Skip to main content

 நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா ?

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரிக்கும்போது அவர்களுக்கு "நோட்டா' மீதான மோகம் அதிகரிக்கிறது. ஆனால், "நோட்டாவுக்கு அளிக்கும் ஓட்டு பயனற்றதா?' என்கிற கேள்வி வாக்காளர்களிடமும், நேர்மையான தேர்தலுக்காகப் போராடும் சமூக அமைப்புகளிடமும் எதிரொலிக்கின்றன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் (1961) செக்ஷன் 49(ஓ)-வின்படி, எந்த ஒரு வேட்பாளருக்கும் "வாக்களிக்க விருப்பமில்லை' என தெரிவிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, படிவம் 17-ஏ மூலம் கையெழுத்திட்டு வாக்காளர்கள் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். ஆனால், இப்படியொரு நடைமுறை இருப்பது வெகுஜன மக்களுக்கு  நீண்டகாலம் தெரியாமல் இருக்கிறது. 

 

nota



இந்த நிலையில், 49(ஓ) பிரிவு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ""யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா (சஞபஆ - சர்ய்  ஞச்  பட்ங் ஆக்ஷர்ஸ்ங் ) பதிவுக்கான பட்டனை இணைக்க வேண்டும்'' என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2013-ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனையடுத்து 2013-க்கு பிறகு நடந்த அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும், 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நோட்டாவை அறிமுகப்படுத்தியதுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான இடத்தையும் அளித்தது தேர்தல் ஆணையம். 

 

election commision



2013-க்கு பிறகு நாடுமுழுவதும் நடந்த தேர்தல்களை கணக்கிடும்போது சராசரியாக 1 சதவீத வாக்கு  நோட்டாவுக்கு விழுந்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டுமே பதிவான ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெரியளவிளான விவாதத்தை உருவாக்கியது. நோட்டா வாக்குகள் ஏற்படுத்திய அந்த தாக்கம், தற்கால அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை  பிரதிபலிப்பதாகவே இருந்தன.

 

nota

 

இந்தச் சூழலில், நோட்டா குறித்த பொதுநல வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2017-ல் நடந்தபோது, "35 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்  நோட்டாவுக்கு பதிவானால், போட்டியிடும் வேட்பாளர்கள் எவர்மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக கருதவேண்டும். அதனால் அந்த தொகுதியின் முடிவுகளை செல்லாது என அறிவிப்பதுடன் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்'' என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுக்கள் குவிந்தபடி இருக்கின்றன. இதற்கு காரணம், வெகுஜன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தேர்தல் ஆணையம், அதன் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால்தான். 

இதனால், "நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா?' என்கிற கேள்வி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பரவலாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. நோட்டா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும்’இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.செல்வராஜிடம் இது குறித்து விவாதித்தபோது, ""மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள ஒவ்வொரு சின்னத்துக்கும் பின்னால் அரசியல் கட்சியைச் சார்ந்த ஒரு நபரோ அல்லது தனி நபரோ இருப்பர். நோட்டாவுக்குப் பின்னால் எந்தவொரு தனி நபரும் இல்லை என்பதால் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயம் என சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல.  தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சின்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அப்படியானால் மற்ற சின்னங்கள் பெற்ற குறைந்த வாக்குகள் விரயமானவை என்றா சொல்லப்படுகிறது... இல்லையே! "வெற்றிபெற்ற சின்னத்தைத் தவிர மற்ற சின்னங்களுக்கு விழுந்த வாக்குகள் விரயம் என சொன்னால், நோட்டா வாக்குகளையும் விரயம் என சொல்லலாம். 

நோட்டாவுக்குப் பின்னால் தனி நபர் யாரும் இல்லை என்பதற்காக நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை மதிப்பிழக்க செய்யக் கூடாது. ஏனெனில், வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் நடைமுறை விதிகளின் பிரிவு 49(ஓ)-ன் படியும்  வாக்கு எந்திரத்தில் நோட்டாவை ஒரு சின்னமாக உருவாக்கியது தேர்தல் ஆணையம். நோட்டா சின்னம் அதிக வாக்குகளைப் பெற்றால் அதனை வெற்றிபெற்றதாக அறிவிப்பதுதான் சட்டபூர்வமானது. 

இதிலுள்ள ஒரே சிக்கல், நோட்டாவுக்கு பின்னால் உரிமைக் கோரும் தனிநபர் யாரும் இல்லை என்பதுதான். தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.  ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவர் மீதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை இழக்கும்போது அம்மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளே இல்லாத நோட்டாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால்தான், நேர்மையான வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் முன்வரும். அதனால், நோட்டா உருவாவதற்கு காரணமாக இருந்த உச்சநீதிமன்றம், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு சட்ட அங்கீகாரத்தைத் தர முயற்சிக்க வேண்டும். அதற்கான தீர்வினைக் கண்டறிவதும் உச்சநீதிமன்றத்தின் கடமை.. ஆக, நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதல்ல; மாற்றத்திற்கான ஒரு புரட்சி'' ’ என்கிறார் மிக அழுத்தமாக.