Skip to main content

இப்படிப்பட்ட கொடூர மனசாட்சியற்ற அரசை இந்தியா பார்த்ததில்லை : ஜோதிமணி கடும் கண்டனம்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

 

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் சென்றனர். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறை தடையை மீறி சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். தொற்றுநோய்த் தடுப்புச் சட்டப்படி ராகுல், பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது எனக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

ராகுல்காந்தி கைது குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி,

 

dg

 

''20 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமையோடு சேர்ந்து அது ஒரு கொலை. 

 

அந்தக் கொலை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அந்தக் கொலையைக் கண்டிப்பதற்குப் பதிலாக, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க அரசும் இந்தக் குற்றத்தை மறைத்து ஒரு வார்த்தைக் கூட கண்டிக்காமல் நள்ளிரவில் அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குக் கூட தெரியாமல் அப்பெண்ணின் உடலை அடக்கம் செய்துள்ளார்கள். 

 

இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மனசாட்சியற்ற ஒரு அரசாங்கத்தை இதுவரைக்கும் இந்தியா பார்த்தது இல்லை. எந்த ஜனநாயக நாடும் பார்த்திருக்காது. இந்தக் கொடும் செயலுக்கு நியாயம் கேட்டு, அந்த பரிதாபத்திற்குரிய பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்றார்கள். 

 

Rahul Gandhi

 

அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறை நடத்தி வன்முறையை ஏவிவிட்டுள்ளது. அவர்கள் இருவரையும் இந்த அரசுகள் கைது செய்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. இதுபோன்ற அடக்குமுறைகளை பிரிட்டீஷ் காலத்திலேயே எதிர்க்கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. 

 

இந்த தேசத்து பெண்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக இருக்கும். இதனை இன்று இந்த நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒரு தேசம் என்பது அடிப்படையில் பெண்களுக்கு பாதுகாப்பும் கௌரவமும் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். 

 

ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரமாக நடக்கிறது மோடி ஆட்சி. ஈவு இரக்கமற்ற மனசாட்சியற்ற ஆட்சியாக இந்த பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. இன்று ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். பிரதமர் வாய் திறக்கவில்லை. பணக்காரர்களுக்கு மட்டும் ஓடிவந்து முழங்குகிற பிரதமர், பெண்களைப் பாதுகாப்போம், கல்வி தருவோம் என வெற்று முழக்கத்தை சொல்லும் பிரதமருக்கு, இதனைக் கண்டிக்கிற தைரியும் இல்லை. இவர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம். 

 

Ad

 

இந்திய தேசத்தில் உள்ள 65 கோடி பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. உ.பி.யில் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் மட்டுமல்ல மரணத்திலும் மரியாதை இல்லாமல் செய்துள்ளனர். அந்தக் குடும்பத்தினர் என்ன பாடுபட்டிருப்பார்கள். பிணமாகக்கூட அந்தப் பெண்ணைப் பார்க்க மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. நாளை இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். பா.ஜ.க அரசை தொடர்ந்து பார்க்கிறோம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இந்த அரசு போற்றி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

 

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இந்தத் தேசத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் அரணாகக் களத்தில் நிற்போம். பா.ஜ.க அரசின் அடக்கு முறைகளுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது'' என்கிறார் உறுதியாக.