இந்து என்பது மதமல்ல என்று பரவலாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்துமதமாக ஆக்கப்பட்டிருந்த லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.
பசவா
ஆங்கிலேயர்கள்தான் இந்துமதம் என்று ஒன்றை உருவாக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுவதுண்டு. இந்து மதத்தை ஏற்காதவர்களும் அதை ஏற்றே ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சாதிகளை ஏற்காதவர்களும் சாதிகளை குறிப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பழங்காலத்தில் சைவ மதம் மட்டும் இருந்தது என்றும், சாதிகள் அப்போது கிடையாது என்றும் கூறப்படுகிறது. ஆரியர்கள் மூலமாக நுழைந்த வேதமதம்தான் மக்களை வர்ணங்களாகவும், சாதிப்பிரிவுகளாகவும் பிரித்து வைத்தது என்று கூறுகிறார்கள்.
இதே சிந்தனையில்தான் கர்நாடகத்தில் பசவா என்பவர் லிங்காயத்திஸம் என்ற பிரிவை உருவாக்கினார். அந்த பிரிவினர் தங்களுக்கென்று லிங்க வழிபாட்டை கடைப்பிடித்தார்கள். இந்து மதம் சொல்கிற சாதிகளை அவர்கள் ஏற்கவில்லை. மறுபிறவி, கர்மா என்கிற வினைப்பயன் ஆகியவற்றை அவர்கள் புறந்தள்ளினார்கள்.
12 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த பிரிவு, 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் வலுப்பெற்றது. தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் மாநாடுகளை கூட்டி கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை தற்போதைய முதல்வர் சித்தராமய்யா பரிசீலிப்பதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு நீதிபதி தலைமையில் குழுவை அமைத்தார். அந்தக் குழு லிங்காயத்துக்களின் கோரிக்கை சரிதான் என்று அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஏற்ற முதல்வர் சித்தராமய்யா, லிங்காயத்துகளை தனி மதமாக ஏற்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டிலும், இத்தகைய கோரிக்கை எழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஏற்கெனவே, திருநெல்வேலி பகுதியில் சைவ மதம் என்று அறிவிக்கக் கோரி ஒரு பிரிவினர் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், முதல்வர் சித்தராமய்யாவின் முடிவை மத்திய அரசு எப்படிப் பார்க்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த முடிவை ஏற்றால் இந்து மதத்திலிருந்து பல குழுக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோரும் நிலை வரலாம். கர்நாடக அரசின் முடிவை ஏற்க பாஜக அரசு மறுத்தால், கர்நாடகா தேர்தலில் பாஜக துடைத்தெறியப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் சித்தராமய்யாவின் இந்த முடிவு, இந்துத்துவா பேசுவோருக்கு மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது.