மதுரை மேலூரில் நடைபெற்ற விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து பேசிய தினகரன், விரைவில் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்றும் அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் தனது கருத்தினை பதிவு செய்த மேட்டூர் அதிமுக எம்எல்ஏ செம்மலை,
''தினகரனின் பேச்சு அர்த்தமற்றது மட்டுமல்ல, அவர் சொல்லும் காரணமும், நோக்கமும் சரியானது அல்ல. ஒரு இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் இன்னொரு இயக்கத்தை கைப்பற்றுவேன் என்பது எப்படி சாத்தியமாகும்? அப்படி அவர் சொல்வது, அவரை நம்பி வந்த அதிருப்தியாளர்களை மேலும் நம்ப வைப்பதற்காக சொல்லுகிற பசப்பு வார்த்தைகள்.
காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட அதிமுக தொண்டன் இரட்டை இலை சின்னத்தை மறக்கவும் மாட்டான், இரட்டை இலை சின்னம் இல்லாத ஒரு இடத்தை தேடிப்போகவும் மாட்டான். அதேபோல எம்ஜிஆர் கண்ட அண்ணா உருவம் பதித்த அந்த கொடியை கையிலே பிடிப்பானேயொழியே வேறு கொடியை அவன் கையிலே ஏந்த மாட்டான்.
இப்போது டிடிவி தினகரன் ஆரம்பித்திருக்கிற கட்சியை பார்க்கிறபோது, திராவிடமும் நீக்கப்பட்டுவிட்டது, அண்ணாவின் படமும் நீக்கப்பட்டுவிட்டது. திராவிடம் என்ற வார்த்தை இல்லை, அண்ணா என்ற வார்த்தையும் இல்லை, எம்ஜிஆரும் மறைக்கப்பட்டுவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், டிடிவி தினகரனுக்கு திராவிடம் பற்றியும் தெரியாது, அண்ணாவையும் தெரியாது, எம்ஜிஆரையும் தெரியாது.
ஜெயலலிதாவை வைத்து ஆதாயம் தேடியவர்கள் அந்த நன்றி விசுவாசத்திற்காக ஒப்புக்கு ஜெயலலிதாவின் படத்தை போட்டு, ஒரு தனிக்கொடியை உருவாக்கி, ஒரு கட்சியையும் உருவாக்கிவிட்ட பிறகு தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே அர்த்தமேயொழிய, இனிமேல் இன்னொரு கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது.
அது எப்படியென்றால் ஒருவன் தனக்கென்று சொந்த வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபோன பிறகு, ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டை கைப்பற்றுவேன் என்று சொல்வதைப்போலதான் அவரது பேச்சு அமைந்திருக்கிறது. எனவே அஇஅதிமுக அவருக்கு வாடகைக்கு வீடும் அல்ல. அவருக்கு விற்பனை செய்கிற அளவுக்கு இந்த இயக்கம் இல்லை.
அதிமுகவை பொருத்தவரையில் பதவி கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை, இது கிடைக்கவில்லை என்ற அதிருப்தியாளர்கள்தான் தினகரன் பக்கம் சென்றிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தில் இருந்து சில அதிருப்தியாளர்களை வைத்து ஒரு கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சி அதிக நாள் நீடிக்காது. அதற்கு ஆயுளும் குறைவுதான். எதிர்பார்ப்போடு வந்த தொண்டர்களையும், தன்னை நம்பி வந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களையும் திருப்திப்படுத்த இப்படி பேசி வருகிறார்.
டெல்லி ஐகோர்ட், அவர் கேட்கும் கட்சி, சின்னத்தை கொடுங்கள் என்று சொல்லும்போதே தனி கட்சி, தனி சின்னம் என்று வந்துவிடுகிறது. இவர் தனி அமைப்பாக இருந்து அஇஅதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவோம் என்று சொல்கிற டிடிவி தினகரன், தனிக்கொடியை ஏன் வெளியிட வேண்டும்? கேட்டால் அதுவரை தேர்தலை சந்திப்பதற்கு என்று கூறுகிறார். ஏன் இப்படி கூறுகிறார் என்றால் பதவி ஆசை. தன்னை முன்னிலைப்படுத்தி, தான் வளர மற்றவர்களை ஏமாற்றுகிறார். ஏன் தேர்தலில் நிற்கிறீர்கள். தேர்தலில் நிற்காமல் கைப்பற்றி காட்ட வேண்டியதுதானே?
அஇஅதிமுக என்ற கட்சிக்கு என்று ஒரு பைலா (bylaw) இருக்கிறது, விதிமுறை இருக்கிறது. அதனை எப்படி கைப்பற்ற முடியும்? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களை ஏமாற்ற இப்படி பேசி வருகிறார். அவர்களும் இவரது பேச்சை நம்பி இருக்கிறார்கள். இந்த ஏமாற்று வேலை ரொம்ப நாள் எடுபடாது.
ஒவ்வொரு தலைவனின் வாழ்க்கையையும் நாம் திருப்பிப்பார்க்க வேண்டும். ஒரு தலைவன் நேர்மையானவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் செய்த குற்றங்கள், இவர் மீது உள்ள வழக்குகளை நாடு அறியும். இப்படிப்பட்டவர் தமிழ்நாட்டுக்கு தலைவராக வந்தால் என்னாகும்'' என்று கூறினார்.