Skip to main content

16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

16th Century Navakanda Sculpture Discovery!

சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் ஒன்றை சிவகங்கை தொல் நடைக் குழு அடையாளம் கண்டுள்ளனர்.

 

சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக் கடை முருகன் முத்துப்பட்டியில் தனியார் இடத்தில் சிலை ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறியதாவது;

 

நடுகல்:

இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பது சங்க இலக்கிய காலம் தொட்டு தமிழர் மரபாக போற்றப்பட்டுள்ளது, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நடுகல் அமைக்கும் முறை பற்றி கூறப்பெற்றுள்ளது. அதைப்போல தலைவனின் வெற்றிக்காக கொற்றவையின் முன்பு தன் தலையை கொடுக்கும் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண இலக்கியங்களில் காண முடிகின்றன.

 

நவகண்டம்:

நவகண்டம் என்பது உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு உயிரை விடுவதாகவும், அவிப்பலி, அரிகண்டம் தூங்குதலை என்பது இன்ன பிற வகையாகவும் அறிய முடிகிறது. அரசர் போரில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொற்றவையின் முன்பு தன் தலையை வீரர் பலி கொடுத்தலே இதன் உட்பொருளாகும்.

 

சங்க இலக்கியக் காலம்தொட்டு இது காணப்பெற்றாலும் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இம்மரபு உச்சம் தொட்டது எனக் கொள்ளலாம்.

16th Century Navakanda Sculpture Discovery!

நவகண்ட சிற்பம்:

சுமார் மூன்றடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில். இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது, தலைமுடி கொண்டையாகவும், சிதறிய மூன்றுகற்றைகளாகவும் காட்டப் பெற்றுள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாட்டோடு தொங்குகின்ற ஆபரணம் உள்ளது. கையில் கழல் போன்ற ஆபரணம் காட்டப்பட்டுள்ளது. வேலைப்பாடுடன் கூடிய ஆடை காணப்படுகிறது. மேலாடை தொங்குவதைப் போல காட்டப்பட்டுள்ளது, இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள் ஒன்றும் உள்ளது. கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும் மற்றொரு கை சிதைவு பட்டும் காணப்படுகிறது. கழுத்தில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக  கத்திக் குத்தியபடி இந்த நவகண்ட சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

திருப்புவனத்தில் நவகண்ட சிற்பமும் மல்லலில் நவகண்டக் கல்வெட்டும்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளிகோவிலில் இரண்டு நவகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் காளையார்கோவில் ஒன்றியம் மல்லலில் உள்ள காளி கோவிலில் முதலாம் குலோத்துங்கசோழனின் நலனுக்காக அம்பலக் கூத்தன் என்பவன் தன்னை பலி செய்து நவகண்டம் கொடுத்த கல்வெட்டு ஒன்றும் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என கொற்றவையை வேண்டிக் கொண்டு தன் தலையை பலிகொடுத்து வரலாறாய் நிற்கும் இந்த நவகண்ட சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு 16- ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். சிவகங்கை பகுதியில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் அடையாளம் காணப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்த சிற்பத்தை சிவகங்கை தொல் நடைக்குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இடத்துக்காரர் சிவகங்கை அருங்காட்சியகத்திற்கு வழங்க  முடிவுசெய்து இருப்பது பெரும் பாராட்டுக்குரியது என்று கூறினார்.

 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
bagwari gang style Robbery in Sivaganga

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது. 

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.