Skip to main content

அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் பி.ஜே.பி..! தேர்தலுக்காக காத்திருந்த சி.பி.ஐ.! 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

ddd

 

ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பதுபோல, தமிழகத்தையே அதிர வைத்த அந்தக் கொடூரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பரபரப்பானது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5-ந் தேதி இரவு சி.பி.ஐ., பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை தூசு தட்டி, 3 பேரைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறது .


 
யார் அந்த 3 பேர்?

 

3 பேருமே அ.தி.மு.க.காரர்கள் என்பதும், அவர்களின் பெயர் ஹெரான் பால், பாபு, அருளானந்தம் என்பதும்தான் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி மாநகர மாணவரணி துணைச் செயலாளர். பொள்ளாச்சி அ.தி.மு.க வி.ஐ.பி.யின் வலது கையாகவே சொல்லப்படும் அருளானந்தத்தை கட்சி ஆஃபிசில் வைத்தே தூக்கிக்கொண்டு போய் விசாரித்துக்கொண்டிருக்கிறது சி.பி.ஐ.

 

ஹெரானும், பாபுவும் பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் மகன்கள் இருவருக்கும் நெருக்கம். பாபு, அந்த வி.ஐ.பி.யின் மகன்களுக்கு பெண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் ஆட்களில் மிக முக்கியமானவன். சி.பி.ஐ. இந்த வழக்கை மீண்டும் தோண்டித் துருவும் என்பதையும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டியிருந்தது.

 

தேர்தல் பிரச்சாரத்தில், அ.தி.முக.வின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ள நிலையில், சி.பி.ஐ மேற்கொண்ட கைது மூவ் நடவடிக்கைகளின் பின்னணி பற்றி சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.  

 

“பொள்ளாச்சி வழக்கில் நக்கீரனின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரி என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார், ஆச்சிபட்டி மணிகண்டன்... என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். இப்போது விசாரணைக்கு கொண்டு வந்திருக்கும் ஹெரான் பால் உள்ளிட்ட ரெண்டு பேரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய நபர்களே.

 

இந்த ஹெரான் பால், பெண்களிடம் சைக்கோ போல நடந்து கொள்வான். பெல்ட்டால் அடிக்கும் கொடூரத்தை ரசிக்கும் மனப்பான்மை உடையவன்... என நீங்கள் சொல்லியதை வைத்தே நாங்கள் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தோம். தற்போதைய அரசியல் சூழல் - முதல்வர் வேட்பாளர் - சீட் பங்கீடு எனப் பல கணக்குகள் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியில் உள்ளன. பொள்ளாச்சி பவர் புள்ளியான அ.தி.மு.க. வி.ஐ.பியின் வாரிசுகளுடன் தொடர்புடையவர்களை நெருங்கியிருக்கிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வாரிசுகளையும் நெருக்குவோம்.

 

அரசியல் காரணங்களைத் தாண்டி, எங்கள் விசாரணையில் புதிய கோணங்களும் கிடைத்துள்ளன. வழக்கமாக திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய் அழிச்சாட்டியம் செய்வார்கள். ஆனால் இப்போது எங்கள் விசாரணையில் இரண்டு பெண்களைக் கண்டறிந்து விசாரித்தோம். அவர்கள் இருவரையும் சபரிராஜன் தன் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறான் .

 

அங்கே வைத்து வல்லுறவு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதில் சபரி ராஜனோடு அருளானந்தம், பாபு, ஹெரோன் பால் மூன்று பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

 

ddd

 

இந்த விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்கள் இன்னும் முக்கியமானதாக இருக்கும். அவரும் ‘நக்கீரன்’ சுட்டிக்காட்டிய ஆள்தான். திருநாவுக்கரசை விசாரிக்கும்போது, பொள்ளாச்சி நகராட்சித் தலைவராய் இருந்த கிருஷ்ணகுமார், எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். அவருக்காக நிறைய வேலைகளை செய்திருக்கிறேன் என திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இப்போது உடல் நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் திருநாவுக்கரசு.

 

அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்துள்ளோம். கிருஷ்ணகுமாரை கைது செய்து தூக்குவதன் மூலம் இன்னும் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வந்து அ.தி.மு.க.வை மிரட்டும் பெரும் பணியில் இருக்கிறது பி.ஜே.பி கவர்மெண்ட். இந்த வழக்கு கடைசிகட்ட நிலையை எட்டி விட்டதாகவே மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்களுக்கு உத்தரவும் இடப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

 

இந்த நிலையில் அருளானந்தம் நிதின் கட்கரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், பொள்ளாச்சி வி.ஐ.பி.யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், எஸ்.பி.வேலுமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வைத்து, அருளானந்தம் மேல்பட்ட மனிதர்களோடு நல்ல பழக்கத்தில் இருந்திருக்கிறான் என கண்டறிந்திருக்கிறது சி.பி.ஐ.

 

பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் வாரிசுகளை சி.பி.ஐ. இன்னும் நெருங்காத நிலையில், புதுப்புது ஆதாரங்கள் கிடைத்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த வழக்கை, அரசியல் சூழலைப் பொறுத்து எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம் என்கிறார்கள் நிலவரம் அறிந்த அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும்.