Skip to main content

போர் என்று வந்தால் பத்து பேர் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய ஜெயலலிதாவை சீமான் எதிர்த்தாரா..? - கே.எஸ். அழகிரி கேள்வி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

hg

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடர்பாக சில கருத்துக்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறிய நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர். பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் நாம் முன்வைத்தோம். ‘உங்களுக்கும் சீமானுக்கும் என்னதான் பிரச்சனை’ என்ற கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு,

 

"ஒன்றும் பிரச்சனையில்லை. ஒவ்வொருவருக்கும் அரசியல் ரீதியாக வேறுவேறு கொள்கைகள் இருக்கும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஒருவரை அவதூறாக, ஆபாசமாகப் பேசுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எங்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது, அதேபோல் திமுக, சீமான், பொதுவுடைமை கட்சிகளுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்னவென்றால், வடக்கு தெற்கு மாகாணங்களை இணைத்து தமிழரை முதல்வராக கொண்டுவர வேண்டும் என்று விருப்பப்பட்டோம். ஒருமுறை கலைஞரிடம் கூட இலங்கை விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு, இந்திய அரசின் நிலைப்பாடு என்னவோ அதுதான் எங்களின் நிலைபாடு என்று தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அங்கே இருக்கிற மக்களுக்கு யார் நன்மை செய்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். 

 

இவர்கள் எல்லாம் வாயால் பேசிக்கொண்டே இருப்பவர்கள்தான். இலங்கையில் இருக்கும் மக்களுக்கு இவர்களால் ஏதேனும் ஒரு நன்மை நடைபெற்றது என்று நீங்கள் யாராவது கூற முடியுமா? நாங்கள் ஒருபோதும் இலங்கையைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்போம் என்று கூறவில்லை. சீமான் அவ்வாறு தொடர்ந்து கூறிவருகிறார். அதுபற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவருடைய கட்சி கொள்கைகளில் ஒன்றாக கூட இருக்கலாம். நாம் அதுபற்றி விமர்சிக்க தயாரில்லை. ஆனால் அவ்வாறு கூறாதவர்களை இவர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதை எதிர்த்துத்தான் குரல் கொடுக்கிறோமே தவிர தனிப்பட்ட விதத்தில் எங்களுக்கும் சீமானுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. இலங்கையில் நாங்கள் போர் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால், இன்னொரு நாட்டில் போர் நடக்கின்றபோது அதில் எங்களால் முடிந்த அளவுக்குப் போரை நிறுத்த முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. ஜெயலலிதா கூட, போர் என்று வந்துவிட்டால் பத்து பேர் சாகத்தான் செய்வார்கள். அதைக் கொலை என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது என்றார். இன்றைக்கு குரல் கொடுக்கும் சீமான், அன்றைக்கு ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கவில்லை" என்றார்.