1969ல் காமராஜர், மொரார்ஜி போன்ற பெரு முதலாளிகளின் வேலைக்காரர்கள், இந்திராவின் முற்போக்கு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர்..
வங்கிகள் தேசிய மயம், மன்னர்களுக்கு மானியம் ஒழிப்பு, தொழில்துறை வளர்ச்சி, பசுமைப் புரட்சி போன்ற யோசனைகளை நிறைவேற்ற முடியாமல் இந்திரா தவித்தார்.
நேரு இறந்தபிறகு, சோவியத் ஆதரவு நிலையை கைவிட்டு, அமெரிக்க ஆதரவு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்த பெருந்தலைகள் கூறத்தொடங்கினார்கள். ஆனால், தனது தந்தை வழியில் அணிசேரா மூன்றாம் உலகநாடுகளின் அமைப்பில் இருந்துகொண்டே, சோவியத் ஆதரவு நிலையை மேற்கொண்டார் இந்திரா.
சோவியத் யூனியனின் சில சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்த அவர் முயற்சித்தார். அவருடைய நோக்கத்திற்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால், குடியரசுத்தலைவர் தனக்கான ஆளாக இருக்க வேண்டுமே? அதற்காக காங்கிரஸ் தலைமை குடியரசுத்தலைவர் பதவிக்கு அறிவித்த சஞ்சீவரெட்டியை எதிர்த்து தனது வேட்பாளராக வி.வி.கிரியை அறிவித்தார் இந்திரா.
அது மிக பரபரப்பான அரசியல். இந்திராவின் பதவி பறிபோகும் அபாயம் உருவானது. காங்கிரஸ் எம்.பி.க்களில் இந்திராவுக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அத்தகைய நிலையில்தான் கலைஞர் தலைமையிலான திமுக இந்திரா காந்தியை ஆதரிக்க முன்வந்தது. ஆட்சியை காப்பாற்றியது மட்டுமின்றி, இந்திரா அறிவித்த வி.வி.கிரியை குடியரசுத்தலைவர் தேர்தலில் ஜெயிக்க வைத்ததிலும் திமுக முக்கிய பங்கு வகித்தது. திமுக நினைத்திருந்தால் அந்த நேரத்திலேயே இந்திராவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க முடியும்.
ஆனால், இந்திராவின் முற்போக்கு திட்டங்களுக்காவே திமுக ஆதரித்தது. தமிழகத்திற்கு சேலம் உருக்காலையைப் பெற்றுக் கொடுத்தது திமுக. காங்கிரஸின் மூத்த பிற்போக்குத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு இந்திரா தனக்கான காங்கிரஸ் கட்சியை 1969ல் உருவாக்கினார்.
இப்போது 2019ஆம் ஆண்டு. காங்கிரஸ் கட்சியில் ஊழல் மற்றும் பிற்போக்குத் தனங்கள் நிரம்பிய, பதவியாசை பிடித்த மூத்த தலைவர்கள் பெருகிவிட்டார்கள். காங்கிரஸின் பிரகாசமான வெற்றிவாய்ப்பை கெடுத்து படுதோல்வியடையச் செய்ததில் இவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். இந்தியாவை 50 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளும் பாஜகவின் முயற்சியை தடுப்பதைக் காட்டிலும் தங்கள் பிள்ளைகள் எம்.பி. ஆவதில்தான் இவர்கள் குறியாக இருந்தார்கள்.
ராகுல் காந்தியும் அவருடைய சகோதரி பிரியங்காவும் மட்டுமே கடுமையான உழைப்பைக் கொடுத்தார்கள். அவர்களுடைய உழைப்பு அத்தனையும் வீணாகும் அளவுக்கு மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்தன. இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 65 சதவீதம்பேர் 35 வயதுக்கு கீழானவனர்கள். இவர்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு உண்டு. இளம் தலைவரான ராகுல் இவர்களை தனது பக்கம் ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இதை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஒரு இளம் தலைவர் தலைமையில் புதிய காங்கிரஸ் உருவாக்கப்பட வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திறமையான, காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று நடத்தக்கூடிய ஒரு தலைமையை ராகுல் உருவாக்க வேண்டும். இந்திய இளைஞர்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து, மாட்டுக் காவலர்கள் என்ற பேரிலும், ராமர் ஆதரவாளர்கள் என்ற பேரிலும் சிறுபான்மை மற்று தலித் மக்களை கொன்று குவிக்கும் கூட்டத்திடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் சமூகநீதி அரசியலை இந்தியா முழுமைக்கும் ராகுல் கொண்டு செல்ல வேண்டும் என்று காங்கிரஸில் ஒரு பிரிவினர் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பது, காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் ஆபரேஷனுக்காகத்தான் என்று இன்னொரு பிரிவினர் கூறுகிறார்கள்.
மூத்த தலைவர்கள் பதவி விலகி இளய தலைமுறைக்கு வழிவிடத் தவறினால், புதிய காங்கிரஸ் உருவாவதை தடுக்க முடியாது என்பதே பெரும்பான்மையான இளம் தலைமுறை காங்கிரஸாரின் கருத்தாக இருக்கிறது.