புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் “ஒரு மாணவர் கூட இல்லாத அரசுப்பள்ளி” என்ற தலைப்பில் கடந்த ஜூன் முதல் நாளில் நக்கீரன் இணையதளத்தில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் பிறகு மற்ற பத்திரிகைகள், ஊடகங்களிலும் அந்த பள்ளியைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியது. பள்ளியை மூடிவிடாமல் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். செய்திகளுக்கு பிறகு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா உத்தரவின் பேரில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச் செல்வம் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வுகள் செய்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பக்கத்து கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து வந்தனர். பின், பக்கத்து கிராமமான கறம்பக்குடி ஒன்றியம் முருங்கைகொல்லை கிராமத்தில் புதிய பள்ளி திறக்கப்பட்டதால் அனைத்து மாணவர்களும் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஆனால் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் ஆலங்குடி மற்றும் பல கிராமங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கச் செல்வதும் தெரிய வந்தது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியை கிராம மக்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் அவரை மாற்றினால் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதாகவும் வாழைக்கொல்லை கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததுடன் கிராம கூட்டத்தையும் கூட்டி முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த பணியிடமாற்ற கலந்தாய்வில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் வாழைக்கொல்லை அரசு பள்ளிக்கு ஆரோக்கியமேரி என்பவர் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். மாணவர்களே இல்லாத வாழைக்கொல்லை கிராமத்துப் பள்ளியில் பொறுப்பேற்றுக் கொண்ட ஆரோக்கியமேரி மற்றும் உதவி ஆசிரியர் ஆரோக்கிய லாரன்ஸ் ஆகியோர் கிராம மக்களிடம் பேசியதன் பயனாக இன்று 20 ந் தேதி ஒரே நாளில் 13 மாணவ, மாணவிகளை சேர்த்துள்ளனர்.
ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட வேண்டிய நிலையில் இருந்த அரசுப் பள்ளிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்காக துரிதமாக செயல்பட்ட மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச் செல்வம் மற்றும் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர் ஆகியோரை கல்வியாளர்கள் இளைஞர்கள் பாராட்டினார்கள்.