Skip to main content

தலைமையை மிஞ்சிய மாவட்ட அதிகாரம்! 

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

"கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து, அவற்றிற்குத் தனித்தனி மா.செ.க்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும்' என்ற கோரிக்கைக் குரல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்குள் பலமாக எழுந்தது. இரண்டு கழகங்களிலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதும், மேலும் சில மாவட்டங்களிலிருந்தும் இந்தக் குரல்கள் ஒலிக்கின்றன. குறிப்பாக, பழைய வடஆற்காடு மாவட்டத்தில்.

 

திருவண்ணாமலை மாவட்டம்

 

நம்மிடம் மனம் திறந்து பேசிய அந்த தி.மு.க. பிரமுகர் “"திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும், வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இதில் தெற்கு மா.செ.வாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தரணிவேந்தனும் உள்ளார்கள். இப்படி இங்கு இரண்டு மா.செ.க்கள் இருந்தாலும், வேலுவுடன் உள்ள சிலர், ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப் பாளர்களாகவே அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். வடக்கு, தெற்கு மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக இரண்டுமுறை அறிவாலயத்தில் ஆலோசனை நடந்தது. எனினும், ஏற்கனவே கட்சிப் பொருளாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் வேலு இருப்பதால், அவர் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தைப் பிரித்து, மேலும் அவரை சங்கடப்படுத்த வேண்டுமா என்று தலைமை தயங்குகிறது. அவரை சமாதானப்படுத்தும் விதமாகத்தான் அவருக்கு தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மாவட்டம் பிரிப்பு பற்றிய கோரிக்கை கட்சியினர் மத்தியிலும் இப்போதும் இருக்கிறது.

 

தரணிவேந்தன் பொறுப்பாளராக இருக்கும் வடக்கு மாவட்டத்தில் கோஷ்டி சண்டை அதிகம். அதனால் அதனை கிழக்கு, மேற்கு என பிரிக்க தலைமை விரும்புகிறது. மேலும் மத்திய மாவட்டம் என ஒன்றை உருவாக்கி அதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள போளுர் தொகுதியையும், தெற்கு மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தொகுதியையும் சேர்க்கலாம் என்று அறிவாலயம் யோசித்து வருகிறது'' என்கிறார் விரிவாகவே.

 

மத்திய மாவட்டம் என்று உருவானால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள எம்.பி அண்ணாதுரை, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் கம்பன், போளுர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேலு சிபாரிசு செய்வார் என கூறப்படுகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என முடிவெடுத்தால் வடக்கு மாவட்டத்தில் முன் னாள் மா.செ சிவானந்தம், செய்யார் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், செய்யார் வேல்முருகன் என பலரும் வேலுவிடம் பதவி கேட்கும் முடிவில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.விலும் மாவட்டம் பிரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வடக்கு மா.செ.வாக தூசி.மோகன் எம்.எல்.ஏவும், தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் உள்ளனர். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ என, வடக்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்றும், தெற்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்று புதிய மாவட்டங்களை உருவாக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது. முதல்வர் எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்களுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் உள் ளன. தேர்தல் நெருக்கத்தில் மாவட்டம் பிரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், தெற்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜன், மாணவரணி பீரங்கி வெங்கடேசன் போன்றோர் இப்போதே காய் நகர்த்திவருகின்றனர். வடக்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பால்கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பாரி.பாபு உட்பட சிலர் வரிந்துகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

வேலூர் மாவட்டம்

 

தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க.வில், வேலூர், காட்பாடி என இரண்டு தொகுதிகளைக் கொண்டு ஒரு மாவட்டமும், அணைக்கட்டு, குடி யாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் புறநகர் மாவட்டமும் உள்ளது. இதற்கு அப்பு, வேலழகன் என முறையே மா.செக்களாக உள்ளனர்.

