Skip to main content

"கட்சியில உன்னை ஸ்டேட் லெவல்ல பெரிய ஆளாக்குறேன்..!" பா.ஜ.க.வில் கிளம்பிய பாலியல் பூதம்! 

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
 Villupuram District bjp

 

""என்னங்க என்னை ஏமாத்தப் பாக்குறீங்களா?''’’

 

""ஏய் அப்படியெல்லாம் தப்பா நினைக்காத, உன்னைவிட்டுட்டு இன்னொருத்திய தொடக்கூடமாட்டேன். கட்சியில உன்னை ஸ்டேட் லெவல்ல பெரிய ஆளாக்குறேன்''’’

 

""ஏங்க அஞ்சு லட்ச ரூபா உங்ககிட்ட கொடுத்திருக்கேன், ஞாபகம் வச்சுக்கங்க''’’

 

""என்ன நீ ஒரு மாதிரியா பேசுற. ஒழுங்குமரியாதையா இரு. இல்லேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிருவேன்''’’

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வாட்ஸ்-அப் பேச்சு ரிலீசாகி விழுப்புரம் மாவட்டம் பா.ஜ.க.வில் வில்லங்கத்தை ஆரம்பித்தது. தன்னையும், அஞ்சு லட்சத்தையும் கொடுத்து ஏமாந்ததாகச் சொல்லப்படுபவர் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. மகளிரணி அமைப்பாளர் காயத்ரி. ஏமாற்றியதாகச் சொல்லப்படுபவர் அதே மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவராக இருக்கும் கலிவரதன்.

 

ஆடியோ ரிலீஸாகியும் தமிழக பா.ஜ.க மேலிடம் கலிவரதன் மீது எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை, தான் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் கடந்த 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்த கலிவரதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துவிட்டுத் திரும்பினார் காயத்ரி.

 

காயத்ரியை நாம் சந்தித்து நடந்தது குறித்துக் கேட்டோம். ""என்னோட தாய்மாமா முருகன் மூலமாகத்தான் கலிவரதன் எங்க குடும்பத்துக்கு அறிமுகமானார். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்துபோவார். அந்தப் பழக்கத்தில் "உன்னை எங்க கட்சியில சேர்த்து மகளிரணித் தலைவியாக்குறேன். இந்தியாவிலேயே ஊழல் இல்லாத, பெண்களுக்குப் பாதுகாப்பான கட்சி பி.ஜே.பி.தான். அதனால எதையும் யோசிக்காதே, கட்சில சேரு உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு'ன்னு சொன்னார்.

 

எனக்கு குடும்பம், பிள்ளைகள் இருப்பதால் கட்சியில் சேரத் தயங்கிய என்னை வற்புறுத்தி கட்சியில் சேர்த்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பதவியும் வாங்கிக் கொடுத்தார். பி.ஜே.பி.தான் நல்ல கட்சியா இருக்கும்போலன்னு நினைத்து கட்சி வேலைகளைப் பார்த்தேன். சில மாதங்கள் கழித்து, உன்னை விழுப்புரம் மாவட்டச் செயலாளராக்குறேன். அதுக்காக சிலருக்குப் பணம் கொடுக்கணும். அஞ்சு லட்சம் கொடுத்தா போதும், அப்புறம் உன்னுடைய நிலைமை ஸ்டேட் லெவல்தான்' என்றார் கலிவரதன்.

 

நானும் மூணு தவணையா அஞ்சுலட்ச ரூபாயக் கொடுத்தேன். ரூவா கொடுத்து சில நாட்களில் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜீவ்காந்தி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தார் எனது கணவர். அங்கே வந்த கலிவரதன், "உன்னை பிரைவேட் ஆஸ்பத்திரியில சேர்த்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன்'னு கூட்டிடுப் போயி லாட்ஜ்ல ரூம்போட்டு என்னை பலவந்தப்படுத்திச் சீரழித்துவிட்டார். அதை வீடியோ எடுத்திருப்பதாகச் சொல்லி பலமுறை பலவந்தப்படுத்திவிட்டார். என்னைப்போலப் பல பெண்களைச் சீரழித்திருக்கிறார். இந்த கலிவரதன் மீது புகார் அனுப்பியும் கட்சியின் மாநிலத் தலைமை எந்த ஆக்ஷனும் எடுக்கலேன்னுதான் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தேன்''’ என்றார்.

 

""இப்போது விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க.தலைவராக இருக்கும் கலிவரதன், 2006-11-ல் முகையூர் தொகுதியின் பா.ம.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அதன்பின் சிலகாலம் தி.மு.க.வில் இருந்து பொன்முடியின் சிஷ்யராக இருந்து, பின்னர் விவசாயச் சங்கத்தில் சேர்ந்து பச்சைத் துண்டுடன் வலம் வந்து, பா.ஜ.க.வில் ஐக்கியமானவர்.

 

 Villupuram District bjp

 

 

மாநிலத் தலைவர் எல்.முருகனின் வேல் யாத்திரை வந்தபோதும், சென்னைக்கு அமித்ஷா வந்தபோதும் ஆயிரக்கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆச்சரியப்பட வைத்தவர். வரும் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியை கலிவரதன் குறிவைத்திருக்கும் நிலையில் தான், அவருடன் விரும்பி நெருக்கமான காயத்ரி என்ற அம்பு புறப்பட்டு வந்திருக்கிறது''’என்கிறார்கள் கலிவரதனின் இப்போதைய ஆதரவாளர்கள்.

 

காயத்ரியின் குற்றச் சாட்டு குறித்து கலிவரதனிடம் கேட்ட போது, ""எல்லாமே அபாண்டமானது. எனக்கு அஞ்சு லட்ச ரூபா கொடுக்கும் அளவுக்கு காயத்ரியிடம் பண வசதி இல்லை. நான்தான் அந்த குடும்பத்திற்கு ரெண்டரை லட்சம் கடன் வாங்கிக் கொடுத்திருக்கேன். அதைத் திருப்பிக் கேட்டவுடன் இந்த மாதிரி புகார் கிளப்புகிறார் காயத்ரி. அவரைப் பற்றி கட்சி மேலிடம் தீரவிசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான் கட்சியைவிட்டு நீக்கப்பட்டிருக்கிறார். என்னைப் பற்றி இந்த மாவட்ட மக்களுக்கு நன்றாகவே தெரியும்'' என்றார்.

 

வடநாட்டில் பா.ஜ.க எம்.எல்.ஏ., எம்.பி.க்களாக இருக்கும் பலர் மீதும், அரசியல் பின்னணிகொண்ட சாமியார்கள் மீதும் இது போன்ற பாலியல் பலவந்தக் குற்றச்சாட்டு சர்வ சாதாரணம். அந்த கலாச்சாரத்தை தமிழகத்திலும் பரப்பத் தொடங்கியிருக்கிறதோ பா.ஜ.க.?