ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என பதிவிட்டுள்ளது பற்றி மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், ''நீண்ட காலமாக விவாதத்தில் இருந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்றைய அரசியல் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட சூழலில் பிரபலமான ஒருவர் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்தான்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பு கமல், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார். நட்பு ரீதியாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அதுபோலவே நட்பு ரீதியாக இதனை வரவேற்கிறோம்.
நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் என்று சொல்லியிருக்கிறார். இதற்கான தெளிவான விளக்கத்தை டிசம்பர் 31ஆம் தேதி எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
கமல், ரஜினி வருகையெல்லாம் தங்களை பாதிக்காது என ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் சொல்கிறார்களே?
கட்சிக்கு அடிப்படையாக கட்டமைப்பு அவசியம்தான். பல ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் அந்த கட்சிகளுக்கு கட்டமைப்பு உள்ளதுதான். ஓட்டுப்போடப்போகிற 200 மீட்டருக்கிடையில் 20 சதவிகித பொதுமக்கள் அப்போதுதான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என கருத்துக்கணிப்புகளே சொல்லியிருக்கின்றன.
மக்கள் மனதில் தாங்கள் விரும்பிய தலைவர் யார், விரும்பிய சின்னம் எது என்று மனதில் பதிந்துவிட்டால் மாற்றம் நடக்கும். தேர்தலுக்கு போதுமான காலம் இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிற அளவுக்கு ஆண்ட கட்சியும், ஆளுங்கட்சியும் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு கடினமான சூழல் ஏற்படும்.
தேர்தலில் ரஜினி கட்சியுடன் ம.நீ.ம. இணையுமா?
“தேவைப்பட்டால் இணைவோம்” என்று கமல் 60 என்ற விழாவில் இருவரும் பேசினார்கள், போகப்போகத்தான் தெரியும். இருவரும் நெருக்கமான நண்பர்கள். களத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.