சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக் கடைகள் திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது எடப்பாடி அரசு. தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
சித்தரஞ்சன் சாலை வீட்டின் முன்பு தனது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் கண்டன முழக்கங்களை எழுப்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், காங்கிரஸ் பிரமுகர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் போராட்டத்தை நடத்தினர். இவற்றை முழுமையாகப் படம் பிடித்து முதல்வர் எடப்பாடிக்கு அனுப்பி வைத்தபடி இருந்தது உளவுத்துறை!
நம்மிடம் பேசிய திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, "கரோனா பரவுதலைத் தடுக்க சமூக விலகல்தான் மிக முக்கியம் என வலியுறுத்துகிறார் முதல்வர் எடப்பாடி. அப்படி வலியுறுத்துபவர் எப்படி மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்தார்? மது போதையில் தன் நிலை அறியாத நபர், எப்படித் தனி மனித விலகலைக் கடைப்பிடிப்பான்? மக்களின் பாதுக்காப்பிற்காகப் பணியாற்ற வேண்டிய காவல்துறையினரை, குடிகாரர்களுக்காகப் பணியாற்ற வைப்பது வெட்கக் கேடானது. எடப்பாடி அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்கிறார் மிக ஆவேசமாக.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியான பா.ம.க.வும் டாஸ்மாக் திறப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. பா.ம.க. எம்.பி. டாக்டர் அன்புமணி, "ஏழைகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை எனும் நிலையில், மதுக் கடைகளைத் திறந்தால் மனைவியின் தாலியைப் பறித்து அடகு வைப்பது உள்ளிட்ட குற்றங்கள்தான் பெருகும். தமிழக அரசின் இத்தகைய முடிவு, தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை'' என்கிறார்.
மதுக் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டதுமே அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டியது எடப்பாடி அரசு. இதனையடுத்து, அரசு கடைப்பிடிக்கும் நிபந்தனைகளுடன் மேலும் சில நிபந்தனைகளை விதித்து கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது உயர்நீதிமன்றம்.
எடப்பாடி உற்சகாமானார். இத்தனை நெருக்கடிகளில் டாஸ்மாக்கைத் திறக்க வேண்டிய அவசியம் ஏன் எனத் தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மிக அதிகமான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் தொடர்ந்து சிக்கிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அரசின் செலவினங்களில் 40 சதவீதம் சமாளிப்பது டாஸ்மாக் வருவாய்தான். கடந்த நிதியாண்டில் மட்டும் 30,000 கோடியைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது டாஸ்மாக்.
தமிழகத்தின் நிதியாதாரங்களில் 46 சதவீதம் நேரடி வரிவிதிப்பில் கிடைக்கும். மீதியுள்ள 54 சதவீதம் மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. நேரடி வரி வருவாயைக் கணக்கிட் டால், தமிழக அரசுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுப்பது டாஸ்மாக், வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத் துறை, ஜி.எஸ்.டி., பெட்ரோல்- டீசல் மீதான வரி உள்ளிட்டவைகள்தான் மிக முக்கியமானவை. ஒரு மாதத்தில் 10,000 கோடி வருவாய்க் கிடைத்துக்கொண்டிருந்த நிலையில், ஊரடங்கினால் 10 சதவீத வருவாய்கூட கிடைக்கவில்லை.
தலைமைச்செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருவரும் கடந்த வாரம் எடப்பாடியைச் சந்தித்தனர். மத்திய அரசிடமிருந்து பேரிடர் கால நிதி, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ஆகியவை வலியுறுத்தியும் வராத நிலையில், அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் போடுவதுகூட கடினமாகி விடும். ஓய்வூதியதாரர்களுக்கான தொகை, வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கான நிவாரணம் என அனைத்தும் முடங்கும் ஆபத்து இருக்கிறது என வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதனைச் சமாளிக்க, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியும் உள்ளிட்ட அமைப்புகளில் கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடந்த நிலையில்தான், மதுபானக்கடைகளைத் திறக்க மத்திய அரசு க்ரீன் சிக்னல் தர, பல மாநிலங்களும் திறந்து வைக்க, அண்டை மாநிலங்களில் குவிந்த தமிழக குடிமகன்கள் அரசுக்கு காரணம் காட்ட எளிதாகிவிட்டனர்.
சண்முகம், கிருஷ்ணன் மற்றும் உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகளோடு அவசர ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அதில்தான் தமிழகத்திலும் மதுக் கடைகளைத் திறப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கைகளை டி.ஜி.பி. திரிபாதி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் எடப்பாடி. வயதுவாரியாக நேரக் கட்டுப்பாடும் முடிவு செய்யப்பட்டது.
கவர்னரிடமிருந்து அழைப்பு வர, அவருடனான சந்திப்பிலும் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டினார் சண்முகம். ஆனால், மதுக் கடைகள் திறப்பதில் கவர்னருக்கு உடன்பாடில்லை என்பதனால் சென்னையைத் தவிர்த்தனர் அதிகாரிகள். ஆக, டாஸ்மாக் திறப்பின் பின்னணி இதுதான். கரோனாவைத் தடுப்பதில் அரசு தள்ளாடினாலும், மதுக் கடைகளைத் திறக்கும் முடிவில் தெளிவாக இருந்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் நிதித்துறையினர். இதற்கிடையே, மதுபான தொழிலதிபர்களில் சிலர் சமீபத்தில் எடப்பாடியிடம் மிக ரகசியமாக விவாதித்துள்ளனர் என்கிற தகவல் உயரதிகாரிகளிடம் அலையடிக்கிறது.