தான் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் நாட்டை சுரண்டல் ஆட்சி செய்யும் குடும்பத்தாரிடமிருந்து மீட்க வேண்டும் என தன் எழுத்துக்கள் வழியாகவும், உடல் உழைப்பு வழியாகவும் போராடியவர் மாக்சிம் கார்க்கி. அவர் எழுதிய எழுத்துக்களை ஒற்றித்தான் இன்றைய பல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.
ரஷ்யாவில் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி. அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர். 5 வயதில் தந்தை இறந்துவிட்டார். தாய் உயிருடன் இருந்தபோதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினா அரவணைப்பில் வளர்ந்தார்.
குடும்பத்தில் வறுமை, இதனால் பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்திவிட்டார். 8 வயதாகும்போது வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக்கொண்டார்.
1892ல் இவர் முதல் சிறுகதை 'மகர் சுத்ரா' என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார். அது வெளிவந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத்துவங்கினார். 1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார். இவரது எழுத்துக்கள் அனைத்தும் பாமர மக்கள் அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்பது போலவே இருக்கும். இதனால் இவரது எழுத்துக்கள் தணிக்கைக்கு உள்ளாகின. அதோடு கார்க்கி எழுதிய நாடகங்கள், புதினங்கள், கதைகள் வெளிவரும்போதுயெல்லாம் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவது வாடிக்கையானது.
கார்க்கி - ஸ்டாலின்
1906ல் 'மதர்' என்கிற பெயரில் இவரது நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சிக்கும் – அதை எதிர்க்கும் ஒரு புரட்சியாள இளைஞனுக்குமான போராட்டத்தில் அந்த இளைஞனின் தாயின் பங்கு குறித்ததே தாய் நாவலின் மையம். ஆட்சியை எதிர்த்து போராடும் தன் இளவயது மகனை நினைத்து அழும் தாய், அவனை தடுக்கிறாள். அந்த மகன் அதை மீறி நாடே முக்கியம் என புரட்சிக்கருத்துக்களை தொழிலாளர்கள் மத்தியில் பேசுகிறான். அவனது கருத்துக்களை படிப்படியாக உள்வாங்கும் அந்த புரட்சிக்கர இளைஞனின் தாய், மகனின் போராட்டத்துக்கு படிப்படியாக உதவி அவளும் ஓரு புரட்சிவாதியாக மாறியதே நாவலில் விவரிக்கப்பட்டுயிருக்கும். இது ரஷ்யாவில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் உலகம் முழுக்கவே இந்த நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நாவலே உலக அளவில் கார்க்கியை பிரபலமடைய வைத்தது.
மாமேதை லெனினோடு சேர்ந்து ரஷ்ய புரட்சிக்கு நிதி திரட்ட உலகின் பல நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அதோடு, இவர் சம்பாதித்ததை நன்கொடையாக ரஷ்ய புரட்சிக்கர தொழிலாளர் இயக்கத்துக்கு வழங்கினார். புரட்சி வெற்றி பெற்றபோது ஆனந்தம் அடைந்தார். தனது கருத்தை யாருக்காகவும், எதற்காகவும் வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார். லெனின் முன்பே அவரது தவறுகளை கூறுவார். ஆனாலும் அவர்களது நெருங்கிய நட்பு என்றும் உடைந்ததில்லை. பென்சிலால் மட்டும்மே கார்க்கி தனது எழுத்துக்களை எழுதுவார். அதேபோல் சிறு வயது முதலே ஒரு குறிப்பேட்டை தன்னுடன் வைத்திருப்பார், தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் அதில் குறித்துவைத்துக்கொள்வது அவரது வாடிக்கை.
வறுமையால் சிறு வயதில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று அது தோல்வியில் முடிந்தது. காயத்தோடு உயிர் பிழைத்தார். அதன்பின் சுடுகாட்டில் வேலை பார்த்தார். இதுதான் அவரை எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் மானப்பாங்கை உருவாக்கி தந்தது. தான் வளர்ந்து சமூகத்தில் ஒரு இடத்தை அடைந்தபின், சாலையோரம் உள்ள அனாதை பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு வழங்குவது, கிருஸ்துமஸ் உட்பட திருவிழா நாட்களில் அவர்களுக்கு புத்தாடை வாங்கி தருவது போன்றவற்றை செய்து தந்தார்.
அதோடு, வெளியே செல்லும்போது தனது கோட் பாக்கெட்டில் சாக்லெட் உட்பட இனிப்புகளை எடுத்துச்செல்வார். வழியில் தென்படும் அனாதை சிறுவர்களுக்கு அதை வழங்கி அவர்கள் மகிழ்வோடு உண்பதை காண்டுவிட்டு செல்வார். தான் அநாதையாக சாலையில் திரிந்த போது தனக்கு கிடைக்காததை தற்போது தன்னால் முடிந்த அளவுக்கு அதே நிலையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கிவந்தார்.
மனைவி பெஷ்கோவா. இந்த தம்பதியரின் மகன் தான் இலக்கியத்தில் கார்க்கிக்கு எல்லாமுமாக இருந்தார். மகன் பல மொழி அறிந்திருந்தது, அவர் மொழி இலக்கியத்தை, கதைகளை, கட்டுரைகளை மொழி பெயர்த்து தந்தைக்கு செல்ல அவர் அதை உள்வாக்கிக்கொண்டார். அந்த மகன் இளம் வயதிலேயே இறந்தது கார்க்கிக்கு பெரும் துயரத்தை வழங்கியது.
1936 ஜீன் 16ந்தேதி மறைந்தார். அவர் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர் இறந்தபின்பே புத்தகமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.