 

தி.மு.க.வில் வேலூர் மாவட்டம் ஒன்றே ஒன்றுதான். இதனை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற குரலை கட்சியின் ஒரு தரப் பினர் பலமாக எழுப்புகின்றனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனோ, இதை விரும்பவில்லையாம். எனினும் அவரது ஆதரவாளர்களில் சிலரே மாவட்டத்தைப் பிரித்து துரை முருகனின் மகனும் வேலூர் எம்.பி.யு மான கதிர் ஆனந்த்தை மா.செ பதவியில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

 

இராணிப்பேட்டை மாவட்டம்

 

மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு என 4 தொகுதிகள் உள்ளன. இதில் அரக்கோணம், சோளிங்கர் தொகுதிகளில் தி.மு.க. வீக்காகவே உள்ளது. இந்த மாவட்டத்தை இரண் டாக பிரித்து வன்னியர் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது தி.மு.க.வினர் சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. நாங்களும் வலிமை யாகத்தான் உள்ளோம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது முதலியார் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் வாதம். வலிமை குறைந்த மாவட்டம் என தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக்கும் தலைமையிடம் கூறியிருப்பதால், இதனைப் பிரிக்கத் தலைமையும் விரும்புகிறது.

 

அரக்கோணம் (தனி), சோளிங்கர் தொகுதிகளை கொண்டு வடக்கு மாவட்டம் என்றும், இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை இணைத்து தெற்கு மாவட்டம் என்றும் உருவாக்க வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் கோரிக்கை. அப்படி உருவாகும்பட்சத்தில் வடக்கு மாவட்டத்தில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் அசோகன் உட்பட சிலர், அதைப் பெறத் துடிக்கிறார்கள். இரண்டு தொகுதிக்கு என்னால் மா.செ.வாக இருக்க முடியாது என மா.செ.காந்தி வேறு பதவிக்கு நகர்ந்ததால் தெற்கு மாவட்டத்திற்கு வன்னியரான குட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி, முதலியார் கோட்டாவில் ஆற்காடு எம்.எல்.ஏவும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஈஸ்வரப்பன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி உட்பட சிலர் களத்தில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.வில் மா.செ.வாக அரக்கோ ணம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ ரவி உள்ளார். அவர் எங்களை வளரவிடாமல் தடுக்கிறார் என வன்னியர், முதலியார் சமூகப் பிர முகர்கள் எதிர்ப்புகாட்டி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.விலும் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான முகமது ஜான் எம்.பி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனுவாசன், பெல்.கார்த்திகேயன் உட்பட சிலர் அந்தப் பதவிக்குக் காத்திருக்கிறார்கள்.

 

திருப்பத்தூர் மாவட்ட நிலவரம்

 

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது இதில் 3 தொகுதிகளை அ.தி.மு.க வென்றது. இந்த மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்க விரும்புகிறது தி.மு.க. தலைமை. மாவட்டம் பிரிக்கப்படும்போது, இந்த பகுதியில் வலிமையாகவுள்ள வெள்ளாளக் கவுண்டர் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னணியில் நிற்கின்றனர்.

 

அ.தி.மு.க தலைமையும் மாவட்டம் பிரிப்பு பற்றி யோசித்தபோது, அமைச்சர் வீரமணி, அதெல்லாம் பிரிக்கக்கூடாது என முட்டுக்கட்டை போட்டதால் திருப்பத்தூர் மாவட்டப் பிரிப்பு என்பது அங்கே தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க பிரமுகர்கள் ஆதங்கமாய்.

 

கட்சி வளர்ச்சியைக் கருதி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரிக்க தி.மு.க, அ.தி.மு.க தலைமைகள் நினைக்கின்றன. ஆனால் கட்சிகளில் வலிமையாக இருக்கும் புள்ளிகள் அதனை விரும்பவில்லை. அந்த வலிமையான கரங்களை மீறி மாவட்டங்கள் பிரிக்கப்படுமா?, பிரிக்கப்படாதா? என இரு கட்சித் தொண்டர்களும் தங்களுக்குள் இப்போது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.