறக்கப்பட்டபோது எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்த ரஜினிகாந்த், மது கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து டிவிட்டரில் ரஜினி, ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவு செய்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்‘ என சுட்டிக்காட்டுகிறார். ரஜினியின் இந்த ட்வீட், பரபரவென ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.
எடப்பாடி அரசுக்கு எதிராக ரஜினி கூறியுள்ள இந்த கருத்தை கடந்த காலங்களில் அவர் வெளிப்படுத்திய பஞ்ச் டயலாக்கோடு நினைவுக் கூறுகின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக, அதிமுக அரசுக்கு எதிராக கடந்த காலங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களில் மிக பரபரப்பாக மக்கள் மத்தியில் எதிரொலித்த டயலாக், ’ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது‘ எனபதுதான்.
1996-ல் திமுக-தமாக கூட்டணியை உருவாகிய போது ரஜினி கூறிய அந்த டயலாக், மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு இணையாக, அதிமுக அரசுக்கு எதிராக தற்போது தெரிவித்துள்ள கருத்தை ஒப்பிடுகின்றனர் அவரது ரசிகர்கள். அன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த வாய்ஸ் கொடுத்தார் ; இன்றைக்கு மது விலக்கு கொள்கையை அமல்படுத்துங்கள் என்கிற ரீதியில் எடப்பாடிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் என்கின்றனர்.

அதேசமயம், தேர்தல் அரசியலில் நேரடியாக இறங்கும் போது தனது முதல் கொள்கை பிரகடனமாக பூரண மது விலக்கு விசயத்தை ரஜினி கையிலெடுக்கவிருக்கிறார் என்பதற்கான அறிகுறிதான் இது! முழுமையான மது விலக்கை கொண்டு வருவோம் என தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனவே சொல்லியிருந்தாலும், ரஜினி அதனை அறிவிக்கும் போது தமிழக பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும், ரஜினியின் கொள்கை பிரகடனங்களில் முதலாவதாக இருக்கப் போவது மது விலக்கு கொள்கைதான் என்கிறார்கள் ரஜினியின் நடவடிக்கைகளை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள்.