நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், காமராஜரின் தீவிர ஆதரவாளரான சற்குணம் என்பவர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருப்பார்கள். அதனால்தான் தங்களது ரசிகர்களை எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அப்படியே அரசியலுக்கும் மாற்றினார்கள். எங்கள் ஊரில் சற்குணம் என்று ஒருவர் இருந்தார். அவர் காமராஜரின் தீவிரமான ரசிகர்; அவரது ஆதரவாளரும்கூட. அவர், ஊரில் ஒரு சொந்த வீடு கட்டினார். அந்த வீட்டை காமராஜர்தான் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். காமராஜருக்கு இது மாதிரியான செண்டிமெண்ட் விஷயங்களெல்லாம் பிடிக்காது. சற்குணம் காமராஜரிடம் வந்து கேட்க, இதற்காக நான் பட்டுக்கோட்டை வரணுமா, எனக்கு வேலை இருக்கு... நான் வரல என்று கூறிவிட்டார். அப்படியென்றால் நான் வீட்டைத் திறக்கமாட்டேன் என்று கூறி சற்குணம் வீட்டைப் பூட்டிவிட்டார். அப்படியே 7 மாதங்கள் கடந்துவிட்டன.
காமராஜர் ஒரு வேலை விஷயமாகப் பட்டுக்கோட்டைக்கு வருகிறார். வேலையை முடித்துவிட்டு அணைக்காடுல சற்குணம்னு ஒருத்தர் இருக்கார்ல... அவர் வீட்டுக்கு வண்டிய விடுங்கணே என்கிறார் காமராஜர். கார் சற்குணம் வீட்டை வந்தடைகிறது. வீட்டில் சற்குணம் இல்லை. அவர் எங்கோ வெளியே சென்றிருப்பதாக அருகில் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவரை அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லிவிட்டு 45 நிமிடங்கள் அங்கேயே காமராஜர் காத்திருந்தாராம். காமராஜர் வந்திருக்கிற விஷயம் தெரிந்ததும் 'ஐயா...' என்று ஓடிவந்து அவர் காலில் விழுந்துள்ளார் சற்குணம். பின், காமராஜர் அந்த வீட்டை திறந்து வைக்க, வீட்டிற்குள் அழைத்துச் சென்று காமராஜரை அமரவைத்துள்ளார் சற்குணம்.
"என்னயா சந்தோசமா... இதுக்காகத்தான் என்னை இழுத்தடிச்சியா.. இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன், அப்படியே உன் வீட்டை திறந்து வச்சுட்டேன்... இப்ப திருப்தியா" எனக் கேட்டுள்ளார் காமராஜர். சற்குணத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம். பின், காமராஜர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
அதன் பிறகு, காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் நான் சற்குணத்தைப் பார்த்தேன். காமராஜரின் உடலைச் சுமந்து சென்று கொண்டிருந்த லாரிக்கு முன்னால் அழுதுகொண்டே சற்குணம் சென்று கொண்டிருந்தார்".