இந்திய பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜிவ்காந்தி தமிழத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது இலங்கையில் ஈழம் என்கிற தனிநாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தான் என சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் கார்த்திகேயனால் விடுதலைப்புலிகள், அதன் ஆதரவாளர்கள் என பெரும் பட்டாளமே கைது செய்யப்பட்டனர்.
தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. தடா நீதிமன்றம் 23 பேருக்கு தண்டனை வழங்கியது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் என 7 பேருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. அதில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் 4 பேருக்கு மட்டும் தூக்குதண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த 7 பேரும் 1991 முதல் சிறையில் இருந்து வருகிறார்கள்.
வழக்கு விசாரணையில் இருந்தபோதே நளினி கர்ப்பமாக இருந்தார். சிறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். உச்சநீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்பு நளினி உட்பட 4 பேரும் தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கருணை மனு தமிழக அரசுக்கு அனுப்பினார்கள். 1997 காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த கலைஞர் மு.கருணாநிதி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பினார்.
அப்போது கணவரை பறிக்கொடுத்து துக்கத்தில் இருந்த ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி, நளிளியை மன்னித்துவிட்டேன் என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதினார். குடியரசு தலைவர் பெண் குழந்தையின் தாய் என்ற அடிப்படையில் அவருக்கு கருணை அளித்து தூக்குதண்டனையை ரத்து செய்தார். மற்ற மூவர் விவகாரத்தை கிடப்பில் போட்டுவைத்தார்.
அதன்பின் இந்த வழக்கில் உள்ள 7 பேரும் நிரபராதிகள், சிக்கவைக்கப்பட்டவர்கள் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலாக வைத்தது. அதன்பின் தமிழகத்தில் படிப்படியாக அந்த கோரிக்கை எழுந்தது. தமிழக காங்கிரஸ்சும், அதிமுகவும் எதிர்த்து வந்தது.
இந்நிலையில் 2007ல் ராஜிவ்காந்தியின் மகளான பிரியங்காகாந்தி ரகசியமாக வேலூர் மத்திய சிறைக்கு வந்து நளினியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடிவிட்டு சென்றார்.
அதன்பின் இலங்கையில் ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். ஈழமக்கள் கொத்துகொத்தாக இலங்கையின் சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்பட்டார்கள்.
2011ல் முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரின் கருணை மனுவை குடியரசுதலைவர் ரத்து செய்தார். இதனால் இவர்களை தூக்கில் போட அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா ரகசியமாக உத்தரவிட்டார். அந்த தகவல் வெளியே கசிய தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தூக்கு தண்டனைக்கு எதிராக களமாடினார்கள். இறுதியில் அதிமுக அரசாங்கம் நீதிமன்றத்தை கைகாட்டிவிட்டு பாலுக்கும் காவல் – பூனைக்கும் காவல் என்ற கதையாக நின்றது. தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளோம், எங்களை விடுதலை செய்யுங்கள் என மனுதாக்கல் செய்தனர். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தவர், மாநில அரசாங்கம் விரும்பினால் விடுதலை செய்யலாம் என்றார்.
2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த தீர்ப்பு வந்தது. இதனை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எதிர்த்தது. 2014 ஜனவரி மாதம், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீரென ஈழத்தாயாக அவதாரம் எடுத்தவர் காங்கிரஸ் அரசாங்கம் இதில் ஒரு முடிவு எடுக்கவில்லையெனில் மாநில அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி விடுதலை செய்வேன் என்றார்.
மத்திய அரசின் புலனாய்வுத்துறை, நாங்கள் விசாரித்த வழக்கில் எங்கள் அனுமதியில்லாமல் மாநில அரசு முடிவு எடுக்ககூடாது என மனுப்போட, உச்சநீதிமன்றம் விடுதலைக்கு தடைவிதித்தது. அதன்பின் 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அவர்கள் இதில் சிபிஐக்கு ஆதரவாக நின்றனர்.
இந்நிலையில் தான் மலேசியா, சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தலைவரும், படுகொலை செய்யப்பட்ட ராஜிவ்காந்தியின் மகனுமான ராகுல்காந்தி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு இந்திய வம்சாவளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் கூறும்போது, பிரபாகரன் உடலை தொலைக்காட்சியில் காட்டியபோது எங்கள் மனம் மகிழ்ந்திருக்க வேண்டும், என் மனம் மகிழவில்லை. ஏன் அவர்கள் (சிங்கள இராணுவத்தினர்) இந்த மனிதரை அவமானப்படுத்துகிறார்கள் என வருந்தினேன். அவரது குழந்தைகளுக்காக நானும், என் சகோதரியும் மிகவும் வருந்தினோம்.
எனது பாட்டி இந்திராகாந்தி நான் கொல்லப்படுவேன் என்றார். அவர் கொல்லப்பட்டபின் அரசியலுக்கு வந்த என் தந்தை ராஜிவ்காந்தியிடம் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்றேன். நான் அமெரிக்காவில் இருந்தபோது என் தந்தை கொல்லப்பட்டது சொல்லப்பட்டது. அரசியலுக்கு வந்தபின்பு தீமையை எதிர்த்து போராடுகிறோம், அவர்கள் எதிர்தது போராடியதால் கொல்லப்பட்டார்கள். தீமை அது கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய படையென்றார். இப்படி அவர் கூறி நானும், என் சகோதரியும் மன்னித்துவிட்டோம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அப்படி கூறியதால் ஆயுள்தண்டனை கைதிகளாக உள்ளவர்கள் விடுதலையாகிவிடுவார்களா?.
நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறார்கள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை நன்கறிந்தவர்களும், பிரதமர் மோடியை அறிந்தவர்களும். பாஜகவின் கொள்கை தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் இருந்தால் முழுவதும் தண்டனை பெற வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. நாங்கள் தான் உண்மையான தேசபக்தர்கள், தேச பாதுகாவலர்கள் என்கிற பெயரை மக்களிடம் புகுத்தியுள்ளார்கள். இதனால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பாஜகவுக்கு சிக்கல் உள்ளது.
அதையும் மீறி ஆயுள்தண்டனை கைதியாக உள்ளவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்தால் காங்கிரஸ் தன் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும், இதனை சமாளிக்க வேண்டும். ஒருவேளை காங்கிரஸ்சிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லையென்றாலும், இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம்மிருந்து எதிர்ப்பு வரும். முன்னால் பிரதமரை படுகொலை செய்தவர்களையே விடுதலை செய்தால், காஷ்மீர் தீவிரவாதிகள், பஞ்சாப் தீவிரவாதிகள், அசாம் மாவோயிஸ்ட்கள் உட்பட வடகழக்கு மாநிலத்தை சேர்ந்த தீவிரவாதிகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள். அவர்களும் தங்களை விடுதலை செய்யவேண்டி கேட்பார்கள். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டி வரும், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இந்திய புலனாய்வு அமைப்புகள் ராஜிவ் கொலையாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்தியரசிடம் அறிக்கை தந்துள்ளன. இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலில் மத்தியரசு உள்ளதால் சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, தற்போது ராகுல்காந்தி என யார் மன்னித்தாலும் விடுதலை என்பது கடினமானது தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.