Skip to main content

ஊழல் பற்றி கோட்டையில் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி தயாரா...? - ஆ.ராசா ஆவேசம்!

Published on 04/12/2020 | Edited on 07/12/2020

 

ghj

 

முதல்வர் பல்வேறு குற்றச்சாட்டுகளை நேற்று (03.12.2020) காலையில் சேலத்தில் நடைபெற்ற விழாவில் கூறியிருந்தார். அதற்கு, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, நேற்று மாலை பதில் அளித்துள்ளார். காட்டமான முறையில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,

 

"சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், தி.மு.க மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தால், யாருக்கு என்ன இழப்பு என்று கேட்டுள்ளார். வீராணம் திட்டத்தில் துவங்கி, சர்க்காரியா கமிஷன், 2ஜி என தி.மு.க இங்கெல்லாம் ஊழல் செய்திருப்பதாகக் கூறியும், அ.தி.மு.க அம்மா ஆட்சியில் அதுபோன்று நடைபெற வில்லை என்றும், அம்மா ஒரு புனிதவதி என்றும், ஊழல் வழக்கில் அவர் எங்கே தண்டிக்கப்பட்டார் என்பதைப் போலவும் இன்று அவர் தொலைக்காட்சிகளில் நீண்ட பேட்டியை தந்திருக்கிறார். எனவே, அதற்கெல்லாம் தற்போது தி.மு.க பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே திமுக தலைவர், ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி சில விளக்கங்களை இங்கு தர வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. 

 

திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவது என்பது இயற்கைதான். அதற்குப் பதில் சொல்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் மீது வழக்கு வருவது என்பதும் இயற்கையான ஒன்று. எம்.ஜி.ஆர் ஆட்சியிலோ அல்லது இந்திரா காந்தி அமைத்த சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட எந்த ஆட்சியிலும் தி.மு.க தலைவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர்கள் தண்டனை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால், இன்றைய முதல்வர் இருக்கின்ற பொறுப்பு வேண்டுமானால் ஒரு விபத்துப் பொறுப்பாக இருக்கலாம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய தகுதியும் அவருக்கு இல்லை. அந்தக் கட்சியில் ஏற்பட்ட ஒரு பிளவால் சசிகலாவின் காலை தொட்டு அவர் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். 


உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதிமுகவின் அமைச்சர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து இதனை அம்மா ஆட்சி என்கிறார்கள். உள்ளபடியே தமிழ் ரத்தம் ஊறக்கூடிய மனிதனாக இருந்தால் அந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டும். ஏனென்றால் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. சசிகலாவையோ,அல்லது தண்டனை பெற்றிருக்கும் மற்ற நபர்களையோ ஜெயலலிதா கருணையின் அடிப்படையில் தன்னுடைய வைத்துக்கொள்ள வில்லை. மாறாக கொள்ளை அடிப்பதற்காகவே அதாவது சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்ததற்காகவே தன்னுடன் வைத்துகொண்டார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் இவர்கள் திமுகவை பற்றி தவறாக பேசுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை எந்த முதல்வர் மீதாவது சிபிஜ விசாரணை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட வரலாறு இருக்கிறதா? நம்முடைய முதல்வர் மீது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே, இவர் உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று அதற்கு தடை வாங்கிய வரலாறு எல்லாம் சிரிப்பாய் சிரிக்கிறதே?  இந்த லட்சணத்தில் இவர்கள் திமுகவையும், திமுக முன்னணியினர் பற்றியும் தவறாக வகையில் கேள்வி கேட்கிறார்கள். திமுகவை கேள்வி கேட்க எடப்பாடிக்கு மட்டும் அல்ல, அவர்களின் அம்மா ஜெயலலிதாவுக்கே இல்லை. இந்தியாவில் முத்லவர் பொறுப்பில் இருந்தவறே சிறைச்சாலைக்கு சென்ற வரலாறுக்கு சொந்தகாரர் உங்களின் அம்மா. நீங்கள் திமுகவுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 
 

சர்க்காரியா கமிஷன் கூறியதாக, தி.மு.க விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் சொல்லிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவருடைய இயக்கத்தில் இருப்பவர்களும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், யார் ஊழல் கட்சி, யாருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்து, எது 2ஜி, சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன என அனைத்தையும் விவாதிப்போம். உங்கள் அட்டர்னி ஜெனரல்களை எல்லாம் கூட்டுங்கள். இன்றும், இரண்டு நாளோ அல்லது மூன்று நாளோ, எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் இருக்கும் பத்திரிகையாளர்களை எல்லாம் அழையுங்கள். தி.மு.க சார்பாக, இந்த ஆ.ராசா வருகிறேன். கோட்டையிலே கூட்டத்தைக் கூட்டுங்கள். யார் ஊழல்வாதி என்று நேருக்கு நேர் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்" என்றார்.

 


 

 
News Hub