மீசை கவிஞனின் ஆசை புகைப்படங்கள்...
பாரதியின் நினைவுகள்!
இன்றும் இளைஞர்களுக்கு மனதில் கோபம் வந்தால் 'ரௌத்திரம் பழகு' ,காதல் வந்தால் 'கண்ணம்மா என் காதலி', கண் முன் அநியாயம் நடந்தால் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று அனைத்து சூழ்நிலைகளிலும் பாரதி வாழ்ந்துகொண்டிருக்கிறார். தான் வாழ்ந்த முப்பத்தியேழு ஆண்டுகளுக்குள் நூற்றாண்டுகளை தாண்டி வாழும் வரிகளை விதைத்த மீசை கவிஞரின் சில புகைப்படங்கள் இங்கே...

பாரதியாரின் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலினால் 1917 ஆம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. இதில் பாரதியின் தோற்றம் தாடியுடன் காணப்படும். அவரது புதுவை நண்பர்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது. தன் காதலையெல்லாம் கண்ணம்மாவுக்கு காணிக்கையாக்கிய பாரதி செல்லாம்மாவுடன் நின்ற புகைப்படம் இது.

அதே நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் இது. இதில் இடதுபுறத்தில் அமர்ந்திருப்பது பாரதியின் இளையமகள் சகுந்தலா, வலதுபுறத்தில் அவரது மனைவி செல்லம்மாள். நிற்பவர்கள் பாரதியின் மூத்தமகள் தங்கம்மா பாரதி மற்றும் அவரது இரு நண்பர்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது அந்த காலத்தில் பெண்கள், ஆண்களின் முன் நின்று பேசுவதே குற்றம் என்றெண்ணிய சமூகத்திற்கு மத்தியில், தன் மனைவியை அமரவைத்து பாரதி நின்று கொண்டிருந்தது அர்த்தமுள்ளது.

1919 ஆம் ஆண்டு விக்டோரியா ஹாலில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் முண்டாசு கட்டி மீசையை முறுக்கி இருக்கும் இந்த புகைப்படம் பாரதியின் அசல் புகைப்படங்களின் வரிசையில் ஆறாவது புகைப்படமாகும். இந்த புகைப்படம் சிறிது காலத்துக்கு முன்பு டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1920 ஆண்டு பாரதி காரைக்குடிக்கு இரண்டாவது முறை இந்து மதபிமான சங்கத்துக்கு வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்த புகைப்படத்தை எடுக்கும்பொழுது அவர் கையில் இருந்த கம்பை தனியே வைக்குமாறு புகைப்படம் எடுப்பவர் கூறியுள்ளார். ஆனால் அதனை மறுத்து தன்னை ஒரு அரசனாகவும் கம்பை செங்கோலாகவும் நினைத்து இந்த புகைப்படத்தை எடுக்க வைத்துள்ளார் பாரதி. கவிராஜன் என்றும் புவிராஜனாகவே வாழ்ந்தார்.

இந்த புகைப்படம் 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. தற்போது வரை மிகவும் பிரபலமான இந்த புகைப்படம், பாரதிதாசனுக்காக சென்னையில் எடுத்துக்கொண்டது. பார்ப்பதற்கு மிகவும் இயற்கையாகவும் பாரதியின் கம்பீரத்தையும் வெளிக்காட்டும் புகைப்படமாக உள்ளது . இன்று சிலர் பாரதியையும் பாரதிதாசனையும் போட்டியாளர்களாக்கி விடுவார்கள் போல...
ஹரிஹரசுதன்